வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 171

3rd Dec 2021 06:00 AM | டாக்டர் சுதா சேஷய்யன்

ADVERTISEMENT

 

பொருநையாளின் பெருமையை உரைக்கிற "தாமிரவருணி மஹாத்மியம்' என்னும் புராணம்,  ஸ்ரீவேத வியாசரால் அருளிச் செய்யப்பட்டதாகும். 64 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புராணத்தின் தகவல்கள், பொருநையாள் என்பவள் ஏதோ நதியன்று, சாக்ஷôத் ஆதிபராசக்தி என்பதை உணர்த்தும். 

உலகைச் சமன்படுத்துவதற்காகத் தென்திசைக்கு அகத்தியரைச் சிவபெருமான் அனுப்பினாரல்லவா? அப்போது, தம்முடைய தர்மபத்தினி லோபாமுத்திரையோடு மலய பர்வதத்தை  அடைந்தார் அகத்தியர் (பொதிய மலைப் பகுதிகளுக்கே மலய பர்வதம் என்றும் பெயர்). தும்புருவும் நாரதரும் அகத்தியரைச் சந்தித்தனர். மலய பர்வத மன்னனின் மகளாகப் பொருநையாள் தோன்றியுள்ளதைத் தெரிவித்தனர். மன்னனையும் மகளையும் உடன் அழைத்துக் கொண்டு, அனைவரும் மலய பர்வதத்திற்கு அருகிலுள்ள திரிகூடமலையை அடைந்தனர். திரிகூடத்தில்தான் திருக்குற்றாலம். திரிகூடேச்வரரான குற்றாலநாதரை வணங்கினர். சித்திரசபை நடராஜரையும் வழிபட்டனர். 

இந்தத் தருணத்தில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட, ஆதி பராசக்தியே நடுநிலைமை கொண்டு தீர்ப்பளித்தாள். பிரளயம் முடிந்து சிருஷ்டி மீண்டும் தொடங்கிய நிலையில், சத்வ, ரஜோ, தமோ குணங்களை வெளிப்படச் செய்து, அவற்றின் வழி பிரம்ம, விஷ்ணு, ருத்ர தேவர்களைத் தோற்றுவித்து, முத்தொழில்களையும் முறையே அவர்களிடம் ஒப்புவித்த ஆதிப்பரம் பொருளான பராசக்தி, செண்பகா தேவி என்னும் வடிவில், திரிகூடமலையில் வாசம் செய்யும் அற்புதத்தை அப்போது தும்புருவும் நாரதரும் நினைவு கூர்ந்தனர். உரையாடிக்கொண்டிருக்கும்போதே, இதற்கெல்லாம் முன்னர் ஒருமுறை தேவி உரைத்ததையும் எண்ணிப் பார்த்தனர். 

ADVERTISEMENT

"யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பூதலே
ததா ததா நுரூபேண நாசயிஷ்யாமி விப்லவம்'

(எப்போதெல்லாம் பூமியில் தர்மச் சிதைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நல்லவர்களுக்கு உதவியாகவும் அனுகூலமாகவும் இருந்து துன்பத்தை  அழிப்பேன்). 

அடுத்த நாள் அதிகாலை. சினனஞ்சிறுமியாக உறங்கிக்கொண்டிருந்த தாமிரவருணியை  அகத்தியர் சுப்ரபாதம் இசைத்து எழுப்பினார். 

"சிவபக்திமாயே, புண்யே, விஷ்ணு பக்தி ப்ரவாஹினீ, ப்ரஹ்ம சக்தி ரஸாஸி, த்வம் உத்திஷ்ட அம்ருதவாஹினீ அன்னதா வஸூதா புரீபுண்யதா மஜ்ஜதாம் ந்ருணாம் த்வமேவ பரமா சக்தி: ப்ரஸீத மலயாத்மஜே (அமிர்தம் பெருக்குபவளே, சிவபக்தியில் தோன்றி, விஷ்ணு பக்தியில் பிரவாகமெடுத்து, பிரம்மசக்தியில் சுவை கொண்டவளே! பள்ளி எழுந்தருள்வாய் பெண்ணே! உன்னில் நீராடுபவர்களுக்கு அன்னமும் செல்வமும் புண்ணியமும் வழங்குபவளே, மலயராஜன் மகளே, அருள் தாராய்!) - இவ்வாறு அகத்தியர் துயிலெழுப்ப, வேகமாக எழுந்த பொருநையாள், இன்னும் வேகமாகக் குதித்தோடினாள். கால் சதங்கைகளின் நவமணிகளும் வேகத்தில் சிதறின. ரத்தினம் ஒன்றில், தாமிரவருணியின் பிம்பம் பிரதிபலித்தது. அகத்தியர் அதன் அழகை நோக்க, பொருநையாளின் வடிவுடன் தேவி பராசக்தியின் திருவுருவமும் அதனில் தெரிந்தது. 

பொருநையாளும் பராசக்தியும் ஒன்றெனவே அகத்தியர் தெளிந்த அவ்வேளையில், பராசக்தி தன்னுடைய மலர்க்கரத்தை அசைத்தாள். வெவ்வேறு நவமணிகளின் பல்வேறு வண்ணங்களும் சேர்ந்து ஜாஜ்வல்யம் காட்ட, ரத்தினத்திலிருந்து பெருக்கெடுத்த சித்திரா நதிப்பெண்ணாள், மலை முகடுகளில் குதித்து ஓடத் தொடங்கினாள். தன்னுடைய தங்கை நல்லாள் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்த பொருநையாள், விஷ்ணுவனத்தில் (இப்போதைய சீவலப்பேரி) வந்து தன்னுடன் இணைந்து கொள்ளும்படியாகக் கூறி அனுப்பினாள். 

சித்திரா பெளர்ணமி நாளில் தோன்றிப் பெருக்கெடுத்தவள் சித்திரா. இவளையே "சிற்றாறு' என்றும் கூறுகிறார்கள். வீட்டில் அண்ணன் இருக்கும்போது, தம்பியைச் சின்னவன் என்றும் சின்னப்பிள்ளை என்றும் அழைப்பதுபோல், மூத்தவளான பொருநையாளும் முன்னர், இவள் சிற்றாறு (சிறிய ஆறு = சிறியவள்) ஆனாள் போலும்! 

திருக்குற்றால மலையில் (திரிகூடமலையும் இதுதான்) தோன்றி, சீவலப்பேரி வரை சுமார் 80 கி.மீ. தொலைவுக்குப் பாய்கிறாள் சிற்றாற்றுப் பெண்ணாள். 

பொருநையாளின் இளைய சகோதரி என்பதாலோ, தோன்றும் போதே வேகத்தோடு தோன்றியவள் என்பதாலோ, இவளின் ஓட்டமும் ஆட்டமும் சற்றே கூடுதல் வேகம் கொண்டவை. அவ்வப்போது ஆர்ப்பாட்டமாகக் கீழே விழுந்து அருவிகளையும் எழுப்புகிறாள். 

இவளின் போக்கில் அமைந்துள்ள தென்காசி மற்றும் இலஞ்சி ஆகிய ஊர்களில் சிற்றாற்று வீரியம்மன் கோயில்கள் இருக்கின்றன. இந்த அம்மன்களுக்கும் சிற்றாற்றுக்கும் என்ன தொடர்பு? 

தமிழ் மரபுக்கும் தமிழ்நாட்டு மக்களின் இயற்கை இயைபுக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையின் நெறி அமைப்புக்குமான மாட்சிமை மிக்க எடுத்துக்காட்டுகளே சிற்றாற்று வீரியம்மன்கள் எனலாம். 

எப்படி? 

தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய பாண்டிய மன்னர்களில், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவரே முதலாமவர் ஆவார். 1422 முதல் 1463 வரையான இவருடைய காலத்தில்தான் தென்காசித் திருக்கோயில் கட்டப்பெற்றது. 

இவ்வாறு கட்டப்பெற்றதன் பின்னணியில் சுவாரசியமான தகவல் உண்டு. சிவப்பரம்பொருள், இவருடைய கனவில் தோன்றி, சிற்றாற்றங்கரையில் தென்காசியில் திருக்கோயில் எழுப்புமாறு தெரிவித்தாராம். 

இதனையே தலையாய கடனாக ஏற்று, 17 ஆண்டுகள் பல்வேறு பணிகளை இயற்றி, இத்திருக்கோயில் கட்டுவிக்கப் பெற்றதாகத் தெரிகிறது.  

(தொடரும்)

Tags : vellimani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT