வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 148

11th Jun 2021 04:22 PM

ADVERTISEMENT


கப்பல் வாங்க வ. உ. சி. பம்பாய் சென்றார். கப்பலுக்காக பம்பாய் வீதிகளில் இவர் அலைந்துகொண்டிருந்தபோது, கருவுற்றிருந்த அருமை மனைவி இங்கே தள்ளாடிக் கொண்டிருந்தார். மூத்த மகன் உலகநாதன், நோய்வாய்ப்பட்டுத் துடித்துக்கொண்டிருந்தான். 
"கடவுள் காப்பாற்றுவார்' என்னும் ஒற்றை வாசகத்தில் தம்முடைய நம்பிக்கையையெல்லாம் சுருட்டி வைத்துக்கொண்டு அலைந்தார்.  சில மாதங்களில், 42 முதல் வகுப்புப்பயணிகளும் 24 இரண்டாம் வகுப்புப் பயணிகளும் 1,300 சாதாரண வகுப்புப் பயணிகளும் பயணம் செய்யக்கூடிய "காலியா' என்னும் கப்பலைச் சொந்தமாகப் பெற்றுத் தூத்துக்குடி திரும்பினார். 
வேதமூர்த்தி என்னும் நண்பரை ஃபிரான்ஸூக்கு அனுப்பி, "லாவோ' என்னும் இன்னொரு கப்பலை வாங்கச் செய்தார். இரண்டு கப்பல்களோடு, இரண்டு யந்திரப் படகுகளும் வாங்கப்பட்டன. 
இரண்டு கப்பல்களும், "வந்தே மாதரம்' பொறிக்கப்பட்ட கொடிகளோடு தூத்துக்குடியை அணுகுவது போலவும், கரையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்று, "வீர சிதம்பரம் வாழ்க!' என்று கோஷமிடுவது போலவும் இந்தியா பத்திரிகையில் சித்திரம் வெளியிட்ட பாரதியார், இப்படி எழுதினார்: 
"வெகுகாலமாகப் புத்திரப்பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால் எவ்வளவு அளவற்ற ஆனந்தம் அடைவாளோ அத்தனை அளவற்ற ஆனந்தத்தை நமது பொதுமாதாவாகிய பாரததேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண்ணமே'. 
சுதேசி நாவாய்ச் சங்கத்தின் செயல்பாடுகள், தொடக்க நாட்களில், வெகு வேகமான வளர்ச்சியைக் கண்டன. சுதேசிக் கப்பல்களிலேயே சரக்குகளை ஏற்றுவதென்றும், பயணம் செய்வதென்றும் மக்கள் ஆர்வம் கொண்டனர். இதனால், சங்கத்தின் புகழ் ஓங்கியது. 
இப்படிப்பட்ட வளர்ச்சி, ஐரோப்பிய வணிகர்களுக்கும் பிரிட்டிஷ் நாவாய்க் கம்பெனிக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது. தங்களின் கட்டணங்களைக் குறைப்பதாக ஐரோப்பிய வணிகர்கள் அறிவித்தனர். ஒரு கட்டத்தில், பிரிட்டிஷ் கம்பெனியின் கட்டணம் 11 பைசாக்களாகவும், அதே அளவுக்கான சுதேசிக் கம்பெனியின் கட்டணம் 3 அணாக்களுமாக இருந்தன. 
இருப்பினும், நாட்டுப்பற்று மிக்க தென்னிந்திய வணிகர்கள், சுதேசிக் கப்பல்களுக்கு மட்டுமே ஆதரவு தந்தனர். இதனால், பிரிட்டிஷ் கம்பெனியைக் காட்டிலும் ஐந்து மடங்கு லாபத்தை சுதேசிக் கம்பெனி ஈட்டியது. 
இதே போன்ற நிலை தொடர்ந்திருந்தால்.......?!?!? !!!!!
இன்னும் சில நாவிகேஷன் கம்பெனிகள் தொடங்கப்பட்டிருக்கும்!  ஆமாம், அப்படியொரு திட்டத்தைத்தான் வ. உ. சி. வைத்திருந்தார். கிழக்கே பர்மா நாட்டின் ரங்கூன் (இப்போதைய மியான்மர் நாட்டு யாங்கோன்) தொடங்கி, மேற்கே கராச்சி வரையான முக்கடல் (வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல்) நீர்ப் போக்குவரத்தில் பிரிட்டிஷ் கம்பெனியும், ஐரோப்பிய வணிகர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 
இதனால், இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இத்தகைய கடல் போக்குவரத்தை சுதேசியமாக்கி, கூடுதலாக கங்கை ஆற்றின் வழியாக, வங்காளத்தின் சிறு சிறு நகரங்களையும் சுதேசிப் படகுகள் வழியாக இணைத்தால், சுதேசி வணிகத்தைச் செழிக்கச் செய்யலாம் என்பதுதான் வ. உ. சி.-யின் பிரதான திட்டம். 
வ. உ. சி.-யின் கனவுகளைக் கலைத்துப் போட்டதில்,பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் பங்களிப்பு நிரம்பப் பெரியது. அதன் கப்பல்கள், இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 
ரூபாய்க் கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தாமல், ஸ்டெர்லிங்-பவுண்ட் என்று பேசிய கம்பெனி அது. பொருளாதார - தொழில்நுட்ப ரீதியாக உயர்நிலையில் இருந்தது. 
அரசியல் ஏகாதிபத்தியமும் செல்வாக்கும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? தூத்துக்குடி - திருநெல்வேலிப் பகுதிகளின் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு மனம் பொறுக்கவேயில்லை. 
பிரிட்டிஷ் வணிக எதேச்சாதிகாரம் குன்றிவிடுமே என்று இவர்களெல்லோரும் கவலையுற்றனர். ஐரோப்பிய வணிகர்களுக்கும் சுதேசி வணிகர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி, ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான உரசல்களாக மாறுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. மதராஸிலிருந்த கம்பெனி அரசுக்கு ஏக வருத்தம்; ஆத்திரம். 
சுதேசிக் கம்பெனியை எப்படியாவது அமிழ்த்தி விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு சிந்தித்த பிரிட்டிஷ் கம்பெனி, கட்டணம் இல்லாத சேவையை அறிமுகப்படுத்தியது. 
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு அலுவலர்களை சுதேசிக் கப்பல்களில் பயணிக்க விடாமல் தடுத்தது. பிரிட்டிஷ் கப்பல்கள் புறப்பட்டுச் சென்ற பின்னரே, தூத்துக்குடித் துறைமுகத்தை விட்டு சுதேசிக் கப்பல்கள் புறப்படவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 
இங்கேயும் அங்கேயும் தூண்டி விட்டால், இன்னமும் இடைஞ்சல்தானே? தனவந்தர்கள் சிலர் பங்குதாரர்களாகச் சேர்ந்திருக்க, சுதேசிக் கம்பெனி என்பதே கூட்டு வணிக முயற்சிதானே! கூட்டாளிகள் சிலர், பிரியவும்,பிரிக்கவும் முயன்றனர். பணம் கொடுப்பதாகச் சொன்னதை மறந்தனர். கப்பல் கம்பெனியிலிருந்து வ. உ. சி.-யை ராஜினாமா செய்ய வைப்பது - என்பதுவரை இத்தகைய இடைஞ்சல்கள் நீண்டன. 
எல்லாவற்றுக்கும் இடையில்,பொருநைக் கரையில் சுதேசி இயக்கம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. இரண்டு கப்பல் கம்பெனிகளுக்கும் இடையிலானநிலைமையைக் கண்டு கேட்டு, மதராஸூக்குச் செய்தி அறிவிப்பதற்காக மாவட்ட நீதிபதி அனுப்பப்பட்டார். 
"வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் கடைகளை மக்கள் புறக்கணிக்கின்றனர். எனினும், கடைகள் அமைதியாகவே காட்சியளிக்கின்றன. கடைக்காரர்கள் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. வன்முறை அறவேயில்லை. காவல்துறையினர் போதுமான அளவில் இல்லை. இன்ஸ்பெக்டர் சுதேசி எண்ணம் கொண்டவர் என்று இணை நீதிபதி தெரிவிக்கிறார். துறைமுக, சுங்கத் துறை அதிகாரிகளும் சுதேசி எண்ணம் கொண்டவர்களாம்' என்றே இந்த நீதிபதி பதிவு செய்கிறார். 
சுதேசிக் கம்பெனியானது, இன அடையாளமாகக் காணப்பட்டது. தூத்துக்குடியின் இணை நீதிபதியாகவும் சப்-கலெக்டராகவும் ஆஷ் பொறுப்பேற்றவுடன், "இந்தியர்களையும் ஆசியர்களையும் மட்டுமே பங்குதாரர்களாகக் கொண்ட சுதேசி நாவாய்ச் சங்கத்தை தேசத்துரோகியாகவும் வகுப்புவாத நிறுவனமாகவும் அறிவித்துத் தடைப்படுத்தவேண்டும்' என்றார். 
இத்தனைக்கும் இடையில்தான்,  அமைதியான நெல்லையில், அரசியல் ஆவேசம் பற்றிக்கொள்ளத் தொடங்கியது.

- தொடரும்

Tags : பொருநை போற்றுதும்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT