வெள்ளிமணி

தசரத மைந்தனின் தோஷம் நீக்கிய பாப ஹர தசமி!

DIN

 தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ராமேஸ்வரம், தேசிய உணர்வையும் ஒருமைப்பாட்டினையும் வளர்க்கிறது. காசியைப் போன்று விளங்குவதால் இதைக் "கர்மபூமி' எனவும் கூறுவர். மாநிலம், மொழி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் கூடி வழிபடும் திருத்தலம் இது!
 இத்தலம் ராமர் வழிபட்ட தலம் என்பதால் "ராமேச்சுரம்' என வழங்கப்படுகிறது. (ராம + ஈச்சுரம் = ராமேச்சுரம்), ஈச்சுரம் என்றால் கோயில் என்று பொருள்). பாரதத்தில் உள்ள 12 ஜோதிர் விங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
 "கந்தமாதனப் பர்வதம்' என்ற புராணப் பெயருடன் திகழும் இத்தல மகிமையை விவரிக்க இக்கட்டுரையில் இடம் போதாது. எனினும், ஓர் ஆனி மாதத்தில் மூலவர் ராமநாதர் சிவலிங்கமாகப் பிரதிஷ்டையான புராண வரலாற்றினையாவது அறிவோம்:
 ராவண சம்ஹாரம் முடிந்து, விபீடனனுக்கு முடி சூட்டிய பிறகு, ராமபிரான் தம்பி லட்சுமணன், சீதாப் பிராட்டி, அனுமன் சகிதமாக இலங்கையிலிருந்து அயோத்தி திரும்புங்கால் முதலில் இத்தலம் வந்து சேர்ந்தார்கள்.
 அவ்வமயம் அங்கு குழுமியிருந்த அகத்தியர் மற்றும் முனிவர்களிடம் ராமபிரான், ராவண வதத்தால் தனக்கு ஏற்பட்ட பாவம் (தோஷம்) விலக வழி சொல்லுமாறு கேட்கிறார். மகரிஷிகளும் அவ்விடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தால் பரிகாரம் கிடைக்கும் என்றும், அதனை விரைந்து செய்யுமாறும் எடுத்துரைத்து, அதற்கான நேரம், காலத்தையும் கணித்தனர். அதைக்கேட்ட ராமர் அனுமனை அழைத்து உடனே கயிலாயம் சென்று ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வருமாறு பணித்தார்.
 அனுமன், கயிலை சென்று தேடியும் லிங்கம் கிடைக்காமல் சிவனைத் துதித்தார். பின், அவரது ஆணையால் காசி சென்றார். அங்கிருந்து இரண்டு லிங்கங்களை (ஒன்று ராமர் பிரதிஷ்டை செய்வதற்கும், மற்றொன்று -ஆத்ம லிங்கமாக- தான் வழிபடவும்) ஏந்திக் கொண்டு அவசர அவசரமாக தென் திசை ஏகினார் அனுமன்.
 இதற்கிடையில், குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் அனுமன் திரும்பி வராததால் மகரிஷிகளின் அறிவுரைப்படி, சீதாதேவி கடல் மண்ணில் பிடித்து வைத்த சிவலிங்க உருவத்திற்கு ஆகம விதிப்படி பூஜை செய்து, அதனையே பிரதிஷ்டை செய்தார் ராமபிரான். அவ்வாறு அவர் பிரதிஷ்டை செய்த நாள் ஒரு ஆனி மாதம் சுக்ல பட்சம், தசமி திதி, ஹஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாளாகும். அந்த லிங்கத்தை அனைவரும் வழிபட பார்வதி, பரமேஸ்வரர் பிரசன்னமாகி அருள் புரிந்தனர். ராமருக்கு ஏற்பட்ட தோஷமும் விலகியது. தசரத மைந்தனின் தோஷம் நீங்கிய அந்த தசமி திதிக்கு "பாப ஹர தசமி' என்ற ஒரு சிறப்புப் பெயரும் ஏற்பட்டது.
 சீதை மணலில் வடித்த லிங்கமே (தற்போது பாறைபோல் இறுகி விட்டது) ராமநாத சுவாமி ஆவார். ஆண்டின் அனைத்து நாட்களிலும் யாத்ரீகர்கள் கொண்டு வரும் கங்கை நீர் அபிஷேகம் ராமநாத ஈஸ்வரருக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ராமர் வழிபட்ட லிங்கம் என்பதால் இச்சந்நிதியில் பெருமாள் ஆலயத்திற்கே உரிய துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 தான் கொண்டு வந்த லிங்கம் பிரதிஷ்டையாக வில்லையே என அனுமன் மிகவும் ஆதங்கம் அடைந்தார். எவ்வளவு முயற்சித்தும் மணல் லிங்கத்தை அகற்ற முடியாமல் சோர்வுற்றார். அவரை ராமர் தேற்றி, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து "அதற்கு முதலில் பூஜை செய்த பிறகுதான், மணல் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்' என அருளினார். அதன்படியே இன்றளவும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அனுமன் கொண்டு வந்த லிங்கம் "விஸ்வேஸ்வர லிங்கம்' என்ற பெயரில் ராமலிங்கேஸ்வரருக்கு வடப்புறம் பிரதிஷ்டையாகியுள்ளதை ஆலயத்தில் தரிசிக்கலாம்.
 தேவாரத்தில் அப்பர் பெருமான் "தேடி மால் செய்த கோயில் இராமேச்சுரம்' என்றும், ஞான சம்பந்தப்பெருமான் "சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்' என்றும் போற்றிப் பாடியுள்ளனர்.
 இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆண்டு தோறும் ஆனிமாதம் நடைபெறும் "ஸ்ரீ ராமலிங்கர் பிரதிஷ்டை விழா' குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் இரண்டு நாட்கள் ஆலயத்திற்கு வெளியே ராவண சம்ஹாரமும், விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் உற்சவ விக்கிரகங்களைக் கொண்டு நடைபெறும்.
 மூன்றாம் நாள் ஆலயத்திற்கு உள்ளே கருவறையில் ராமநாதர் பிரதிஷ்டை ஐதீக விழா நடைபெறும். அன்றிரவு பஞ்ச மூர்த்திகள், கோதண்டராமர், சீதை, லட்சுமணர் உற்சவ மூர்த்திகள் திருவீதிவுலா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் ராமர் கருட சேவையும் நடைபெறுவது விசேஷம்.
 இவ்வாண்டு ஜூன் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அஸ்த நட்சத்திரம், தசமி திதி கூடிய நாளாக அமைகிறது. இல்லத்தில் இருந்தபடியே ஸ்ரீராமநாத ஈஸ்வரரையும், ஸ்ரீகோதண்டராமரையும் மனதில் வரித்து நமது பாவங்கள் கரைய வேண்டி துதிப்போமாக!
 -எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT