வெள்ளிமணி

மன்னிப்பின் மகத்துவம்!

26th Feb 2021 02:48 PM

ADVERTISEMENT


யூதரினச் சட்டங்கள் எல்லாம் நண்பனுக்கு அன்பு, பகைவருக்கு வெறுப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னும் வகையில் பழிவாங்கும் சட்டங்களாக இருந்ததை மாற்றிடப் போராடினார் இயேசு. அதனாலேயே அத்தகைய சட்டங்களை புறந்தள்ளிவிட்டு அன்பின் சாரத்தில் அவர் வடித்தெடுத்த புதிய நியமங்களை மானுடத்திற்கு வழங்கினார்.

"ஒவ்வொரு மனிதனும் தன் பகைவருக்காகவும் மன்றாட வேண்டும்' என்றார். "உன் உள்ளாடையை பறிக்க வழக்காடுபவனுக்கு, உன் மேலாடையையும் தயங்காமல் தந்துவிடு' என்றார். ஆம்! பறித்தவனுக்கு பழைய ஆடை மட்டுமே மிஞ்சும்; கொடுத்தவனுக்குள் பேரானந்தம் அல்லவா பெருக்கெடுக்கும்.

ஒருமுறை ஆலயத்தில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார் இயேசு. மறைநூல் வல்லுநர்களும், பரிசேயர் பலரும் 
ஒரு பரத்தையை கையும் களவுமாக பிடிபட்டதாக சொல்லி,  இயேசுவின் முன் கொண்டுவந்து  நிறுத்தினர். மோசேயின் சட்டத்தைச் சுட்டி ""இப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்கள். 

கனிந்த இயேசு மெüனமாகக் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். பரிசேயர்கள் விடாமல் அவரிடம் விடை கேட்டனர். அவர் நிமிர்ந்து பார்த்து, ""உங்களில் பாவம் இல்லாதவர் இப்பெண்மேல் கல் எறியட்டும்!'' என்றார் (யோ.8:7). இதைக் கேட்டவுடன் ஒருவர் பின் ஒருவராய் அவ்விடம் விட்டு அகன்றார்கள்.

ADVERTISEMENT

கடைசியாக அப்பெண் மட்டும் அங்கே நின்று கொண்டே இருந்தாள். 
இயேசு அவளிடம் ""அம்மா! போய் நேர்பட வாழும்'' என்று சொல்லி அனுப்பி வைத்தார். மன்னிப்பின் மாண்பினை இயேசு புதிய முறையில் போதித்தார்.
இயேசு தன் வாழ்வின் இறுதி நிமிடத்திலும் மன்னிப்பின் ஆழ்ந்த அர்த்தத்தை மெய்ப்பித்தார். கல்வாரிச் சிறு மலையில் வேதனைச் சிறுமையின் வடிவமான சிலுவை மரத்தில், செந்நீர் மலராய் தேவன் தொங்கிக் கொண்டிருந்தார். 

கசையடி, முள்முடி, கை கால்களில் புதைந்த ஆணிகள் } இப்படி மரணத்தை நெருங்கும் நேரத்தில் இந்த ரணங்களின் வேதனை. 
சுற்றிலும் அவரது ரத்தம் ரசித்த யூதர்களின் ஏளனச் சிரிப்பு. அப்போதும் ""தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை'' என்றார் இயேசு (லூக். 23:34). 

இதிலிருக்கிற ஓர் உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும். ஒரு வன்மனக் கள்வனை விடுதலை செய்துவிட்டு, உரோமையரின் கொடுமைக் கொற்றத்திலிருந்து யூதரினத்தின் மீட்புக்காக வாழ்ந்த இயேசுவை கொன்றே தீர வேண்டும் என்று நின்றவர்களுக்காக இறைவனிடம் மன்னிப்பை யாசித்த அவர், அதற்கு முன்னரே மனிதம் மறந்த அம்மனிதர்களை தன் மனத்தால் மன்னித்துவிட்டார் என்பதுதானே பொருள்.

மன்னிப்புக்கு இரண்டு முனை உண்டு. ஒன்று, பிழை இழைத்தவன் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது. இரண்டு, அந்தத் தவறினால் துயருற்றவன் தயங்காது மன்னிப்பது. முன்னது மனிதம். பின்னது இறையியல். இரண்டிலும் ஒரு வகை இன்பம் இருக்கிறது. இதை மனிதன் சுவைக்க வேண்டும். அப்போது தான் உலகம் மலரும். உண்மையான சொர்க்கமாகும்.  

- மோசே

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT