வெள்ளிமணி

நடுநாட்டு ராஜா

25th Sep 2020 05:14 PM | -ப.முத்துலட்சுமி

ADVERTISEMENT


"கருட நதி' என்று அழைக்கப்படும் "கெடிலம்' ஆற்றுக்கு கிழக்கே கடலூர் புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில். ஒருகாலத்தில் திருவேங்கடமுடையான், தேவநாதப் பெருமாள், ராஜகோபாலப் பெருமாள் ஆகிய மூவரும் மக்கள் நலனறிய "யாத்திரை' மேற்கொண்டனர்.

மூவரும் "அந்தி சாயும் நேரத்தில் எங்கும் தங்கக் கூடாது' என முடிவு செய்தனர். ஆனால் திருமலைக்குச் சென்ற திருவேங்கடமுடையான் மட்டும் நேரத்தில் திரும்பவில்லை. இதனால் ராஜகோபாலப் பெருமாள் "அண்ணன் இருக்கும் இடமே தனக்கு இருப்பிடம்' என்று கூறி திருவகீந்திபுரம் தேவநாதப்பெருமாள் அருகிலேயே தங்கி விட்டதாக பிரும்மாண்ட புராணத்தில் குறிப்பு உள்ளது.

தேவநாதப் பெருமாளுக்கு தீராத தாகம் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீகருட பகவான் பூமியை தனது அலகினால் இரண்டாகக் கீறி ஊற்றெடுக்கச் செய்து எம்பெருமானின் தாகத்தைப் போக்கினார். அப்போது உண்டான "கருட நதி' என்ற பெயர் மருவி "கெடிலம் நதி' என்றழைக்கப்படுகிறது.

இந்நதி திருவகீந்திபுரம் திருக்கோயில் தொட்டு ஓடி புண்ணிய தீர்த்தமாக பயன்பட்டு, புதுப்பாளையம் அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் கரையோரம் பாய்ந்து கடலுடன் கலக்குமிடம்தான் தேவனாம்பட்டினமாகும்.

ADVERTISEMENT

கடலூரை ஆட்சி செய்த ராபர்ட் கிளைவுக்கும், பிரெஞ்சு மன்னன் லாலிக்கும் நடந்த போரில் லாலி வெற்றி பெற்றான். அவன் கோயில் விக்கிரகங்களை எடுத்துச் செல்ல முயன்றான். அப்போது ராஜகோபாலப் பெருமாள் விக்கிரகத்தை வயல் வெளியில் எவரும் அறியாமல் புதைத்து வைத்தனர். பின்னர் அந்த இடம் தோண்டப்பட்டு ராஜகோபாலப் பெருமாளை மீண்டும் கொண்டு வந்து நிறுவினர். பெருமாளை மறைத்து வைத்து தோண்டப்பட்டு எடுத்த இடம் இன்று "தோட்டப்பட்டு கிராமம்' என வழங்கப்படுகிறது.

மூலவர் ராஜகோபால சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கருவறையில் அருள்பாலிக்கிறார். தாயார் செங்கமலவல்லி தாயார் தனிக்கோயில் நாச்சியாராக வீற்றிருக்கிறார். கோயிலின் உட்பிராகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் சந்நிதிகள் உள்ளன.

இத்திருக்கோயிலில் மாசி மக தீர்த்தவாரி முடிந்ததும் நடுநாட்டு திவ்யதேச தேவநாதப் பெருமாள் இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளி இரு பெருமாள்களும் பத்தி உலாவுதல் நடப்பதும் சிறப்பம்சம்.

ராஜகோபால சுவாமிக்கு புரட்டாசி மாதம் முழுவதும் திருவிழாதான் என்றாலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொருசிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

இந்தக் கோயிலுக்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்தாலும் அல்லது ஓர் இரவு தங்கி தரிசித்தாலும் 4 ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. நினைத்த காரியத்தை உடனே முடித்துத் தரும் இந்தப் பெருமாள் திவ்ய தேசங்களின் ஒரு பிரிவான "நடுநாட்டு ராஜா' என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலுக்கு புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதர திருப்பணிகள் முடித்து குடமுழுக்கும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கடலூர் புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ராஜகோபால சுவாமியை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: 9944238917 / 9566669667.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT