வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

ஜி.ஏ. பிரபா

"க்வணத் காஞ்சீ - தாமா கரிகலப - கும்ப ஸ்தன நதா
பரிக்ஷீணா மத்யே பரிணத - ஸரச் சந்த்ர வதனா'

-செளந்தர்ய லஹரி 

தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன் குழந்தைகளைக் காக்க அவள் பூமிக்கு வந்து விடுகிறாள். பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும். வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க அதுவே முக்கியம். அந்த ஞானத்தை அள்ளி வழங்குபவள் அகிலாண்டேஸ்வரி.

ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார். உலகில் நீதி நெறி தவறி, அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது. மனிதர்களை நல்வழிப்படுத்த, ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வருகிறாள்.

"நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?'' என்று கேட்கிறாள். அவள் குரலில் ஏளனம். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார்.
"தேவி! ஆம்... நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய். என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக இருக்கிறான். அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அங்கு நாம் குரு } சிஷ்யை என்ற முறையில் திகழ்வோம்'' என்கிறார்.

அவரின் உத்தரவை ஏற்று அன்னை பூமிக்கு வருகிறார். திருவானைக்காவில் காவிரி நதியில் நீர் எடுத்து லிங்கம் அமைத்து ஈசனை வழிபடுகிறார். புராண காலத்தில் இத்தலம் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அதில் ஒரு மரத்தடியில் ஜம்பு என்னும் முனிவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார். இறைவன் அளித்தது என்று முனிவர் விதையையும் சேர்த்து விழுங்கி விட்டார்.

விதை வயிற்றுக்குள் வளர்ந்து கிளைகள் தலைக்கு மேல் பரவ, சிரசு வெடித்து முனிவர் முக்தி அடைந்தார். எனவே இறைவன் "ஜம்புகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 

அகிலத்தைக் காக்க அம்பிகை தவம் இருந்ததால் "அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள். இங்கு அன்னை ஈசனிடம் குரு - சிஷ்யையாக இருந்து ஞான உபதேசம் பெற்றதால், இக்கோயிலில் இறைவன், இறைவிக்கு திருக்கல்யாணம் கிடையாது. 

எல்லையில்லாத கல்வியை முழுவதும் கற்று முடிக்காத நிலையில்,  அன்னை இன்னும் ஒரு மாணவியாகவே காட்சி அளிக்கிறாள்.

"அனைவரும் சிவஞானம் பெற்று, பாவங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்' என்று அன்னை நீர் லிங்கம் பிடித்து வழிபட்டதால் இது தனிச் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. அந்த வழிபாடு  இன்றும் தொடருகிறது. உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் அகிலாண்டேஸ்வரி சந்நிதியிலிருந்து பெண் உருவம் ஏற்று, தன்னை அம்பிகையாக நினைத்து சிவவழிபாடு நடத்துகிறார்.

ஆரம்பத்தில் அன்னை உக்கிர ஸ்வரூபமாக இருந்தாள். பக்தர்கள் அன்னையை வெளியில் நின்றே தரிசித்தார்கள். ஸ்ரீஆதிசங்கரர் இரண்டு ஸ்ரீசக்ரங்கள் செய்து அதில் அன்னையின் சக்தியை ஆவாஹனம் செய்தார். அவை அழகான தாடகங்களாக அன்னையின் காதில் ஒளி வீசின. அன்று முதல் அம்பிகை சாந்த ஸ்வரூபமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். அவளின் அழகு மதிஒளி போல் பிரகாசிக்கிறது. 
லலிதா சஹஸ்ரநாமம் அவளை "தாடங்க யுகலீ } பூத தபனோடுப மண்டலா' என்கிறது. "நன்கு மலர்ந்த செண்பகப்பூ போல் வாசம் வீசுபவள். அவளின் மாணிக்கம், வைர மூக்குத்தி ஒளியில் இந்த உலகமே ஒளி பொருந்தி இருக்கிறது' என்கிறது சஹஸ்ரநாமம்.

"முழுமதி நிகர்த்த வடிவுடையாளை வணங்கினால் எதிரிகளே இருக்க மாட்டார்கள்' என்கிறார் ஆதிசங்கரர் தன் செüந்தர்ய லஹரியில்.
இங்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் அம்பிகை தவம் இருந்ததால் இங்கு நடக்கும் ஆடிவெள்ளி திருவிழா மிகச் சிறப்பானதாகும். அம்பிகை காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சி அளிக்கிறாள்.

ஒருமுறை வேதியர் ஒருவர் "கவி இயற்றுவதில் வல்லமை தர வேண்டும்' என்று அம்பிகையை வேண்டினார். அவளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்து தியானம் இருந்தார். 
அவருக்கு அருள் செய்ய விரும்பிய அம்பிகை வெற்றிலை போட்ட வாயுடன் கோயிலுக்குள் சென்றாள். தாம்பூலம் தரித்து, சர்வ அலங்காரத்துடன் அழகிய ரூபமான அன்னை, வேதியர் அருகில் வந்து "வெற்றிலைச் சாற்றை உன் வாயில் உமிழட்டுமா?'' என்று கேட்கிறாள். வேதியரோ அவளைத் தரக்குறைவாகப் பேசி விரட்டி விடுகிறார். 

அன்று கோயில் மடப்பள்ளியில் வேலை அதிகமாக இருக்கவே, வரதன் என்ற பணியாள் அசதியின் காரணமாக ஓரமாகப் படுத்துறங்குகிறான். அவனைக் கவனியாமல் கோயிலைப் பூட்டி விட்டுச் சென்று விடுகிறார்கள் அர்ச்சகர்கள். 

கோபத்துடன் வந்த அம்பிகை தன் வாயிலிருந்த தாம்பூலத் சாற்றை உமிழ, அது வாய் திறந்து படுத்திருந்த வரதனின் வாயில் விழுகிறது. அந்த நிமிஷத்திலிருந்து வரதன் கவிபுனையும் ஆற்றல் பெற்றான். அவரே "காளமேகப் புலவர்' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

சிலேடை நயம் மிகுந்த அவரது பாடல்கள் இன்றும் தமிழ் இலக்கியத்தில் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. 

"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி 

துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி 

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த 

தெத்தாதோ தித்தித்த தாது?' 

- என்ற தகர வரிசையில் அமைந்த பாடல் அவரின் புலமைக்கு ஒரு சான்று. (பொருள்: தத்தித் தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை உண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினைத் தேடிச் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் தித்தித்தது?) 

கல்வி அறிவு இல்லாத ஒரு மடப்பள்ளி வேலையாளுக்கு கவி புனையும் ஆற்றல் கொடுத்தது அவளின் கருணையே.

இத்தலம் சோலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. முற்காலச் சோழர்களில் ஒருவரான கோட்செங்கட்சோழன் என்பவரால் கட்டப்பட்டது இக்கோயில். சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. 

மொத்தம் ஐந்து சுற்றுகள் கொண்ட கோயிலில், நான்காவது திருச்சுற்றில் உற்சவமும், தேரோட்டமும் நடைபெறும். இக்கோயிலில் நாவல் மரமே தல விருட்சமாக விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் சக்தியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பிகை சிவனைப் போலவும், சிவன் அம்பிகையைப் போலவும் வேடமிட்டு வந்து பிரம்மனின் சாபம் தீர்த்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

"துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் 
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் 
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவர்க்கு 
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே'
-என்று  இத்தலத்து ஈசனைப் புகழ்ந்து போற்றுகிறார் திருநாவுக்கரசர்.

சிலந்தியும், யானையும், சாப விமோசனம் பெற்று மறுபிறவி எடுத்த தலம். அன்னை ஞான உபதேசம் பெற்ற தலம், நீர் லிங்கம் உடைய தலம் என்று பல சிறப்புகளைப் பெற்றது திருவானைக்காவல். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT