வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: திருமணஞ்சேரி கோகிலாம்பிகை 

22nd Jan 2021 01:02 PM | - ஜி. ஏ.பிரபா

ADVERTISEMENT

 

ஸுதா ஸிந்தோர் - மத்யே ஸýரவிடபி- வாடீ - பரிவ்ருதே 
மனித்வீபே நீபோ பவநவதி சிந்தாமணி க்ருஹே

-செளந்தர்ய லஹரி 

அன்பில் உண்டாகும் பரமானந்தம். அதைப் பிரிந்திருந்தால்தான் உணர முடியும். பிரிந்த பின் ஒன்று சேரும்போது அளவற்ற ஆனந்தம் உண்டாகும். இதை உணர்த்தவே மூல தத்துவம், சக்தியும் சிவனுமாகப் பிரிந்து, காமேஸ்வரன் காமேஸ்வரியாகத் திகழ்கிறது.

ADVERTISEMENT

ஒவ்வொரு முறையும் இறைவனை விட்டுப் பிரிந்த அம்பிகை தன் தவ வலிமையால் இறைவனை மீண்டும் அடைகிறாள். பிரபஞ்ச சக்தியாகத் திகழும் அவளே தன் எண்ணங்களைக் குவித்து ஈசனைத் தன்னிடம் இழுக்கிறாள்.

இந்த லோகத்தையே தன் கருணையால் கடாக்ஷிப்பதற்காக அன்னை நடத்தும் நாடகம் அது. அதை உணர்ந்து புன்முறுவலுடன் இறைவனும் சம்மதிக்கிறார். 
ஒருமுறை கைலாயத்தில் ஈசனுடன் இருக்கும்போது உமாதேவி ""நான் மீண்டும் பூலோகத்தில் பிறந்து, தங்களை நோக்கித் தவமிருந்து உங்களை மணம் செய்து கொள்ள வேண்டும்'' என்று கேட்கிறாள்.

தன் தவத்தின் பலனாக இறைவன் வந்து தன்னைக் கைப்பிடித்த ஆனந்தத்தை மீண்டும் அனுபவிக்க ஆசைப்பட்டாள் அன்னை. இறைவன் "எங்கே? எப்போது?' என்று எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்ததால், அன்னை கோபத்துடன் பொறுமை இழந்தாள். அம்பிகையின் அலட்சியம் உணர்ந்து இறைவன் தேவியை பூலோகத்தில் பசுவாகப் பிறக்கும்படி உத்தரவிட்டார்.

தன் சாப விமோசனம் வேண்டி அலைந்து திரிகிறார் அன்னையும் பசு வடிவில். அவருடன் லட்சுமியும், சரஸ்வதியும், திருமாலும் பசு வடிவம் ஏற்று பூமிக்கு வருகிறார்கள். 

தேரழுந்தூரில் திருமால் பசு மேய்ப்பவனாக உருவெடுத்து, பசுக்களைப் பராமரித்து வருகிறார். அங்குள்ள லிங்கத்திற்கு தினமும் பசுவின் பால் பொழிந்து அன்னை வழிபாடு செய்ய ஈசனின் திருமேனி குளிர்கிறது.
பசுவின் குளம்பின் ஸ்பரிசம் பட்டு சிலிர்த்து, ஈசன் அம்பிகைக்கு சாப விமோசனம் தருகிறார். 

பரத மகரிஷிக்கு மகளாக வளரும்படி ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் ஈசன். பின்னர், பரத மகரிஷி  நடத்திய யாக குண்டத்தில் ஈசன் எழுந்தருளி, அம்பிகையை திருமால் முன்னிலையில் திருமணஞ்சேரியில் திருமணம் செய்தருளினார். இதனுடன் தொடர்புடைய பல திருத்தலங்கள் அருகருகில் இருக்கின்றன. 

"திருவாடுதுறை'யில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டது. "திருந்துருத்தி' என்ற குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக குண்டத்தில் ஈசன் தோன்றுகிறார். "திருவேள்விக்குடி' எனும் தலத்தில் கங்கணதாரணமும், "எதிர்கொள்
பாடி'யில் ஈசனை எதிர்கொண்டழைத்தலும் நிகழ்ந்து, "திருமணஞ்சேரி'யில் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இது நித்திய கல்யாண சேஷத்திரமாகும்.

இனிய குரல் கொண்ட அம்பிகை எனும் பொருள்பட இத்தலத்தின் அம்பிகையை  "குயிலினும் மென்மொழியாள்' என்று சம்பந்தர் 
அழைக்கிறார். 

"ஆயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து 
குயில் ஆரும் மென்மொழியாள் ஒரு கூறாகி 
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி 
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே!'
என்று பாடுகிறார் சம்பந்தர் பெருமான். 

இங்கு நவகிரகங்கள் இல்லை. மூல ஸ்தானத்தில் அம்பிகை மணப்பெண்ணுக்கு உரிய வெட்கத்துடன் காட்சி அளிக்கிறார். கருஊமத்தை மற்றும் வன்னி, கொன்றை ஆகியவை தல விருட்சங்களாக உள்ளன.
"திருமணம் கைகூடாதவர்கள் இத்தல ஈசன் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் கை கூடும்' என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் இணையவும், குழந்தைப்பேறு அடையவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இறைவன் பெயர் உத்வாகநாதர். இங்கு "கல்யாண அர்ச்சனை' என்பது மிகவும் பிரசித்தி. 

"இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மலர்மாலை சந்தோஷத்தையும், விபூதி இஷ்ட பூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாக்ஷத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரஹத்தையும் அளிக்கிறது' என்று பொருள்.

திருமணம் நடந்து முடிந்தபின், பழைய மாலையை தம்பதிகள் கொண்டு வந்து ஈசனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள், அமாவாசையன்று வந்து இங்குள்ள சப்த தீர்த்தத்தில் நீராடி ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு முழு மனித வடிவில் இருக்கிறார் ராகு பகவான்.

மன்மதன், ஈசனின் தவத்தைக் கலைக்க அவர்மீது தன் கணைகளைத் தொடுக்க ஈசனின் நெற்றிக்கண் பட்டு எரிந்து போகிறான் மன்மதன். அன்னையைத் துதித்து, அவள் அருளால் சாப விமோசனம் பெற்று ரதியின் கண்களுக்கு மட்டும் அவன் தென்படுகிறான். மன்மதனுக்கு ஈசன் வரம் அருளியது இத்தலத்தில்தான்.

தன் இனிமையான குரலினால் ஈஸ்வரி தன் பதியிடம் பக்தர்களின் குறைகளை எடுத்துக் கூறுகிறாள். "சரஸ்வதியின் கையில் உள்ள "கச்சபீ' என்னும் வாத்தியத்தைவிட இனிமையாக இருக்கிறது ஈஸ்வரியின் குரல்'. "நிஜ சல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த் ஸித கச்சபீ'என்று அவளின் குரலினிமையைக் கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். 

இங்கு திருமணக் கோலத்தில் அம்பிகையும், ஈசனும் கைகோர்த்தபடி காட்சி அளிப்பது சிறப்பு. இறைவன் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு வடகரைத் தலங்களில் அமைந்துள்ள இருபத்தி ஐந்தாவது தலம் ஆகும். அப்பர், சம்பந்தரால் பாடப் பெற்றது.

மிகப் பிரம்மாண்டமான அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. வலப்புறம் விநாயகர் சந்நிதியும், இடப்புறம் நடராஜர் சந்நிதியும் உள்ளன. கருவறையில் இத்தலத்து இறைவன் உத்வாக நாதர் காட்சி அளிக்கிறார்.  கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கி  இத்தலத்து இறைவி கோகிலாம்பிகை அமர்ந்த நிலையில் திருமணப்பெண் போன்று காட்சி அளிக்கிறார்.

இங்கு வந்து அம்பிகையை வணங்க முடியாத பெண்கள் கூட மனமுருகி அன்னை கோகிலாம்பாளைப் பிரார்த்தித்தால் அவர்கள் கனவில் சென்று ஆறுதல் கூறி, அப்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் யோகத்தைக் கொடுக்கும் அற்புத வல்லமை படைத்தவள் அம்பாள். 

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை நினைத்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் படித்து அவளைப் பூஜிப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. பின்னர் தம்பதி சமேதராக வந்து இறைவனையும், அன்னையையும் வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

மூலவர் சந்நிதிக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரேஸ்வரர் காட்சி அளிக்கிறார். இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த ஏழு கடல்களும் இங்கேயே தீர்த்தங்களாகத் தங்கி விட்டன. "சப்த சாகரம்' என்று அழைக்கப்படும் தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் "திருமணஞ்சேரி திருத்தலம்' அமைந்துள்ளது.

(தொடரும்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT