வெள்ளிமணி

கல்லெறிந்து கடவுளை வழிபட்ட நாயனார்!

8th Jan 2021 01:01 PM | - எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார். இவர் காஞ்சிபுரத்தை அடுத்த திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தார். பிறப்பு - இறப்பு என்று அடுத்தடுத்து ஏற்படும் நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டி, அதற்கு உரிய மார்க்கம் எதுவென அறியும் பொருட்டு, அவ்வமயம் காஞ்சியில் வாழ்ந்து வந்த பௌத்த சமயத் தலைவர்களை அணுகினார். பௌத்தர்கள் தமிழகத்தில் "சாக்கியர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். அதனால் சாக்கியர்களை அடைந்த நாயனாரும் "சாக்கியர்' என்ற பெயரில் விளங்கினார்.

பின்னாளில், தான் விரும்பிய மார்க்கத்தை அடைய இந்து சமயத்தின் சைவநெறியே உண்மையான நெறி என்று கண்டுகொண்டார். "எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்த கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும்' எனத் துணிந்து, புத்த பிட்சுவுக்குரிய உடை முதலியவற்றை நீக்காமலேயே, "நாள்தோறும் சிவலிங்கத்தை வணங்கிய பின்பே உணவு உண்ண வேண்டும்' என்ற நியமத்தை தீவிரமாகப் பின்பற்றி வந்தார். 

ஒரு நாள் ஒரு புதிய இடத்தில் சிவலிங்கத்தினைக் கண்டார். பேரானந்தம் அடைந்தார். இன்னது செய்கிறோம் என்று அறியாதவராகி, பக்கத்தில் இருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அதனையே மலராகப் பாவித்து சிவலிங்கத்தின் மீது அர்ச்சிப்பது போல் எறிந்தார்! சிவபெருமானும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டார். பின்வரும் நாள்களிலும் இச்செயலையே தொடர்ந்தார்.

ADVERTISEMENT

ஒருநாள் இறைவன் திருவருளால் வழக்கத்தை மறந்து  உண்ணத் தொடங்கியவர், "எம்பெருமானைக் கல்லெறிந்து வழிபட மறந்தேனே' என்று பதறியவராய் உண்ணாமல் எழுந்து விரைந்து சென்று வழக்கம் போல் கல்லை எறிய, அக்கணமே சிவபெருமான் உமாதேவியுடன் காட்சியருளினார்.  ஈசனின் அருட்பார்வையில் சாக்கிய நாயனாரின் பிறவித்தளை நீங்கியது. பெறுவதற்கு அரிய மோட்சம் அவருக்கு கிட்டியது. 

திருமுறைகளும் சாக்கிய நாயனார் புகழைப் பெரிதும் போற்றுகின்றன. "கல்லாலெறிந்த பொல்லாப் புத்தன் - நின்னினைந்து எறிந்த அதனால் - அன்னவன் தனக்கும் அருள் பிழைத்தின்றே' என்று பட்டினத்து அடிகள் தனது திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் அருளியுள்ளார். 

சாக்கிய நாயனார் வரலாற்றுடன் தொடர்புடைய திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் (வீராட்டகாசம்), பெரிய காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. கொங்கண முனிவர் வழிபட்ட தலம். இங்குள்ள சிவலிங்கத்தின் மீதுதான் கல்லெறிந்து வழிபட்டார் சாக்கிய நாயனார் என்பர். அவர் முக்தி பெறுவதற்கு முன் கடைசியாக எறிந்த "கல்' பக்தர்கள் வழிபட ஏதுவாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும்.

தெய்வத்தின் அன்புக்கு ஓர் உதாரண புருஷராக விளங்கிய சாக்கிய நாயனாரின் குருபூஜை, இத்திருக்கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி -12)  மார்கழி - பூராடம் நட்சத்திரத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களுக்கு: வி.சண்முகம் குருக்கள்: 9444450959.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT