வெள்ளிமணி

ஓரிக்கையில் ஓங்கி நிற்கும் மகா பெரியவர் மணிமண்டபம்!

27th Aug 2021 01:04 PM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

"மஹா பெரியவர்' என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தவத்தாலும், பூஜைகளாலும், 
புண்ணிய தீர்த்த யாத்திரைகளாலும் தேசம் முழுவதும் சென்று 100 ஆண்டுகள் வரை அருள்பாலித்தவர். 

அவர் முக்தி அடைந்து 27 ஆண்டுகள் ஆகியும், இன்றும் நடமாடும் தெய்வமாகவும், பேசும் தெய்வமாகவும் இருந்து, எதிர்கால சந்ததிகளுக்கும் வழிகாட்டி வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இத்தகைய பெருமைக்குரியவருக்கு காலம் கடந்து நிற்கும் அளவுக்கு கருங்கல்லினாலான ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பிரதோஷ வெங்கட்ராமய்யர் என்பவர் மனதில் தோன்றியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீமகாலட்சுமி மாத்ரு பூதேஸ்வரர் என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில், மஹா பெரியவருக்கு தலைசிறந்த மணிமண்டபத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

 இந்த மணிமண்டபமானது, கம்பிகளே இல்லாமல் முழுவதும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டு, இன்றைய சிற்பக் கலைஞர்கள் பலரும் வியக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பாகும். 
ராஜகோபுரம், தீபஸ்தம்பம், மகா நந்தி மண்டபம், நூறு தூண்கள் கொண்ட மகா மண்டபம், ருத்ராட்ச மண்டபம், அர்த்த மண்டபம், நூறடி உயரம் கொண்ட விமானம், கர்ப்ப கிரகம், மதிற்சுவர் என ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.

 தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜர், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் போன்ற ஆலயங்களுக்கு கோபுரங்கள் கட்டும் காலத்தில் இரும்புக் கம்பிகள் கிடையாது. அவர்கள் எப்படி அஸ்திவாரங்களை அமைத்து கோயில்களைக் கட்டியிருப்பார்கள் என பல கிரந்தங்களிலும், நூல்களிலும் ஸ்தபதிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர். 

அக்கிரந்தங்களில் கூறியிருந்தபடி மண்ணின் தாங்கும் தன்மை போதுமான அளவு இல்லாமல் இருந்தால் அதை எப்படி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
  மணிமண்டபச் சிறப்பு: மஹா பெரியவர் சுவாமிகளின் வயதைக் குறிக்கும் வகையில் 100 எண்ணிக்கையிலான கல்தூண்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது மணி மண்டபம். இங்குள்ள 100 தூண்களில் இரு தூண்கள் குதிரையுடன் கூடியதாகவும், இரு தூண்கள் சிங்க முகத்தின் வாயில் உருளக்கூடிய கற்பந்துடன் கூடியதாகவும் அமைத்துள்ளனர். 

மண்டபத்தில் உள்ள 3 நுழைவு வாயில்களிலும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் 150 கிலோ எடையுடன் கூடிய பஞ்சலோக ஆலய மணியும் நிறுவப்பட்டுள்ளது.

 நந்தி மண்டபச் சிறப்பு: மிகுந்த வேலைப்பாடுகளுடன் 16 தூண்களை உடைய மண்டபத்தில் ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்தி சிலை உள்ளது. சுமார் 50 டன் எடையுள்ள ஒரே கல்லினால் ஆன நந்தியானது 15 அடி நீளம், 7 அடி அகலம், பத்தே முக்கால் அடி உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தில் உள்ள நந்தி பகவானும், மஹா பெரியவரும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி நிறுவப்பட்டுள்ளது.  

13 அடி உயரத்தில் மதிற்சுவரும், அதன் மீது முழுவதும் கருங்கற்களால்  ஆன 60 நந்தி சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. 130 அடி நீளம், 130 அடி அகலத்தில் 8 பட்டை வடிவில் அழகிய தெப்பக்குளம், மத்தியில் யாழி மண்டபத்தோடு அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த நூற்றாண்டின் கட்டடக்கலைக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக இம்மணிமண்டபம் திகழ்கிறது!

சாதுர்மாஸ்ய விரதம்: காஞ்சி சங்கர மடத்தின் 70 -ஆவது பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஓரிக்கை மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை கடந்த ஜூலை 24 -ஆம் தேதி தொடங்கினார். வரும் செப்டம்பர் 20 -ஆம் தேதியன்று இவ்விரதம் நிறைவுபெறும். அதுவரை விஜயேந்திரர் ஓரிக்கையிலேயே தங்கியிருப்பார். தொடர்ந்து, இவ்விரத நாள்களில் தினசரி மாலையில் ஓரிக்கை மணிமண்டபத்தில் பக்தி இன்னிசைக் கச்சேரிகளும், உபன்யாசங்களும் நடைபெற்று வருகின்றன..!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT