வெள்ளிமணி

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்  - 18

DIN


"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...' 
(பாடல்: 270)

அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல; வேறு வேறு என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை யாரும் அறியாதிருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவான சிவமாய் வாழ்ந்திருப்பார்கள்.

அன்புதான் கடவுள் என்பதை  ஆணித்தரமாகச் சொல்கிறார் திருமூலர். தினமும் கோயிலுக்குப் போவது, கடவுளை வழிபடுவது இவற்றைத் தவறாமல் செய்து விட்டு, சக மனிதர்கள் மீது அன்பு இல்லாமல் இருப்பது அறிவீனம்.

"அன்பிற் சிறந்த தவமில்லை' என்கிறான் பாரதி. காட்டிற்குப் போய் வருடக்கணக்கில் கண் மூடி அமர்ந்துதான் தவம் செய்ய வேண்டும் என்பது இல்லை. அடுத்தவர்களிடம் அன்பு செய்வதே மேலான தவம்.

அன்பு என்பது நமது உறவினர்கள், குடும்பத்தினர் மீது மட்டுமின்றி, எல்லோரிடமும் வர வேண்டும்.

ஆனால் இன்று, கணவன் மனைவிக்குள்ளேயே அன்பு குறைந்து போய் சுயநலம் அதிகமானதுதான் நிறைய விவாகரத்துகள் அதிகரிப்பதற்குக் காரணம்.

நான் பெரியவள் என அம்பிகையோ, நான் தான் பெரியவன் என சுவாமியோ எண்ணாமல், இந்த உலகத்தைப் படைத்துக் காத்து வருகிற அவர்களே முன்னுதாரணமான கணவன், மனைவியாக இருந்து அன்பையும், பணிவையும் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்கள் அனைவரும் அன்பு நெறியில் உறுதியாய் இருந்தவர்கள்.சிவலிங்கத்திற்குத் தன் கண்களையே பெயர்த்துக் கொடுத்த அன்பு கண்ணப்ப நாயனாருடையது.

"கண்ணப்பன் ஒப்பதோர்
    அன்பின்மை  கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
    என்னையும் ஆட் கொண்டருளி...' 
-என்பது மாணிக்க வாசகர் வாக்கு.

கண்ணப்பர் சிவபெருமானுக்குத் தன் வாயில் எடுத்துப் போன எச்சில் நீரால் அபிஷேகம் செய்தார். தன் தலையில் வைத்து எடுத்துப் போன மலரைச் சூட்டினார். பன்றிக் கறியை சுவைத்துப் பார்த்துப் படைத்தார்.

சிவபெருமான் கண்ணப்பர் கனவில் தோன்றி, "சிவகோசாரியார் எப்படி பூஜை செய்கிறார் என்பதைப் பார்த்து கற்றுக் கொள்' எனச் சொல்லவில்லை. மாறாக, சிவகோசாரியர் கனவிலே தோன்றி "நாளை அவன் என்னை வழிபடும் முறையைப் பார். அவன் என்மீது உமிழ்கிற எச்சில் உயர்ந்த கங்கை முதலான தீர்த்தங்களை விடப் புனிதமானது' என்கிறார்.

"உயர்கங்கை முதல் தீர்த்தப் பொரு புனலின்
எனக்கவன் தன் வாய் உமிழும் புனல் புனிதம்...' 

ஏனெனில், ஆகம நெறியை விட அன்பு நெறியே கடவுளுக்குப் பிடித்தமானது.
கண்ணப்பர் தன் தலையில் வைத்து  எடுத்து வந்த பூவை எனக்கு அர்ச்சிப்பது, திருமாலும், பிரம்மனும், தேவர்களும்  வந்து வைத்து வழிபடுகிற பூக்களை விட உயர்வானது.

"செம்மலர் மேல் அயனொடு  மால் முதல் தேவர் வந்து
எம்மலரும் அவன் தலையால் இடுமலர் போல் எனக்கொவ்வா' 
என்கிறது சிவப்பரம்பொருள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பின் நிமித்தம் அவன் செருப்புக்காலால் மிதிப்பது, என் குழந்தை  முருகன் என்னை தன் பிஞ்சுக்கால்களால் உதைப்பதை விட மகிழ்ச்சி தருகிறது.

"விருப்புறும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற்றென வீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்'
கண்ணப்பர் மனதில் அன்பு கொண்டவராக இருக்கவில்லை; அன்பே உருவம் எடுத்து வந்தது போல் இருந்தாராம். இதை சேக்கிழார் பெருமான்...
"பொங்கிய ஒளியின் நீழல் அன்புருவம் ஆனார்'  என்கிறார்.
அன்புருவத்தோடு நம்மிடையேயும் பலர் இருக்கவே செய்கிறார்கள். 

ஒரு நாள் எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தேன். தெருவில், ஆறு, ஏழு வயதுள்ள  இரண்டு பெண்  குழந்தைகள் கீழே அமர்ந்து தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, நான் வீட்டை விட்டு வெளியே வந்த போதும் அங்கேயே சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
""என்ன பண்றீங்க...?'' எனக் கேட்டபடியே அருகில் போனேன். தெருவில் நொறுங்கிக் கிடந்த நிறைய கண்ணாடித் துண்டுகளை ஓரமாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

""எங்க அம்மா சாமி கும்பிட பூ பறிச்சிகிட்டு வரச் சொன்னாங்க... அப்படி வந்தப்போ இங்க உடைஞ்சு கொட்டிக் கிடக்குற கண்ணாடித் துண்டு கால்ல குத்திடுச்சு. இதேமாதிரி வேற யார் கால்லயும் குத்திடக் கூடாதுன்னு தான் ஓரமா எடுத்து போட்டுகிட்டிருக்கோம். பெரிய பெரிய கண்ணாடித் துண்டுகளை எல்லாம் எடுத்து ஓரமா போட்டுட்டோம். இந்தச் சின்ன, சின்னதா தூள் தூளா இருக்குறதுக்கு மேல மட்டும் பெரிய கல்லை எடுத்து வச்சிடுவோம்'' என்றார்கள்.

""வீட்டுல தேடமாட்டாங்களா..? ஏன் லேட்ன்னு உங்கம்மா திட்ட மாட்டாங்களா..?'' என நான் கேட்க, ""அம்மா திட்டினா பரவாயில்லை... இந்த கண்ணாடி எங்க காலில் குத்தி வலிச்ச மாதிரி வேற யார் கால்லயும் குத்திடக் கூடாதுல்ல... அதான் ஓரமா எடுத்துப் போட்டுட்டு போறோம்...'' என்றார்கள். அந்த அன்புதான் கடவுள்.

அதைத்தான் திருமூலரும் சொல்கிறார். அன்புவேறு, சிவம் வேறு இல்லை. மனதில் அன்பு வந்துவிட்டால், நாமும் கடவுளாக, சிவமாக ஆகி விடுவோம் என்கிறார்.

- தொடரும் 

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT