வெள்ளிமணி

புண்ணியம் தரும் பூசப் புனலாடல்!

எஸ். வெட்கட்ராமன்

தேவர்களுக்காக சிவனாரும், உமாதேவியும் இணைந்து ஆனந்தத் தாண்டவமாடிய நாளே "தைப்பூசத் திருநாள்'. இந்நாளில் இவ்வுலக இயக்கத்துக்கு ஆதாரமாகத் திகழும் பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை ஒவ்வொன்றாகத் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது. 

சூரிய பகவான் தை மாதத்தில் வடதிசைப் பயணமான உத்தராய புண்ணிய காலத்தைத் தொடங்குகிறார். சிவாம்சம் கொண்டவரான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தியின் அம்சமான சந்திரன் கடக ராசியில் அதாவது பூச நட்சத்திரத்தில் ஆட்சி பெற்றிருக்க, அவர்கள் இருவரும் பூமிக்கு இருபுறமும் ஒரே நேர்க்கோட்டில் வரும் இப்பௌர்ணமி நாளை நம் முன்னோர்கள் மிக முக்கியமான நாளாகக் கொண்டாட ஆரம்பித்தனர். அதுவும் தமிழ் மாதம் "தை'யில் பூசநட்சத்திரத்தில் வருவதால் இதனை "தைப்பூசம்' எனச் சிறப்பித்தனர். இவ்வாண்டு ஜனவரி }28, வியாழக்கிழமையன்று "தைப்பூசம்' கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திலுள்ள பெரிய சிவாலயங்களில் இவ்விழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது. அதிலும் மத்யார்ஜுனம் எனப்போற்றப்படுவதும், சைவத்தால் மேலோங்கித் திகழ்ந்து மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்படைந்து விளங்குவதுமான திருவிடைமருதூரில் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோயிலில் பெருந்திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். 

புராண, வரலாற்றுப் பெருமைகளுடன் இன்னும் பல சிறப்புகளையும் கொண்ட இவ்வாலயம் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தில் சீருடனும், சிறப்புடனும் விளங்குகிறது. காவிரி தென்கரையில் அமைந்துள்ள 30}ஆவது தலமாகும். கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

புராணத்தின்படி, இத்தலத்தில் தவமிருந்த விபண்டக முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்தார். அப்போது, விபண்டக முனிவர் "ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று காவிரிக்கரையில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடியவர்கள் நோய் நொடி, பாவங்கள் நீங்கி புண்ணியம் பெற்று வாழ வேண்டும்' என்று சிவனிடம் வேண்டினார். இறைவனும் ""அவ்வாறே ஆகுக!'' என்று வரம் அருளினார். 

ஒருமுறை தேவ விரதன் என்ற கள்வன் இறைவனது திருவாபரணங்களைக் களவாட முயன்ற பாவத்தால், நோய்வாய்ப்பட்டு மாண்டான். மறுபிறவியில், அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து, பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவானின் கால் பட்டு, முக்தியடைந்தான் என்றும், இப்புண்ணிய நாளில் நீராடிய அயோத்தி மன்னன் ஒருவனும், சித்ரகீர்த்தி என்ற பாண்டிய மன்னனும் புத்திரப்பேறு பெற்றனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. 
மேலும், இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத்தீர்த்தம்) "தைப்பூச நீராடல்' மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம் என்பதும் ஐதீகம். 

இப்பூச நாளில் நீராடலைப் பற்றி அப்பர் பெருமான் இத்தலத்து திருக்குறுந்தொகையில் "ஈசனெம் பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே' என்றும், திருஞானசம்பந்தர் "பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசனுறைகின்ற இடை மருதீதோ' என்றும் சிறப்பித்து அருளியதிலிருந்து இத்தலத்தின் தொன்மையை அறிய முடிகிறது. கரோனா கொள்ளைநோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி நடை பெறும் இத்தைப்பூச விழாவில்  பங்கேற்போம்; பயனடைவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT