வெள்ளிமணி

152. பொருநை போற்றுதும்!

டாக்டா் சுதா சேஷய்யன்


இதற்கிடையில், நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காகத் தூத்துக்குடிக்கு வந்தார் மாவட்ட நீதிபதியான எல். எம். வின்ச்.

பிப்ரவரி 29-ஆம் நாள், நடைபயணமாகவே ஊரெங்கும் சுற்றிப் பார்த்து விட்டு, நிறையவே அமைதி நிலவுவதைக் கண்டுவிட்டு, பொதுக்கூட்டத் தடை உத்தரவை ரத்து செய்தார். 

வ. உ. சி. உள்ளிட்ட ஊர்ப் பெரிய மனிதர்களுடன்ஆலோசனைகள் நடத்தினார். பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், கோரல் மில் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையில் சுமுக உறவு ஏற்பட்டது. 

ஆனால், இப்படிப்பட்ட சுமுகம் தோன்றுவதற்கான மூல காரணம், வ. உ. சி-யும், சிவாவும் வேலை நிறுத்தத்தையும், பணியாளர்களையும் கையாண்ட விதம்தான் என்பதை வரலாறு பதிவு செய்யவேண்டும். 
வேலை நிறுத்தக் காலத்தில் ஊழியர்கள், பணியாளர்கள் யாரின் குடும்பமும் பட்டினி கிடக்கவில்லை. அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவை வ. உ. சி-யே தயாரித்துப் படைக்கச் செய்தார். 

அவர்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. குறுகிய காலமே இப்போராட்டம் நடைபெற்றதென்றாலும், போராட்டத்தில்  ஈடுபடும் பணியாளர்களின் குடும்பங்களைத் தொழிற் சங்கத் தலைவர்களே பராமரித்துப் பாதுகாப்பது என்பது அதுவரை யாரும் அறியாதது. வ. உ. சி-யின் அன்பும், பெருந்தன்மையும் உலகிற்குத் தெரிய வந்தன. 

கோரல் மில், அப்போதைய நிலையில், கணிசமான லாபம் பார்த்துக் கொண்டிருந்தது. ஐரோப்பியப் பங்குதாரர்களுக்கு 60% ஈவுத் தொகை வழங்கிய நிர்வாகம், தொழிலாளர்களை மாத்திரம் வஞ்சித்தது. இதுதான், போராட்டத்திற்கான முக்கிய காரணம். வின்ச், தூத்துக்குடிக்கு வந்துவிட்டுப் போனதும், தொழிலாளர்களோடு நிர்வாகம் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது. போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஆனால், சுதேசியம், அமைதிப் போராட்டத்தின் செல்வாக்கு போன்ற கோட்பாடுகளும், வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, வத்தலகுண்டு சுப்பிரமணிய சிவா போன்றோரின் மேதைமையும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்னும் அவாவும் முக்கியத்துவம் பெற்றன. 

தென்னிந்திய வரலாற்றில், கோரல் மில் போராட்டமானது எத்தகைய திருப்பமாக அமைந்தது என்பதை அப்போதைய சுதேசமித்திரன் இதழின் பதிவு தெளிவுபடுத்தும்: 

தங்களின் முதலாளிகளிடமிருந்து நியாயமான ஒன்றைப் பெறுவதற்கு வேலைநிறுத்தம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துகிற முறை, அதுநாள்வரை வட இந்தியாவில் பரவலாகக் காணப்பட்டதையும், வடஇந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆயுதத்தைக் கொண்டே பரங்கியர்க்குப் (பிரிட்டிஷார்) பாடம் கற்பித்ததையும் குறிப்பிட்டுவிட்டு, இந்த உத்வேகம் இப்போது தென்னகம் வந்திருப்பதற்காக மகிழ்வதாகவும், தூத்துக்குடி மக்கள் இந்த ஆயுதத்தின் பெருமையை உணர்ந்துவிட்டார்கள் என்றும் இப்பதிவு மேலும் 
தெரிவிக்கிறது. 

ஒருபக்கத்தில் வேலை நிறுத்தப் போராளிகளுக்கு நிவாரண உதவிகள், இன்னொரு பக்கத்தில் நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை - வ. உ. சி., தம்முடைய அன்பையும் பண்பையும், அறநெறியையும் பெருந்தன்மையையும் நிரூபித்தார். 

வ. உ. சி-யின் மதிப்பு உயர உயர, ஆங்கிலேயருக்கு வயிற்றில் புளி கரையத் தொடங்கியது. தூத்துக்குடிக்கு சிவா வந்து சேர்ந்த பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கி, அநேகமாக நாள்தோறும் சுதேசிப் பொதுக்கூட்டங்களில் வ. உ. சி-யும் சிவாவும் உரையாற்றினர். 

பெரும்பாலும் இக்கூட்டங்கள், தூத்துக்குடி கடற்கரையில் நடைபெற்றன; ஒரு சில நாள்களில் மட்டும், வேறு ஏதாவது இடத்தில்! 

சுதேசியத்திற்குக் கிடைத்துக் கொண்டிருந்த வரவேற்பும், அறக்கொள்கைகள் மீது அதிகப்பட்டுக் கொண்டிருந்த நம்பிக்கையும், சுதேசி நாவாய்ச் சங்கத்தின் வெற்றியும், ஏகபோக வணிக ஆதிக்கம் பெற்றிருந்த பிரிட்டிஷ் நாவிகேஷன் கம்பெனியின் அநியாய வருமானத்தில் விழுந்திருந்த தொள்ளலும்,
அந்நியர்களுக்கு ஆத்திரத்தைத் தோற்றுவித்ததில் ஆச்சர்யம் என்ன?
இதே சமயத்தில், வ. உ. சி-யின் வழக்குரைப்புத் திறமையை மெய்ப்பிக்கும் வகையில் நிகழ்ந்த நிகழ்வையும் நினைவுகூர வேண்டும். 1908-க்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1903-இல், பொதுமக்களுக்குத் தொந்தரவு தந்துகொண்டிருந்த தீயவன் ஒருவன், குலசேகரநல்லூரில் கொலை செய்யப்பட்டான். பிரச்னை போலீஸ் கேஸானது. 

காவல் பதிவுகளில் முதல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டவர் தலைமறைவானார். ஆறு பேர், அடுத்த நிலைக் குற்றவாளிகளாகக் கூண்டில் ஏற்றப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டனர். 
உண்மையில் சொல்லப் போனால், முதல் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டவர், எந்தத் தவறும் செய்யாதவர். அழகப்பப் பிள்ளை என்னும் பெயர் கொண்ட அவர், ஆண்டுகள் சிலவற்றுக்குத் தலைமறைவாக இருந்துவிட்டு, சந்நியாசம் பெற்று, ஆறுமுகத் தம்பிரான் என்னும் பெயரோடு வெளியில் வந்தார். 

பிரிட்டிஷ் காவல்காரர் ஒருவர் அடையாளம் கண்டுபிடித்துக் கைது செய்தார். வழக்கும் கோர்ட்டுக்கு வந்தது. லஞ்ச லாவண்யத்திற்குப் பெயர் பெற்றிருந்த துணை நீதிபதி முன்னர் வழக்கு விசாரணைக்கு வந்தது. பொய்க் குற்றச்சாட்டுகளில் இந்தியர் பலரைச் சிக்க வைத்து மிரட்டுவது ஆதிக்க அலுவலர்களின் வழக்கமாகியிருந்தது என்பதை அறிந்த வ. உ. சி, தம்பிரான் சார்பாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். 

முதல் காரியமாக, வழக்கை இடம் மாற்றி, இணை நீதிபதி ஈ. ஹெச். வாலஸ் முன்னிலையில் கொணர்ந்தார். விசாரணையின்போது, வ. உ. சி-யின் குறுக்கு விசாரணைக்குக் காவல் துறையால் ஈடுகொடுக்க முடியவில்லை. வ. உ. சி. வழக்கு நடத்திய விதத்தின் மேன்மையைக் கண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பிளாக்ஸ்டன், நட்ட நடு நீதிமன்றத்திலேயே வ. உ. சி-யோடு கைகுலுக்கிப் பாராட்ட, காவல் துறையினர் தங்களின் சாட்சிகளை ஆஜர்ப்படுத்து முன்னரே, தன் முன் இருப்பது ஜோடிக்கப்பட்டதொரு குற்றச்சாட்டு என்பதை உணர்ந்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்தார். 

வ. உ. சி. மீதான பொறாமையும், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட சுதேசிக்காரர்கள் மீதான ஆத்திரமும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதற்கு இன்னமும் காரணங்கள் தேவையா? 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT