வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் - 27: திருமீயச்சூர் திருமீயச்சூர்

11th Jun 2021 05:30 PM | - ஜி.ஏ.பிரபா

ADVERTISEMENT

"அவித்யானாம் - மந்தஸ்திமிர - மிஹிர த்வீப - நகரீ 
ஜடானாம் சைதன்ய -ஸ்தபக - மகரந்த ஸ்ருதிஜரீ'

-செளந்தர்ய லஹரி 

காசிப முனிவரின் மனைவிகள் கர்த்ரு, வினதை. இருவரும் ஈசனை பூஜித்து, அவரிடமிருந்து ஆளுக்கொரு அண்டத்தைப் பெறுகிறார்கள். "இதை ஒரு வருடம் பாதுகாத்து, பூஜித்து வந்தால் உலகம் பிரகாசிக்கும்படியான புத்திரன் பிறப்பான்' என்கிறார் ஈசன். ஒரு வருடம் கழித்து வினதையின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறக்கிறது. "அது கருடனாகி மகாவிஷ்ணுவுக்கு வாகனமாகும்' என்கிறார் ஈசன். 

அதனால் பொறாமை அடைந்த கர்த்ரு, தன் அண்டத்தைப் பிளந்து பார்க்க, தலை முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த அங்கஹீனமாய் ஒரு குழந்தை பிறந்தது. இறைவனை வேண்டி அவள் இறைஞ்ச, ஈசன் தோன்றி "இவன் உலகம் முழுதும் சுற்றி வருவான். சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுதும் பிரகாசிப்பான்' என்கிறார். அவனே அருணன். சூரியனின் தேர்ச் சாரதி.

கைலாயம் சென்று இறைவனை தரிசிக்க விரும்பிய அருணன், சூரியனிடம் அனுமதி கேட்கிறான். அப்போது சூரியன் "நீயோ அங்கஹீனன், உன்னால் ஈசனைத் தரிசிக்க முடியாது' என்று எள்ளி நகையாடினான். ஆனால் அருணன் மனம் தளராது ஈசனை நினைத்து தவமிருக்க ஆரம்பித்தான். சூரியன் அவனின் தவத்துக்கு பல இடையூறுகள் செய்கிறான்.

ADVERTISEMENT

அருணன் இன்னும் உக்கிரமாகத் தவம் செய்ய, ஈசன் அவனுக்குக் காட்சி அளித்தார். பின் சூரியனைப் பார்த்து ஈசன் கோபத்துடன், "என்னைத் தரிசனம் செய்ய விரும்பிய என் பக்தனைத் துன்புறுத்தியதால், உன் மேனி கிருஷ்ணவர்ணமாகப் போகட்டும்' என்று சாபமிட்டார். அதனால் உலகமே இருண்டு போனது.

அம்பாள் ஈசனிடம் வருகிறாள்.  "இப்படி சாபம் அளித்து விட்டீர்களே. உலகமே இருண்டு விட்டதே!' - என்று முறையிட, இறைவன் "அருணனின் தவபலத்தால் உலகம் பிரகாசமாகும்!' என்கிறார். 

தவறை உணர்ந்த சூரியன்,  இறைவனிடம் மன்னிப்பு கேட்க, அதற்கு ஈசன் "நீ எம்மை ஏழு மாத காலம் பூஜை செய்தால் உன் கருமை நிறம் நீங்கும்!' என்று கூறி சூரியனை திருமீயச்சூர் திருத்தலத்திற்கு அனுப்புகிறார்.

ஆனால், இங்கு வந்து பூசித்தும் கருமை நிறம் மாறவில்லையே என்று கலங்கிய அவன் ஈசனை நோக்கிக் கதறுகிறான்.  

அப்போது சுவாமியுடன் அம்பிகை இருக்கிறாள். தங்கள் ஏகாந்தத்தில் குறுக்கிட்ட சூரியனை கோபத்துடன் அம்பிகை சபிக்க முற்பட, ஈசன் அவளைத் தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்கிறார். அதுவே úக்ஷத்ர புரானேஸ்வரர். 

ஈசன் அம்பிகையின் மோவாயைத் திருப்பி சமாதானம் செய்வதும், ஒரு கண்ணில் கோபமும், மற்றொரு கண்ணில் நாணமுமாய் அம்பிகை நிற்கும் அற்புதமான சிலை வடிவம் இங்கு விமான கோஷ்டத்தின் தென்புறத்தில் காட்சி அளிக்கிறது.

இந்தச் சிற்பம் நமக்கு மற்றொரு விஷயத்தையும் விளக்குகிறது. கணவன், மனைவி இருவரும் அன்புடனும், ஒருவர் சினம் கொள்ளும்போது மற்றவர் அதை சமாதானப்படுத்தி, மெளனம் காக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறது.

"நான் கொடுத்த சாபத்தினால் அவன் ஏற்கெனவே துன்பமுறுகிறான். நீயும் சாபமிட்டால்  தாங்க மாட்டான்' என்று கூறிய ஈசன், தேவியிடம் "நீ பரம சாந்த ஸ்வரூபியாய், உலகம் முழுதும் பிரகாசமடைவதற்குத் தவம் இருப்பாய்!' என்று கூறுகிறார். தேவி  தவம் செய்கிறாள். அப்போது  அம்பிகையின் திருவாயிலிருந்து உதித்த வாசினி தேவிகள் உருவாக்கியதே லலிதா சகஸ்ரநாமம்.

இத்தலத்து ஈசனை பூஜித்து, சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் "மீயச்சூர்' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27 -ஆம் தேதி வரை சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இந்த ஆலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது ஒளி விழும். எமனும் இத்தலத்தில் பிறந்து  எந்நேரமும் ஈசனை பூஜித்ததாகக் கூறப்படுகிறது.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் தோன்றும் சங்கு ஆயுளைக் கெட்டிப் படுத்தும். தெய்வீக சக்தி படைத்தது. எனவே எமன் ஆயிரத்து எட்டு சங்கு கொண்டு வந்து ஈசனை பூஜித்து, எமலோகத்தின் சக்தி வாய்ந்த ஸ்தல விருட்சமான பிரண்டை கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்ததாக ஐதீகம்.
உலக மக்களின் துன்பத்தைப் போக்க உபாயம் தேடி கடும் தவம் இயற்றிய அகத்தியருக்கு ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்கிறார். "அவளை எங்கு தரிசனம் செய்யலாம்?' என்று அகத்தியர் கேட்கும்போது, திருமீயச்சூர் செல்லச் சொல்கிறார் ஹயக்ரீவர். அங்கு அம்பிகையைத் தரிசித்து லலிதா நவரத்ன மாலையைப் பாடுகிறார் அகத்தியர். 

ஈசன் மேகநாத சுவாமி, அம்பிகை சாந்த நாயகி எனப்படும் ஸ்ரீலலிதாம்பிகை. மிகுந்த அழகுடனும், வேறெங்கும் காண இயலாத களையுடன் தெற்கு நோக்கி அம்பிகை அமர்ந்திருக்கிறாள். ஒரு ராஜ தர்பார் போல் கம்பீரமாக, மகாராணியாக அமர்ந்திருக்கிறாள் அன்னை.

ஸ்ரீ சக்ர பீடத்தில் வலது காலை மடித்து, இடதுகாலை தொங்கப்போட்டு அமர்ந்து தேவி அரிதான காட்சி தருவதால்  இங்கு சக்தியும் அதிகம். இங்குள்ள துர்க்கை சந்நிதியில் அவளின் கையில் கிளி  உள்ளது. "சுகப்பிரம்ம துர்க்கா தேவி' என்று பெயர். பக்தர்களின் கோரிக்கைகளை சுகர் மகரிஷி அம்பிகையிடம் கொண்டு செல்கிறார் என்பது ஐதீகம். இப்போதும் ஒரு கிளி, துர்க்கை சந்நிதியிலிருந்து தினமும் தேவியின் சந்நிதிக்குச் செல்கிறது. இங்கு அம்பிகையின் சக்திதான் விசேஷமானது. லலிதா என்றால் மென்மையான, சுலபமான என்று பொருள். மென்மையும், அன்புமாய் தன் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கக் கூடியவள். பக்தர்கள் சுலபமாக அவளை அணுக முடியும். அவளைக் கேட்டால் கிடைக்காத தனம் இல்லை.

"சர்வலோக வசங்கரீ, சர்வ ம்ருத்யு நிவாரணி, கடாக்ஷ கிங்கரீ, பூத கமலா கோடி சேவிதா, தன தான்ய விவர்த்தினி' என்று அவளைப் பலவாறு துதிக்கிறது லலிதா சகஸ்ரநாமம்.

வில்வ மரம், மந்தார மரம் - ஸ்தல விருட்சமாக உள்ளது. இங்கு தாமரை இலையில் சங்கு புஷ்பம் வைத்து பூஜித்து, அதில் அன்னம் வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து நாமும் சாப்பிட்டால் எவ்வளவு கொடுமையான வியாதியாக இருந்தாலும் நீங்கி, நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.  

பக்தர்கள் மனமுருகி அழைத்தால் உடனே வருபவள் அன்னை என்று அகத்தியர் 

"பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க் கெமனாய் எடுத்தவளே 
வற்றாத அருட் சுனையே வருக; மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!' 

- என்று பாடுகிறார்.

அவளின் அழகை ரசிக்கவும், அருளைப் பெறவும் ஒருமுறையேனும் திருமீயச்சூர் சென்று அம்பிகையை தரிசிக்க வேண்டும்.

அமைவிடம்: திருமீயச்சூர் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர்கால கற்கோவிலாக விளங்குவதோடு கலையழகு நிறைந்த சிற்பங்கள் அடங்கியது.

(தொடரும்)

Tags : திருமீயச்சூர் திருமீயச்சூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT