வெள்ளிமணி

ஆன்மிக சிறப்பின் சாரம் அகத்தீசுவரரின் அருட்கோலம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தில் "சாரம்' என்ற ஊரில் சிறப்புமிக்க அகத்தீசுவரர் திருக்கோயில், சென்னை } விழுப்புரம் நெடுஞ்சாலையில் திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆன்மிக சிறப்பின் சாரம்: சாரம் என்ற இவ்வூர்  சிறிய ஊராக விளங்கினாலும், வரலாற்றுச் சிறப்புடையது. இவ்வூரில் மூன்று சித்தர்களின் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன. திருமூலர் வழியில் வந்த சச்சிதானந்த சுவாமிகள், மகான் முத்துராமபிரம்மம் மற்றும் மதுரை சீடர் சுவாமிகள் ஆகியோரின் ஜீவசமாதிகள் சிறப்பாக வழிபடப் பெறுகின்றன. 

ஊரின் மேற்கே பெரிய ஏரி அமைந்து, வேளாண்மைக்கு பெரிதும் உதவுகிறது. மேற்குத் திசையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 
வடகிழக்கு மூலையில் அகத்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த கோயில். பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இக்கோயில் சிறந்து விளங்கியதற்குச் சான்றாக நிருபதுங்க வர்மனது (கி.பி. 894) கல்வெட்டு காணப்படுகிறது. 

சாரம் ஊரைச் சேர்ந்த பெருநம்பி நாகராயன் என்பவர் கோயில் நிர்வாகம் செய்தவர்களிடம் இறைவனுக்குப் படைப்பதற்காக அரிசி தானம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது. பல்லவர் காலத்தில் இக்கோயில் செங்கற்கோயிலாக விளங்கியிருக்க வேண்டும். பின்னர் சோழர் காலத்தில் கற்கோயிலாக (கற்றளி) மாற்றப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

கோயிலின் அடித்தளத்தில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழனது (கி.பி. 1178 }1218) கல்வெட்டில் "சாரமான ஜெயங்கொண்ட சோழநல்லூர்' என்று இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. மேலும் இக்கோயிலில் விளக்கு எரிக்க கோயிலை நிர்வகித்த அந்தணர்கள் வசம் பொருள் அளித்த செய்தியை கல்வெட்டு மூலம் அறிகிறோம். இக்கல்வெட்டில் "திருவேகம்பமுடைய நாயனார்' என்ற இறைவன் பெயரும் காணப்படுகிறது. 

கோயிலின் திருச்சுற்றில் - வடக்கில் குபேரலிங்கமும், தென்கிழக்கு மூலையில் அக்னிலிங்கமும் மேற்கூரை இல்லாமல் காணப்படுகின்றன. 

இறைவன் அகத்தீசுவரர் கருவறையில் லிங்க வடிவிலே எழுந்தருளி அருள்புரிகின்றார். 

நுழைவு வாயிலின் இருபுறங்களில் பதஞ்சலி முனிவரும் } வியாக்ரபாதரும் வழிபடும் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

முன் மண்டபத்தில் விநாயகர், மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுருகப்பெருமானின் அழகிய தெய்வ வடிவங்கள் அமையப் பெற்றுள்ளன.

சிவன் சந்நிதிக்கு எதிரில் நந்தியம்பெருமான் கம்பீரமாகக் காட்சி தருகிறார். பல்லவர் கால கலைப்பாணியுடன் கழுத்தில் மணிகளடங்கிய மாலை அணிந்து, கூர்மையான கண்களுடன், இறைவனின் அருட்கோலத்தை நோக்கிய வண்ணம் எழிலாக அமர்ந்துள்ளார். 

நந்தியம்பெருமான் அமர்ந்துள்ள கற்பலகையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பீடத்தில் விக்கிரமசோழன் என்ற பெயரும் காணப்படுகிறது. பிரதோஷ நாளில் ஊர்மக்கள் சிறப்பாகப் போற்றி வழிபடுகின்றனர்.

இறைவன் சந்நிதிக்கு எதிரே, தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் "அகிலாண்டேசுவரி' என்ற பெயர் பெற்று விளங்குகிறாள். 

அம்பாள் நின்ற கோலத்தில் உயர்ந்த ஜடாமுடி அலங்காரத்துடன், நான்கு கரங்களில், மேலிரு கரங்களில் அட்சமாலையும், தாமரை மலரையும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கி, இதழ்களில் இள நகையுடன், கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அற்புதக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். 

அகிலாண்டேசுவரி ஞானமும் } செல்வ வளமும் வழங்கும் அடையாளமாகவே, தனது கரங்களில் அட்சமாலையும், தாமரை மலரையும் தாங்கியருள்கிறார். 

இத்தகையச் சிறப்பு வாய்ந்த சாரம் அகத்தீசுவரர் கோயிலில்,  அறநிலையத்துறை ஒப்புதலுடன் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பரிவார ஆலயங்கள் மற்றும் கருவறை விமானத்தில் கலசம் அமைப்பது போன்ற பல இறைபணிகள் நிறைவுற்றபின், குடமுழுக்கு நடைபெற வேண்டியுள்ளது. 

பக்தியின் சாரமாக விளங்கும் சாரத்தில், சிறப்புடன் விளங்கும் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகத்தீசுவரர் திருக்கோயில் திருப்பணியில் நாமும் பங்கு கொண்டு இறையருள் பெறுவோம்! தகவல் தொடர்புக்கு: டி. தனசேகர் } 9442695353 / 9488782383.

-கி. ஸ்ரீதரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT