வெள்ளிமணி

பொருநை போற்றுதும் - 127

DIN

கட்டபொம்மன் தனித்திருப்பதை அறிந்த பானர்மன்: பாஞ்சாலங்குறிச்சியின் நிலைமையை ஒற்றறிந்தார் பானர்மன். தம்பிமார்களான ஊமைத்துரையும், துரைசிங்கமும் திருச்செந்தூர் சென்றிருப்பதையும், பிற உதவியாளர்களும் வேறிடம் அகன்றிருப்பதையும், தானாபதிப் பிள்ளை ஆற்றூரில் (பொருநை சங்கம ஆத்தூர்தான்) இருப்பதையும், கட்டபொம்மன் தனித்திருப்பதையும் தெரிந்து கொண்டார். 

தான் வரச் சொல்லியும் வரவில்லை என்பதால் சினத்தின் வசம் சிக்கியிருந்த பானர்மன், இதுதான் தக்க சமயம், கட்டபொம்மனைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டார். ஆங்கிலேயப் படைகளை இனம்பிரித்து, உப தளபதிகளைத் தலைமையேற்கச் செய்து, 1799 செப்டம்பர் 4}ஆம் நாள் மாலை, பாளையங்கோட்டையிலிருந்து புறப்படச் செய்தார். 

சீவலப்பேரி, பூலுடையார் மலை மார்க்கமாகப் பாஞ்சாலங்குறிச்சி நோக்கிச் சென்ற இப்படைகளில், குதிரைகளும் காலாட்களும் இருந்தனர் என்பதோடு, பீரங்கிகளும், வண்டி வண்டிகளாக வெடிமருந்தும், கருமருந்தும், பல்வேறு கொடிய கருவிகளும் இருந்தன. கொம்பாடி வழியாக வந்த கம்பெனிப் படை, நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டது. 

பாஞ்சாலங்குறிச்சியைச் சூழ்ந்து நின்ற போர்ப்படைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஆங்கிலேயக் கடிதக் குறிப்புகள் சிலவற்றிலிருந்து அறிய முடிகிறது. 

To accomplish what has been suggested, it will be necessary to assemble a force to consist of four filed pieces with artillery men (SôuÏ ÀWe¡ ¨ûLs), five hundred Europeans, three complete battalions of sepoys and two troops of cavalry. This detachment should proceed to Panjalamcourchy - ஒரீலி, ப்ரூஸ், காலின்ஸ், டக்ளஸ், டார்மீக்ஸ், ப்ளேக், ப்ரெüன் என்று ஏகப்பட்ட உப தளபதிகள் வேறு. 

பொழுது விடிந்து வெகுநேரத்திற்குப் பின்னர்தான் போர் தொடங்கியது என்றாலும், கட்டபொம்மனின் போர்த்திறமும், மனவுறுதியும் வெளிப்பட்டன என்றாலும், அன்றைய சேதங்கள் கட்டபொம்மனுக்குத்தாம் அதிகம். துபாஷி ராமலிங்க முதலியாரும், இப்ராஹிம், ஜவகர் ஆகிய ஹவில்தார்களும் தூது என்னும் முகாந்திரத்தில் கட்டபொம்மனை அச்சுறுத்த அனுப்பப்பட்டனர். கம்பெனி அதிபதிகள் தன்னுடைய இருப்பிடம் வந்தால் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பேசலாம் என்று கட்டபொம்மன் மறுமொழி கொடுக்க, இந்திய நாடு குறித்த பெருமிதத்தோடு திரும்பினாராம் ராமலிங்க முதலியார். 

கம்பெனிப் படை சூழ்ந்து விட்டதை அறிந்தவுடன், இரவே கட்டபொம்மனின் நகராக்கள் ஒலித்திருந்தன. நகரா முரசங்களின் ஒலி கேட்டு, பாளையக்கோட்டைக்கு ஆபத்து என்பதை உணர்ந்துகொண்ட அண்டை வீரர்கள் பலர், தத்தம் படைகளோடு வந்தனர். ஆதனூர்சின்னு நாயக்கர், ஆவுடையாபுரம் சென்னநாயக்கர், கட்டமல்லனூர் காமி நாயக்கர், மங்கலம் ரணசிங்கர், முள்ளுப்பட்டி முத்தையர், நாயக்கன்பட்டி மல்லையர், முடிமன் வீரணர், குதிரைக்குளம் பொம்மு, சில்லங்குளம் செல்லையர், கொல்லங்கிணறு நாகணர், சாமிநத்தம் சாத்தாவு, கோட்டூர் கூளையர், வீரமல்லு, சின்னையர், வில்லிக்கோட்டை கருத்தமுத்து, ஒட்டாநத்தம் நபாவு, குலையநல்லூர்க்காரர், மதாருமல்லர், புதூர் வெள்ளையர் என்று இத்தனை பேரும் வந்தனர். 

இருந்தாலும் இவர்கள் கோட்டைக்குள் வருவதில் சிக்கல் இருந்தது. பாஞ்சாலக்குறிச்சியின் சுற்று வட்டாரத்தை இவர்கள் நெருங்கியதுமே பீரங்கிகள் இவர்களைத் தாக்கின. உள்ளே வரவொட்டாமல் வெடிமருந்துகள் வெடித்தன. 

எப்படியோ உள்ளே வந்துவிட்ட கொல்லம் பரும்பு சிவத்தய்யாவும், கட்டபொம்மனின் செல்லப்பிள்ளை வெள்ளையத்தேவனும் முதல் நாள் சண்டையில் கம்பெனியாரை துவம்சம் செய்தனர். வெள்ளையத்தேவன் எம்பிப் பாய்ந்து குதிரை மீதிருந்த காலின்ஸ் துரையின் மார்பில் வேலால் குத்த, காலின்ஸ் மரணித்துக் கீழே வீழ்ந்தார்; காலின்ஸின் வாள் வெள்ளையன் தலையை வெட்டிவிட, வெள்ளையனும் மாண்டார். 

"காலன் துரையவன் அங்கே பட்டான், காவல்காரன் இங்கே பட்டான்' என்றொரு நாட்டு வழக்காறு இச்சம்பவத்தைக் கூறுகிறது. காலின்ஸ் என்னும் பெயரைத்தான் காலன் என்றே உள்ளூர் மக்கள் வழங்கினர். 

முதல் நாளிலேயே வெள்ளையத்தேவனை இழந்தது குறித்து கட்டபொம்மன் மனம் மறுகியிருந்த நிலையில், அன்றிரவோ மறுநாள் அதிகாலையிலோ,திருச்செந்தூர் சென்றிருந்த தம்பிகள் திரும்புகின்றனர். ஆற்றூரிலிருந்து தப்பிய தானாபதிப் பிள்ளையும் வந்து சேர்கிறார். ஆனால், தானாபதிப் பிள்ளையின் மனைவி மக்களைக் கம்பெனியார் சிறை பிடித்த தகவலும் தொடர்ந்து வருகிறது. 

ஆங்கிலேயரைப் பொருத்த வரையில், தானாபதிப் பிள்ளையைத் தங்களிடம் கட்டபொம்மன் ஒப்படைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர் (இதற்கொரு காரணம் உண்டு; இக்காரணத்தைத் தக்க தருணத்தில் காண்போம்). என்னதான் தானாபதிப்  பிள்ளையால் சிக்கல் ஏற்பட்டது என்றாலும், காட்டிக் கொடுப்பதில் கட்டபொம்மனுக்கு உடன்பாடில்லை.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT