வெள்ளிமணி

அற்புதப் பலனளிக்கும் ஆவணி ஞாயிறு! - நாகர்கோவில் நாகராஜா கோயில்

20th Aug 2021 12:41 PM | இரா. இரகுநாதன்

ADVERTISEMENT

 

நாகத்துக்கென்றே தனிக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்த நாகராஜா ஆலயமாகும். கிழக்குப் பார்த்து அமைந்த கீற்றுக் கொட்டகைக் கருவறையில் நாகமே மூலவர். 

நாகர்கோவில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் அமைந்த இக்கோயிலில் கேரள தாந்தீரிக முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. தெற்கு கோபுரவாசல் வழியே தரிசனத்துக்குச் செல்வது நடைமுறையில் உள்ளது. 
கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜாவாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்திய பிறகு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

நாகராஜர் சந்நிதிக்கு வலப்புறத்தில், வாயு ரூப தனி சந்நிதியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அடுத்து அனந்தகிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். கோயிலின் நுழைவுவாயில் நேபாள பௌத்த விகாரைப் போன்று அமைந்துள்ளது.
கொடிமரமும் தல விருட்சமும்:
 
ஓடவள்ளி என்ற கொடி தல விருட்சமாகும். அனந்த கிருஷ்ணர் சந்நிதிக்கு நேராகவே கொடிமரம் இருக்கிறது. 

ஆண்டுதோறும் "தை' மாதத்தில் அனந்தகிருஷ்ணன் முன்னுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி, திருத்தேர் உட்பட பத்து நாள்கள் திருவிழா நடக்கும். தை மாத ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆராட்டு வைபவத்துடன் விழா நிறைவுறும். 

தல வரலாறு: புல், புதர், செடி, கொடிகள் என்று இருந்த காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருத்தியின் கையில் இருந்த அரிவாள் பட்டு, ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில் ரத்தம் பீறிட்டது. பயந்த அப்பெண், கிராம மக்களை அழைத்து வர, அந்த ஐந்து தலைநாகம் சிலையாக மாறியிருந்தது. 

கூரையே போதும்: அந்த நாகத்தை மக்கள், தென்னங்கீற்றால் கூரை வேய்ந்து வழிபட்டு வந்தனர். கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம், களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னன் பூதலவீர உதயமார்த்தாண்டன், தனது சரும வியாதி நீங்க, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி சிம்மத்தில் சூரியன் உலாவும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டதால், அவனது சருமநோய் தீர்ந்தது. 

இதனால் மகிழ்வுற்ற மன்னன் நாகராஜா கோயிலை கற்றளியாக கட்டித்தர முனைந்தான். அப்பொழுது, மன்னன் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் விரும்புகிறேன். அதை மாற்ற வேண்டாம்' என்று கூறியதால், இன்றும் மூலஸ்தானத்தின் மேற்கூரை தென்னை ஓலையால் வேயப்பட்டே வருகிறது. ஆண்டுதோறும் புதிய கூரை வேயப்படும் போது நாகம் காட்சி தருவது வழக்கம்.  

ஆவணி ஞாயிறு வழிபாடு: மன்னனின் நோய் தீர்த்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, பின்னர் மக்களாலும் பின்பற்றப்பட்டு, அன்று
முதல் இன்றுவரை ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு  நடைபெற்று வருகின்றது.நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கவும், நோய்கள் நீங்கவும் புற்று வழிபாடு செய்கின்றனர். 

நடை திறப்பு: அதிகாலை 4 மணிமுதல் பகல் 12 மணிவரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையும் கோயில் திறந்திருக்கும்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் ஆவணி ஞாயிறு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்..! 

மேலும் விவரங்களுக்கு: 04652232420 / 9486325623/


 

ADVERTISEMENT
ADVERTISEMENT