வெள்ளிமணி

சகல சௌபாக்கியம் தரும் தாடூர் கடலீஸ்வரர்

25th Sep 2020 05:22 PM | -ஆர்.வி.

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளது போலவே சிற்பக் கலை நுட்பங்கள் தாடூர் கடலீஸ்வரர் கோயிலில் உள்ளதால் இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. ஆல கால விஷத்தை உண்ட சிவபெருமான் ருத்ர தாண்டவம் புரிந்த இடம் "தாண்டவபுரம்' ஆகும். தாண்டவபுரம் நாளடைவில் மருவி "தாடூர்' என ஆனது. 

கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் இறைவன் "கடலீஸ்வரர்' என்று வணங்கப்படுகிறார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தாடூரில் வாழ்ந்த "மூக்கில்லாத சாமியார்' ஒருவர் கிராம மக்களுக்கு பச்சிலை மருந்துகள் கொடுத்து பிணி தீர்த்து வந்தார். அவர் கோயிலின் கீழே பூமிக்கடியில் கடலாறு ஓடுவதாகவும், அதில் மூன்று நதிகள் சங்கமிப்பதாகவும் கூறி வந்திருக்கிறார். அதற்கேற்ப இக்காலத்திலும் சுற்று வட்டாரத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டாலும் கோயில் குளத்தில் தண்ணீர் வற்றுவதே இல்லை என்கிறார்கள் கிராம மக்கள். 

வறட்சி காலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி இந்த சிவலிங்கத்தின்மீது 101 குடங்கள் நீராபிஷேகம் செய்வார்கள். அதையடுத்த மூன்று நாள்களுக்குள் கண்டிப்பாக மழை பெய்யும் என்பது ஐதீகம். கடலீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீரை பக்தர்கள் தங்கள் வீடுகளில் தெளித்தால் சகல செளபாக்கியங்களையும் அடைய முடியும் என்று கூறுகிறார்கள். 

ADVERTISEMENT

கடலீஸ்வரர் கோயில் தேவஸ்தானத்தில் இருந்து கிழக்கே பார்த்தால் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் முழுவதும் நன்றாகத் தெரியும்; இது ஓர் அபூர்வ காட்சியாகும். 

சூரிய பகவான் சந்நிதி: ருத்ர தாண்டவமாடிய கடலீஸ்வரரை சமாதானப்படுத்தும் ஆற்றல் சூரிய பகவானிடம் மட்டுமே இருந்தது. அதனால் இக்கோயிலில் சூரியபகவான் தனி சந்நிதியில் எழுந்து அருள்பாலித்து வருகிறார்.

யோகேஸ்வரி அம்மன்: கோயில் வளாகத்தில் யோகேஸ்வரி தேவி, நவகிரகங்கள் சந்நிதியும் உள்ளது. ஆலயத்தில் நுழையும்போதே வாயிலுக்கு இடதுபக்கம் கணபதி சந்நிதி உள்ளது. பரிகார மூர்த்தியான லிங்கேஸ்வரர் இங்கு ஈசான மூலையில் பெரிய நீர் தொட்டியில் வைக்கப்பட்டிருப்பது விசேஷம்.

மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னரின் மகன் பாம்பு தீண்டி உயிருக்குப் போராடிய வேளையில் கருணைக் கடலாகிய சிவபெருமான் பரிகாரங்கள் கூறி மறைந்தார். ஈசன் கூறியபடி பரிகாரங்களைச் செய்ததன் விளைவாக மன்னரின் மகன் உயிர் பிழைத்தான். அதனை நினைவு கூறும் விதமாக லிங்கத்திற்கு மேற்கூரையில் சூரிய பகவான், சந்திர பகவான், பாம்பு, பல்லி, தேள் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன. விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படாமல் காக்க இந்த ஈசனை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, நாக தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை, நோய்வாய்ப்படுதல், கல்வியில் பின்னடைவு போன்ற பிரச்னைகள் தீர இத்தலம் பரிகாரத் தலமாக அமைந்துள்ளது.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு பயனடைகிறார்கள். மழலை பாக்கியம் வேண்டுபவர்கள் அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துகொண்டு அந்த பிரசாதத்தை உண்டு பலனடைகிறார்கள். 

அமைவிடம்: திருத்தணி தாலுகாவில் இ. என். கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

திருப்பணிகள்: இக்கோயிலுக்கு மதில் சுவர் அமைத்தல், நுழைவாயில் ராஜகோபுரம் கட்டுதல், கொடிமரம் ஸ்தாபித்தல், அன்னதானக் கூடம் கட்டுதல், கோசாலை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திருப்பணிகளுக்கு  பக்தர்களின் ஆதரவு மிகவும் தேவையாக உள்ளது. மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:  9444618752 / 9841671051. 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT