வெள்ளிமணி

முதல் திவ்ய தேசத்தில் வைகுண்ட ஏகாதசி!

3rd Dec 2021 06:00 AM | -ஆர்.அனுராதா

ADVERTISEMENT

 

திருவரங்கம், 108 திவ்யதேசங்களில் முதன்மைத் தலம். 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள திவ்யதேசம். இத்திருத்தலத்தில், வருடத்தில் 320 நாள்களுக்கும் மேலாக திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வடமொழி வேதங்களுக்கு நிகராக திராவிடவேதம்எனப்படும். இதனை முன்னிலைப்படுத்த உடையவரால் முக்கிய திருவிழாவின் முன்னும்-பின்னும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு முன்னுரிமை கொடுத்து முதலில் துவக்கப்பட்டது.

பின்னர் அனைத்து திவ்ய தேசங்களிலும் தமிழுக்கு முதன்மையும் ஏற்றமும் கொடுக்கும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை "அத்யயன உற்சவம்' அல்லது "திருவாய்மொழித் திருவிழா' அல்லது "நாலாயிர திவ்யபிரபந்தத் திருவிழா' என்று தமிழுக்குப் பெருமை அளித்து குறிப்பிடப்படுகிறது.

ADVERTISEMENT

உத்தராயணம், தட்சிணாயணம் என இரு அயணங்கள் நமது வழக்கில் உள்ளன. உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப் பொழுதாகவும் கணக்கிடப்படும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலம் உத்தராயணம் எனவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலம் தட்சிணாயனம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

நமது ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். உத்தராயணம் தை மாத துவக்கம் என்பதால், அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் தேவர்களின் "பிரம்ம முகூர்த்த நேரம்' எனப்படும் தேவர்களின் அதிகாலைப் பொழுதில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசையோடு தாளம் சேர்த்து இசைப்பது விரும்பிய பலன் தரும். அதனால் இவ்விழா பொதுவாக மார்கழி மாதம் துவங்கி கொண்டாடப்படும்.

21 நாள்கள் நடைபெறும் இந்த அத்யயன உற்சவத்தில் ஏகாதசிக்கு முன்பு வரும் வளர்பிறை முதல் நாள் தொடங்கி, முதல் 10 நாள்கள் 'பகல்பத்து' என்றும், ஏகாதசி திதி முதல் தேய்பிறை பஞ்சமி வரையுள்ள 10 நாள்கள் "இராப்பத்து' எனவும்கொண்டாடப்படுகிறது .

பகல்பத்து தினங்களில், திருப்பல்லாண்டு முதலாயிரம், மதுரகவியின் கண்ணிநுண் சிறுதாம்பு, திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகக் கூடுதல் இரண்டாயிரம் பாசுரங்களும் இறைவனுக்கு பாமாலையாகச் சாற்றப்படும்.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய அரையர்கள் கைங்கரியம் நடக்கும் திருத்தலங்களில் இவை, அபிநய நடனத்துடன் இசைத்து ஒலிக்கப்படும்.

நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களும் இராப்பத்தில் இசைக்கப்பட்டு, அரையர் சேவையுடன் சமர்ப்பிக்கப்படும்.

21-ஆம் நாள் இரண்டு, மூன்று, நான்காம் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரிய திருமடல், சிறிய திருமடல், ராமாநுஜ நூற்றந்தாதிமுதலியவை சேவிக்கப்படும்.

இந்த அத்யயன நாள் வழிபாட்டு முறைகள் அனைத்தும் திருவரங்கத்தில் ஸ்ரீராமாநுஜர் காலம்தொட்டு துவங்கி நடந்து வந்தாலும், பிற கோயில்களிலும் இந்தமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் ராமாநுஜர் உருவாக்கிய இந்த நடைமுறை சில ஆண்டுகள் கழித்து ஒருமுறை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாண்டு கார்த்திகை மாதம் அத்யயன உற்சவம் துவங்கி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பும், ராப்பத்து உற்சவமும் ஒரு வரலாற்று நிகழ்வைப் பின்பற்றி நடைபெற்றது.

பூபதித் திருநாள்: இத்திருக்கோயிலில் அத்யயன உற்சவத்தைத் தொடர்ந்து தைமாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவை "பூபதித் திருநாள்' என்று அழைக்கின்றனர். இந்த உற்சவத்தை முதன் முதலில் ஸ்ரீராமபிரானே அயோத்தியில் நடத்தியதாக ஐதீகம்.

"பூமகளின் பதி'யாகிய திருமாலுக்கென நடத்துவதால் "பூபதித் திருநாள்' என அழைப்பதாகவும் கூறுவர். இக்ஷுவாகுவின் குலதனமாகிய ஸ்ரீரங்கநாதரை, அயோத்தியிலிருந்து ஸ்ரீராமபிரான், விபீஷ்ணன் இலங்கையில் வைத்து பூஜை செய்வதற்காக விமானத்துடன் கொடுத்தனுப்பிய போது, போகும் வழியில் அரங்கனே திருவரங்கத்தில் பள்ளி கொண்டார் என்பதனால், இந்த பூபதித் திருநாள் ராமபிரான் நடத்திய அதே தை மாத புனர்பூசத்தை பிரதானமாகக் கொண்டு இங்கும் தொடரப்பட்டது.

விஜயநகரப் பேரரசின் இரண்டாம் ஹரிஹர புக்கரின் மகனாகிய வீர பூபதி உடையார் என்பவரால் 1413-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தேர் உற்சவம் நடத்தப்படுகிறது.
இந்தத் திருநாளில் மட்டும்தான் நம்பெருமாள், உபய நாச்சிமார்களுடன் தேரில் உற்சவம் கண்டருள்வார்.

திருவரங்கம் கோயிலுக்கென அனைத்து உற்சவங்களும், திருநாள்களும் கணக்கிட்டு, ஒவ்வோர் ஆண்டும் தனி பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு, அதன்படியே வைபவங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னோர் காட்டிய வழியில் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கத்தில் மட்டும் அத்யயன உற்சவம் - வைகுண்ட ஏகாதசி விழா தொடர்ந்து நடக்கிறது.

கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்வுகள்: டிச. 3-ஆம் தேதி திருநெடுந்தாண்டகம், 4 -இல் பகல்பத்து (திருமொழித் திருநாள்) தொடக்கம், 13-இல் மோகினி அலங்கார சேவை, 14-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு, தொடர்ந்து திருவாய்மொழித் திருநாள் துவங்குகிறது.

19-இல் திருக்கைத்தல சேவையும், 21-இல் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 23-இல் தீர்த்தவாரி முடிந்து, 24-இல் நம்மாழ்வார் மோட்சம் எழுந்தருளல் வைபவம் நடைபெறும்.

இந்நாள்களில் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சார்த்தியபடி சேவை சாதிப்பார். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அத்யயன உற்சவ சேவை கார்த்திகை மாதத்தில் துவங்குவதை இனி தரிசிக்க வேண்டுமெனில் 19 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்! அரங்கம் ஏகுவீர்; அரங்கன் அருள் பெறுவீர்!

தொடர்புக்கு: 0431-2432246.

 

19 வருடங்களுக்கு ஒருமுறை..!


திருவரங்கத்தில் விஜயநகரப்பேரரசு காலத்தில் தை பிரம்மோற்சவம் ஏற்படுத்தப்பட்டபோது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தைத் திருநாளும் வந்ததால் எதைக் கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தது. 

அச்சமயம் மணவாள மாமுனிகள் திருவரங்கத்தில் இருந்தார். 

அவர், இதைப் போல் வைகுண்ட ஏகாதசி  (பகல்பத்து, இராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் கேட்டு, அவர் நியமனத்தின்படி செயல்படுத்தினார். 19 வருடங்களுக்கு ஒருமுறை இதைப் போல வரும் என அறிந்து, மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தினார். அவ்வகையில் அவ்வாண்டு தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைத்தேர் உற்சவம் நடைபெற்றது. 

மணவாள மாமுனிகள் வகுத்துக் கொடுத்த பாதையில், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் -  வைகுண்ட ஏகாதசி வைபவம் டிச. 3-ஆம் தேதி முதல் துவங்கி, 24-ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெறுகிறது. 

Tags : Vaikunda Ekadasi vellimani divine land
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT