வெள்ளிமணி

லாஹிரி மகாசாயர் இந்தியாவின் தலைசிறந்த யோக குரு!

25th Sep 2020 04:40 PM | - எம்.ஆர்.நாராயண் சுவாமி

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள குறுகலான பல தெருக்களும், சந்துகளும் ஒரு காலத்தில் வங்காள மொழி பேசுவோர் அதிகம் வசிக்கும் பகுதிகளான இருந்தன. அங்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் இரைச்சல் மிகுந்த நெசவு இயந்திரங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இந்தத் தெருக்களை நீங்கள் பார்த்தால், இந்தியாவின் தலை சிறந்த யோக குருவான லாஹிரி மகாசாயர் தன் வாழ்வில் எண்ணற்ற முறை பயன்படுத்திய அதே தெருக்களில்தான் நாமும் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு உங்களுக்கும் ஏற்படும். அவர் தன் வாழ்வில் கிரியா யோகத்தின் மிக ஆழத்தையும், அதன் உச்சத்தையும் தொட்டவர்.
இந்த தேசம் உருவாக்கிய ஏராளமான வைரங்களைப் போலவே இந்த ஆன்மிக குருநாதரும் பலராலும் அறியப்படாமலேயே இருந்திருக்கிறார் என்பதுதான் துயரமான விஷயம். ஆனால், பரமஹம்ச யோகானந்தர் கடந்த 1946-இல் எழுதிய சுயசரிதை நூலானது, குடத்திலிட்ட விளக்காக இருந்த லாஹிரி மகாசாயரை குன்றிலிட்ட விளக்காக ஒளிரச் செய்தது.
"ஒரு யோகியின் சுயசரிதை' என்ற தலைப்பில் அந்த நூல் வெளிவந்தபோதிலும், அதில் பரமஹம்ச யோகானந்தரைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே இருந்தன. மற்றவர்களைப் பற்றிய விவரங்கள் - குறிப்பாக அவர் சந்தித்த, தங்களை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாத ஆன்மிகவாதிகளின் விவரங்களே அதில் அதிகமாக இடம்பெற்றன. அவர்களில் முக்கியமான ஒருவர்தான் லாஹிரி மகாசாயர்.
உண்மையைச் சொல்லப் போனால் யோகானந்தர் சந்திக்காத ஒரு சிலரில் லாஹிரி மகாசாயரும் ஒருவர். வாராணசியில் உள்ள மகாசாயரின் வீட்டுக்கு குழந்தையாக இருந்த யோகானந்தரை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அந்த வீடு இன்னமும் அங்கு உள்ளது.
அந்த வீட்டில் அப்போது திரண்டிருந்த ஏராளமான பக்தர்களுக்கு முன் மகாசாயர் அமர்ந்திருந்தார். யோகானந்தரின் தாயார் தன் குழந்தைக்கு அவரது ஆசியை வேண்டி மௌனமாக பிரார்த்தனை செய்தபடி பக்தர்கள் கூட்டத்தில் இருந்தார். யோகானந்தர் தன் தாயாரின் மடியில் படுத்திருந்தார்.
முகுந்தலால் கோஷ் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் வாழ்வில் அப்போதுதான் அந்த மிகப்பெரிய எதிர்பாராத அதிசயம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டத்தை நோக்கிய மகாசாயர், யோகானந்தரின் தாயாரை முன்னே வருமாறு அழைத்தார்.
அவர் நெருங்கி வந்ததும், அவரது குழந்தையைத் தனது கைகளில் வாங்கிக் கொண்ட மகாசாயர் அதைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார். அன்புடன் தனது கரத்தை அக்குழந்தையின் தலை மீது வைத்து ஆசிர்வதித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ""தாயே! உங்கள் மகன் ஒரு யோகியாக உருவெடுப்பான். ஆன்மிகவாதியாகி பல்வேறு ஆன்மாக்களை இறைவனின் சாம்ராஜ்யத்துக்கு கொண்டு செல்வான்'' என்று தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார்.
அதேபோல, முகுந்தலால் கோஷ் என்ற அந்தக் குழந்தை பின்னாளில் பரமஹம்ச யோகானந்தராக மாறி ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டது வரலாற்றுப் பதிவு. அவரை ஆசிர்வதித்த லாஹிரி மகாசாயர் குறித்துப் பார்ப்போம்:
லாஹிரி மகாசாயரின் இயற்பெயர் ஸ்யாமா சரண் லாஹிரி ஆகும். அவர் தற்போதைய மேற்கு வங்கத்தின் நாடியா (வடமொழியில் நதியா) மாவட்டத்தில் உள்ள குர்ணி கிராமத்தில் கடந்த 1828, செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்தார். பொருளாதார ரீதியில்  நலிவுற்ற பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவர், தன் இளம் வயதிலேயே தாயை இழந்து விட்டார். 
அவரது கிராமத்தை வெள்ளம் தாக்கிய பிறகு, வாழ்வாதாரம் காரணமாக அவரது குடும்பம் வாராணசிக்கு இடம் பெயர்ந்தது. அங்கு கல்வியை முடித்த லாஹிரி மகாசாயர், ஆங்கிலேய அரசில் ராணுவப் பொறியியல் துறையில் கணக்காளராக வேலையில் சேர்ந்தார்.
தனது பணி நிமித்தமாக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அப்படி தனது பணிசார்ந்து அவர் ஒருமுறை தற்போது உத்தரகண்டில் உள்ள ராணிகேத் பகுதிக்குச் சென்றபோதுதான் பாபாஜி என்ற குருநாதரை சந்தித்தார். அவர்தான் கிரியா யோகக் கலையை லாஹிரிக்கு கற்றுக் கொடுத்தார். இந்தப் புராதன அறிவியலை மக்களிடையே பரப்புமாறும் கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்றுக் கொண்ட லாஹிரி, வாராணசியில் கங்கை நதிக்கு அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து கிரியா யோகக் கலையை பலருக்கும் கற்றுக் கொடுக்கும் பெரும் பணியை எந்த வித ஆரவாரமும் இன்றி மேற்கொண்டார். 
கிரியா யோகம் என்பது உள்வட்ட பிராணாயாம பயிற்சிகள் அடங்கிய அம்சமாகும். இது இறை நம்பிக்கை கொண்டவர்களின் ஆன்மிக வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது.
துறவறம் மேற்கொள்ளாமல், இல்லற வாழ்வில் ஈடுபட்டபடியே கிரியா யோகக் கலையின் ஜுவாலையை வீடுகள்தோறும் கொண்டு சென்ற இந்திய குருநாதர்களில் முதன்மையானவர் லாஹிரி மகாசாயர். திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் உள்பட ஐந்து குழந்தைகள். அவரது இரண்டு மகன்களும் தந்தை வழியில் யோகக் கலையை கற்றுத் தேர்ந்து அதைப் பரப்பும் அருமுயற்சியில் ஈடுபட்டனர்.
லாஹிரி மகாசாயர் 1886-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெறும் வரை குடும்பத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தை வழங்கி வந்தார். இல்லற வாழ்வில் ஈடுபட்டவாறே யோகக் கலைக்கும் பங்களித்த வகையில் அவர் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பணி ஓய்வு பெற்ற பின் அவர் வாழ்க்கையை முழுக்க முழுக்க யோகக் கலைக்கு அர்ப்பணித்தார் என்றே கூற வேண்டும். அவரது வீட்டுக்கு பகலிலும் இரவிலும் பக்தர்கள் குவிந்தவாறு இருந்தனர். அங்குள்ள தனது அறையில் பெரும்பாலும் பத்மாசன வடிவில் அமர்ந்தவாறு, ஆன்மிகத் தேடல் கொண்டோருக்கு அவர் கிரியா யோகக் கலையை போதித்தார். 
தன்னை நாடி வந்தோரின் பொருளாதார நிலையையோ, மதத்தையோ அவர் பொருட்படுத்தியதில்லை. அதேபோல் ஹிந்து அல்லாத மாற்று மதத்தவர் தன்னை நாடி வந்தபோது அவர்களை மதம் மாறுமாறும் அவர் கூறியதில்லை; அவர்கள் தங்கள் மத நம்பிக்கையுடன் கிரியா யோகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றே லாஹிரி மகாசாயர் விரும்பினார்.
அவர் ஆன்மிக விஷயங்கள் குறித்து எளிய மொழி நடையில் பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவரது புகழ் பல இடங்களுக்கும் பரவியது. அதேசமயம், அவர் விளம்பரத்தையோ, தாம் பிரபலமாவதையோ விரும்பவில்லை. மேலும் கிரியா யோகக் கலையைப் பரப்புவதற்கு அவர் முறையான எந்த அமைப்பையும் நிறுவவில்லை. அது தானாகவே சிறகடித்துப் பரவும் என்பதே அவரது எண்ண ஓட்டமாக இருந்தது.
லாஹிரி மகாசாயர் தனது வாழ்வில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பரமஹம்ச யோகானந்தருக்கு முன்பே லாஹிரியின் ஆன்மிகச் சிறப்பை உணர்ந்து அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பதிவு செய்திருந்தால் அதுவே மிகப்பெரிய புத்தமாக இருந்திருக்கும்! 
இறந்த ஒரு மனிதரை லாஹிரியால் உயிர்த்தெழ வைக்க முடிந்தது. பிறவியிலேயே குருடாக இருந்த ஒரு சிறுவனுக்கு அவரால் கண் பார்வையை அளிக்க முடிந்தது. ஓரிடத்தில் இருந்தபடி அவரால் மற்றோர் இடத்தில் தோன்ற முடிந்தது. தன்னைக் காண்பதற்காக ரயில் நிலையத்தை நோக்கி ஒரு பக்தர் வந்து கொண்டிருந்தபோது ரயில் புறப்பட்டு விட்டது. அப்போது பக்தரின் பிரார்த்தனையை ஏற்று அந்த ரயிலை லாஹிரியால் அதிசயம் நிகழ்த்தி நிறுத்த முடிந்திருக்கிறது.
அதேபோல், ஒருமுறை லாஹிரியின் உயரதிகாரியாக ஓர் ஆங்கிலேயர் இருந்தார். அவரது மனைவி தீராநோயுடன் இங்கிலாந்தில் அவதிப்பட்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் ஒருமுறை லாஹிரி, தனது உயரதிகாரியிடம் கூறும்போது ""உங்கள் மனைவி நன்கு குணமடைந்து விட்டார். அவர் இப்போது அது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்'' என்று 
தெரிவித்தார். 
அதேபோன்று, சில நாள்களில் அவரது மனைவியின் கடிதம் அந்த அதிகாரிக்கு வந்து சேர்ந்தது. லாஹிரியால் காற்றில் மிதக்கவும், பல நாள்கள் தூங்காமல் இருக்கவும் முடிந்தது. எனினும், லாஹிரி தனது அரும்பணிகளை எப்போதும் பிரகடனப்படுத்தவோ, பிரபலப்படுத்திக் கொள்ளவோ இல்லை. தன்னை யாரும் புகைப்படம் எடுப்பதையும் அவர் தடுத்து வந்தார். பக்தர்கள் மிகவும் கேட்டுக் கொண்டதால் லாஹிரியின் அனுமதியுடன் எடுக்கப்பட்ட அவரது ஒரே புகைப்படம்தான் இன்றும் காணப்படுகிறது. 
மகாசாயர் தமது 67 -ஆம் வயதில் 26.9.1895-இல் ஜீவசமாதி அடைந்தார்.
வாராணசியில் உள்ள அவரது வீடு ஆண்டு முழுவதும் பூட்டப்பட்டிருக்கும். காலையில் ஒரு குருக்கள் மட்டும் வந்து வீட்டைத் திறந்து பூஜை செய்துவிட்டுச் செல்கிறார். 
ஆண்டுக்கு ஒரு முறை அதாவது குரு பூர்ணிமா தினத்தன்று அவரது வீடு திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அந்த  நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அவரது வீட்டுக்கு வருவர். அவரது பிரம்மாண்ட புகைப்படத்தின் முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வர்.
அதேபோல் அவரது வீட்டுக்கு அருகே அவரது வாழ்வில் இடம்பெற்ற மற்றொரு கட்டடம் கங்கை நதியை  நோக்கிச் செல்லும் தெருவில் உள்ளது. அங்கு லாஹிரி மகாசாயர் தன் வாழ்வில் பலருக்கும் தீட்சை அளித்துள்ளார். அவர்களில் ஒருவர்தான் சுவாமி யுக்தேஸ்வர் கிரி. யுக்தேஸ்வரின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ச யோகானந்தர்தான் தனது சுயசரிதை நூல் மூலம் லாஹிரி மகாசாயரை நம் நாடு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அறியச் செய்தார்.
இந்தப் புத்தகம் எழுதப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 20 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் லட்சக்கணக்கானோரை ஆன்மிகப் பாதையை நோக்கி ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT