வெள்ளிமணி

அளவான உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை!

22nd Jan 2021 01:08 PM

ADVERTISEMENT

 

நபித்தோழர் அபூஜுஹைபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஒருமுறை இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்பட்டிருந்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் சென்றமர்ந்தேன். 

அப்போது எனக்குத் தொடர்ச்சியாக ஏப்பம் வர ஆரம்பித்தது.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ""சகோதரரே! உமது ஏப்பங்களை நிறுத்திக் கொள்வீராக! ஏனெனில், உலகில் வயிறு நிரம்பச் சாப்பிடுபவன் மறுமையில் எல்லோரையும் விட மிகவும் பசித்தவனாக இருப்பான்'' என்றார்கள்.

ஹஜ்ரத் அபூஜுஹைபா (ரலி) அவர்கள் இந்நிகழ்ச்சிக்குப் பின், வாழ்நாளில் என்றுமே வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்ட பின், ""முப்பது வருடங்கள் என் வயிறு நிரம்பச் சாப்பிட்டதே இல்லை'' என அவர்களே கூறியுள்ளார்கள்.

ADVERTISEMENT

இக்காலத்தில் விதம்விதமாக நாம் உண்ணுவதும், விருந்துகளில் இறைச்சி இல்லையென்றால் கோபித்துக் கொள்வதும் இதுவெல்லாம் முஃமினின் செயல்களா? 

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபின் இந்த உம்மத்தில் வயிறு நிரம்பச் சாப்பிடக்கூடிய பழக்கம் ஏற்பட்டது. இதுதான் முதன்மையான துன்பமான விஷயம். வயிறு நிரம்பச் சாப்பிடுவதால் மனோஇச்சை பலம் பெற்று விடுகிறது. 

பசித்திருப்பது ஞானத்தை உண்டாக்கும். வயிறு நிரம்பச் சாப்பிடுவது, எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது ஆகியவை உடல்நலத்திற்குத் தீங்காகும்.

ஆஸ்பத்திரிகளில் கூட்டம் கூடுவது, உணவு கட்டுப்பாடு இல்லாமல் போனதால் வந்ததன் விளைவு.  "இன்னும் சாப்பிடலாம்' எனத் தோணும்போது சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு, அதனைச் செரிக்க வைக்க பானங்களைப் பருகுவதும், பீடா போடுவதும் நல்ல பழக்கம் இல்லை.

பசி உண்டாகும்போதுதான் உணவு உண்ண வேண்டும்.  சிறிதளவு பசி மீதமுள்ளபோதே எழுந்து விட வேண்டும்.  ஆரோக்கியத்தின் அடிப்படையே வயிறு சீராக இருப்பது தான்.  அதிக உணவு உட்கொள்வதால் வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது.

"வயிறு (குடல்) உடலுக்குத் தடாகம் போன்றது;  நரம்புகள் அதிலிருந்து தாகம் தீர்ப்பவை.  எனவே, குடல் சீராக இருந்தால், நரம்புகளும் அதிலிருந்து ஆரோக்கியமாக தாகம் தீர்க்கின்றன.  குடல் கெட்டு விட்டால், உடல் நலனும் கெட்டுவிடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இரவுநேரம் சாப்பிட்டபின் உடனே தூக்கத்திற்குச் செல்லாமல், குறைந்தபட்சம் நாற்பது அடி தூரமாவது நடப்பது நல்லது.

உணவு உண்டபின் மிஸ்வாக் செய்வதால் வாய், பற்கள் சுத்தமடைகின்றன.
"வயிற்றை மூன்று பங்காக ஆக்கி, ஒரு பங்கு உணவிற்கும், ஒரு பங்கு தண்ணீருக்கும், ஒரு பங்கு காலியாகவும் வைத்திருக்க வேண்டும்' என்பது நபிமொழி.

அதிகமாக உண்பதால் உடல் நலம் கெடுவதோடு, ஆன்ம பலமும் குறைகிறது. அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்!

- ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT