வெள்ளிமணி

எல்லாம் நிறைவேறிற்று!

DIN

அந்த முப்பத்து மூன்று வயது இளைஞரின் இறுதிப் பயணம் துவங்கிற்று. எந்த மக்களின் மாண்பினைக் காக்கும் நோக்குடன் வந்தாரோ அவர்தம் பழிச்சொல்லுக்கே ஆளாகி அந்நாள்களில் அவமானச் சின்னமாக கருதப்பட்ட ஒரு பாரமான சிலுவையைச் சுமந்தபடி இயேசு என்னும் அந்தக் கண்ணீர்க் காவியம் நடைபோட்டது. 

"நரிகளுக்கு வளைகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மனுமகனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை' (லூக். 9}58); இயேசுவைப் பின் தொடர விரும்பிய ஒரு மனிதனுக்கு அவர் கூறிய மறுமொழி இது.

ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த இறைமொழி வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பு, மனிதமும், புனிதமும் சங்கமித்த அவரது வாழ்க்கைப் பயணம், நிறைநாள் நிமிடங்கள், உயிர்ப்பு உள்ளிட்ட யாவும் நிறுவப்பட்டிருந்தது. 

இயேசுவின் பிறப்பு எந்த மாளிகையிலும் நடக்கவில்லை. மாறாக, மாடுகளடையும் குடிலில் அவர் பெற்றெடுக்கப்பட்டார். 

அதன் பின்னர் அவரது வாழ்வின் எந்த நொடியினைத் தேடிப் பார்த்தாலும் அவர் வாழ்வதற்கு ஓர் இல்லிடம் இருந்ததாய் குறிப்பேதும் இல்லை. பிறந்ததும் ஏரோதின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி இரவோடிரவாக எகிப்து நோக்கிய பயணம். 

ஊர் திரும்பி மக்களுக்காய் உழைக்க முனைந்த பின் உருமாற்றம் பெற்று மோசேயோடும், எலியாவோடும் பேசியது தாபோர் மலையில். இறைவேண்டலுக்காகத் தேர்ந்த இடம் மற்றொரு மலை.

பிறகு, கடல் வழிப்பயணம். கடற்கரையில் கட்டுமரத்தில் அமர்ந்தபடி மக்களுக்கு போதனை. எல்லாம் இயற்கை வழியோடு இணைந்த வாழ்க்கை.

இன்னுமோர் இரவில் தனது இறுதி இராவுணவை உண்ட பாஸ்கா பந்தி நடந்ததும் ஓர் அன்பரின் இல்லத்தின் மாடியில்தான். பொருளாளும் தனது சீடனால் காட்டிக் கொடுக்கப்பட்டதும், அவர் கைது செய்யப்பட்டதும் கெத்செமனி தோட்டத்தில். 

மரணத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அந்நியன் உரோமை ஆளும் பிலாத்துவின் அரண்மனையில். அங்கேயே அந்தக் கொடிய இரவில் நீடித்த வதைப் படலம். மரணம் கல்வாரிக் குன்றில்.

கடைசியாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறை கூட அவருடையதன்று. மரணத்திற்குப் பின்னரும் அவர் தலை சாய்க்க வாய்த்தது அடுத்தவரின் கல்லறையே. எத்துணை வேதனையான வாழ்க்கை..? 
அடிமைகளுக்கு விடுதலை, கடன்களை மன்னித்தல், நிலங்களுக்கு ஓராண்டு ஓய்வு உள்ளிட்ட ஆண்டவர் அருள்தரும் யூபிலி ஆண்டினை அறிவித்த அற்புத இறைமகனுக்கு மானுடம் தந்த பரிசு இந்த அவல மரணம்.

சிலுவை மரத்தில் தொங்கிய வண்ணம் அவர் பேசிய ஏழு வசனங்களில் ஒன்றுதான் "எல்லாம் நிறைவேறிற்று!' என்பது. இது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட மனித வாழ்வின் இறுதி மொழியா? முடிந்தது இல்லை! நிறைவேறிற்று என்பது நீட்சியின் குறியீடு. ஒரு புதிய சரித்திரத்தின் உறுதிமொழி..!

-மோசே
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

SCROLL FOR NEXT