வெள்ளிமணி

வெளிநாடுகளில் மாசி மகம்!

26th Feb 2021 03:07 PM

ADVERTISEMENT

 

புத்தரால் உருவான புத்த மதம் இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், மியான்மர், இலங்கை, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பரவியுள்ளது.

புத்த மதத்தினரின் முதன்மைப் பண்டிகையாக "புத்த பூர்ணிமா' திகழ்கிறது. இந்த நாளில்தான் அவரது பிறப்பு, அவர் ஞானம் பெற்றது, அவரது இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. 

புத்த பூர்ணிமாவைத் தொடர்ந்து புத்த மதத்தினரின் இரண்டாவது பெரிய பண்டிகையாக மாசி மக பூஜை விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் வரக் கூடிய இந்தப் பண்டிகை, கம்போடியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் புத்த மதத்தினரால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

புத்தருக்கும் அவரது சீடர்களான 1,250 பேருக்கும் இடையே முதல் உபதேசம் நிகழ்ந்ததை இந்தப் பண்டிகை குறிப்பதாகக்  கூறப்படுகிறது. தற்போதைய பிகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கீர் நகருக்கு அருகே உள்ள மூங்கில் வனத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  

இந்த தினத்தில்தான் மற்றவர்களுக்குத் தீமை செய்யாதிருத்தல், மனத் தூய்மை, தவம் ஆகிய மூன்று கோட்பாடுகள் வகுத்தளிக்கப்பட்டன. எனவேதான், தாய்லாந்தில் மாசி மக பூஜை தினத்தை "புத்த துறவியர் தின'மாகக் கொண்டாடுகின்றனர். 

மாசி மக பூஜைக் கொண்டாட்டத்தை அங்கீகரித்து, அரசு சார்பில் விழா நடத்துவதற்கு தாய்லாந்து மன்னராக இருந்த நான்காம் ராமா கடந்த 1851}இல் உத்தரவிட்டார். தாய்லாந்தில் இருந்து இப்பண்டிகைக் கொண்டாட்டம் மற்ற தெற்காசிய நாடுகளுக்குப் பரவியதாகத் தெரிகிறது.

இந்த நாடுகளில் வாழும் புத்த மதத்தினர் மாசி மக பூஜை நாளில் புத்தர் கோயில்களுக்குச் சென்று, துறவியருக்கு உணவு உள்ளிட்டவற்றை தானமாக அளித்தல், தியானம் செய்தல், போதனைகளைக் கேட்பது ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர். 

-சி.விஜயசேகர்

Tags : மாசி மகம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT