வெள்ளிமணி

தாழ்த்திக் கொள்வோரை இறைவன் உயர்த்துகிறான்

8th Jan 2021 01:04 PM

ADVERTISEMENT

 

மனிதனின் உள்ளம் விந்தையானது.  அது ஆசைகளின் பக்கம் தூண்டப்பட்டதாகவே இருக்கிறது.  ஆசை இரண்டு வகைப்படுகிறது.  ஒன்று: மறுமைக்கான ஆசை, மற்றொன்று: மனதின் ஆசை. 

ஒரு முஃமின் இவ்வுலகத்தைத் தற்காலிக தங்குமிடமாகக் கருதி, நிரந்தரமாகத் தங்கப்போகும் சுவர்க்கத்திற்கான ஆசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவனாக இருக்க வேண்டும்.  அதற்காகவே இஸ்லாம் என்ற மார்க்கத்தின் மூலம் நெறிமுறை வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கிறது.  எப்போது ஒருவன் தன் மன ஆசைகளை மறுமைக்காக ஆக்குவானோ, அல்லாஹ்வின் தனிப்பட்ட உதவி அவனுக்குக் கிடைக்க ஆரம்பிக்கிறது.

நல்லெண்ணம் கொள்ளும்படி அடியார்களுக்கு அல்லாஹ் ஏவியிருக்கிறான்.   எந்த ஒரு செயலைச் செய்யும் முன் அது அல்லாஹ்வோடு சேர்த்து வைக்கக் கூடியதா? அல்லது மன ஆசைகளை மட்டுமே நிறைவேற்றக்கூடியதா? என்று தன்னையே பரிசோதித்துப் பார்ப்பது முஃமினுக்கு அழகாகும்.

ADVERTISEMENT

"யார் தன்னுடைய மனதைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டாரோ, அவர் வெற்றி அடைந்து விட்டார்' என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.  மனம் இயல்பிலேயே ஆசையின் பக்கம் தூண்டப்பட்டதாகவே இருக்கிறது.  அதிகமாக கலிமாவை ஓதுவதும், அதிகமாக குர்ஆனை ஓதுவதும் மன நோய்களை நீக்கி வைக்கும்.

முகஸ்துதி அதாவது பிறரது முகத்துக்காக ஒரு காரியத்தைச் செய்தலும், பிறர் கேலி செய்வார்களே என்று நல்லவைகளைத் தவற விடுவதும் அல்லாஹ்விடம் கோபத்தை உண்டாக்கிவிடும். 

அதுபோல், தற்பெருமை அதாவது பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தன்னைப் பெரியவனாகக் கருதுதல், உலக வசதிகளை வைத்தோ அல்லது படிப்பு, அந்தஸ்து, பதவி போன்றவைகளைக் கொண்டோ பாகுபாடு பார்த்தல் தவிர்க்கப்படவேண்டியவை.

முகஸ்துதி, தற்பெருமை இவை இரண்டும் பெரும் பாவத்தைப் போன்றது.  இப்லீஸ் சுவனத்திலிருந்து வெளியேறியது இந்தத் தீய எண்ணங்களால்தான். 

"மனிதன் மரணிக்கும்போது அவன் தேடிய அனைத்தும் அவனை விட்டு அகன்று வேறொருவரிடம் சென்று விடும்' என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  

யார் தன்னை அல்லாஹ்விடம் தாழ்த்திக் கொள்கிறார்களோ, அவர்களை அல்லாஹ் உயர்த்துகிறான்.  யார் தன்னை மக்களிடம் உயர்த்திக் கொள்கிறார்களோ, அவர்களை அல்லாஹ் தாழ்த்தி விடுகிறான்.  நம்மிடம் உள்ள அனைத்தும் சோதனைக்காகக் கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அருளே தவிர, சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காக அல்ல.

உள்ளத்தைக் கவனிக்காமல் விட்டு விட்டால், அது கெட்ட எண்ணங்களால் சூழப்பட்டுவிடும். அவசியமில்லாத அதிகப் பேச்சு, தர்க்கம் செய்வது, கேட்காமலேயே வலியச்சென்று அபிப்பிராயம் சொல்வது, புறம், பொய், கோள் பேசுவது போன்றவை உள்ளத்தின் உயிரோட்டத்தைக் கெடுத்துவிடும்.  மேலும், இவை வணக்கங்களில் சோம்பலை ஏற்படுத்துவதோடு, இபாதத்தின் இன்பத்தை இல்லாமல் ஆக்கிவிடும்.

அல்லாஹ்வின் பெருமைகளைப் பேசுவது வழிபாடு; தன் பெருமைகளைப் பேசுவது பாவம்.  எனவே நாவை அல்லாஹ்வின் தியானத்தைக் கொண்டு செழிப்பாக்குவதால் உள்ளம் தூய்மை அடைகிறது.
செயல்கள் எந்த எண்ணத்தில் செய்யப்படுகிறதோ, அந்த எண்ணப்படியே பிரதிபலன்கள் கிடைக்கும்.

உள்ளம் சம்பந்தமான அறிவும், அதிலுள்ள நோய்களான பொறாமை, முகஸ்துதி போன்றவைகளை இனங்கண்டு, அவற்றைக் களைவது கடமையான செயல்களில் உள்ளதாகும்.  ஏனெனில், பொறாமையையும், முகஸ்துதியையும் அல்லாஹ் குர்ஆனில் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்துள்ளான் என இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் உபதேசிக்கிறார்கள்.

-ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT