வெள்ளிமணி

குவலயம் காக்கும் கோவிந்த கோஷம்!

25th Sep 2020 04:43 PM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT


தெய்வ அனுக்கிரகத்துடன் முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி. "பெருமாள் மாதம்' எனக் குறிப்பிடும் அளவிற்கு இம்மாதத்தின் பெயரைக் கேட்டாலே திருவேங்கடன் நினைவும், "கோவிந்தா' கோஷமும் நினைவுக்கு வரும். வைணவத் தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு "கோவிந்தா' என்று முழக்கமிடுவதைக் கேட்கிறோம். கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றது. அப்படி என்ன இந்த நாமத்தின் பெருமை? தெரிந்துகொள்வோம்.

புராண சம்பவம்:  மகாலட்சுமி தன்னை விட்டுப் பிரிந்ததில் விரக்தி ஏற்பட்டு வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீமந்நாராயணன், ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் திருமலை பகுதியில் வாசம் செய்கிறார். அருகிலேயே அகத்திய முனிவரின் ஆசிரமமும் அமைந்திருந்தது. அங்கு ஒரு பெரிய கோசாலை பராமரிக்கப்பட்டு வந்தது. தனக்கு ஒரு பசுவினை தானம் தருமாறு முனிவரிடம் ஸ்ரீநிவாஸன் கேட்டார். 

வந்திருப்பது திருமால் என்று அறிந்தபோதிலும், "ஒரு பிரம்மச்சாரிக்கு பசுவினை தானம் செய்யக் கூடாது' என்று முனிவர் மறுத்து விட்டார். பின்னர், பத்மாவதித் தாயாரை மணம் புரிந்த பிறகு, முனிவரிடம் பசுவைத் தானமாகப் பெற தாயாருடன் அகத்தியர் ஆசிரமத்திற்குச் சென்றார் பெருமாள். அச்சமயம் முனிவர் அங்கு இல்லாததால் சீடர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. விடைபெற்று பெருமாளும் சென்றுவிட்டார். 

சற்று நேரத்தில் அங்கு வந்த அகத்தியர் நடந்ததைக் கேள்விப்பட்டு உலகைக் காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்கழித்து விட்டதற்கு வருந்தி, காமதேனுவைப் போன்ற பசுவுடன், பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக் கொண்டு புறப்பட்டார். 

ADVERTISEMENT

சிறிது தொலைவில் பெருமாளைப் பார்த்து விட்டார்.   "சுவாமி, கோவு இந்தா' என்று திரும்பத் திரும்ப குரல் கொடுத்தார். தெலுங்கில் "கோவு' என்றால் பசு. "இந்தா' என்ற சொல்லுக்கு எடுத்துக்கொள் என்று பொருள். ஆனால் பெருமாள் திரும்பிப் பார்க்காமல் தாயாருடன் விரைவாக நடந்தாராம். அகத்தியரும் விடாமல் பின் தொடர்ந்தார். அவர் "கோவு', "இந்தா' என்ற வார்த்தையை அடிக்கடி கூறியபடியால், அது "கோவிந்தா' என்ற சப்தமாக மாறியது. சோதனையை நீடிக்க விரும்பாமல், அகத்தியரை ஆசுவாசப்படுத்தி பசுவை தானமாகப் பெற்றுக் கொண்டார் பெருமாள். மேலும் அகத்தியரிடம் கலியுகத்தில் தன்னை அழைக்க உகந்த நாமம் "கோவிந்தா' என்றும், அந்த நாமத்தைச் சொல்பவர்களுக்கு தன் அனுக்கிரகம் உடனே கிடைக்கும் என்றருளி அங்கிருந்து விடை பெற்றார்.

மற்றொன்று: கோகுலத்தில் கிருஷ்ணர் பசுக்களைப் பராமரித்து வந்தார். "கோ' என்றால் "பசு' என்பதைக் குறிக்கும். "விந்தன்' என்றால் "காப்பவன்' என்று பொருள். அவ்வகையில் "கோவிந்தன்' என்ற திருநாமம் உருவானது. கிருஷ்ணாவதாரத்தில் பகவானுக்கு "கோவிந்த பட்டாபிஷேகம்' நடைபெற்றதாக பாகவதம் கூறுகிறது. 

திருமலையில் சுப்ரபாத சேவையில் கூறப்படும் "உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட' என்ற வரிகள் காதில் ஒலிக்கும். இதன் பொருள்: "கோவிந்தா! நீ விழித்தால் குவலயமே விழிக்கும்! கோவிந்தா! தூக்கத்திலிருந்து திருக்கண் மலர்ந்து அருள்புரிவாய்' என்பதே! 

"அநாதையாக இறப்பவர்களுக்கும் ஆண்டவன் துணையாக உள்ளான்' என்பதை உணர்த்துவதற்காக அந்த உடலுக்கு செய்யும் தகன காரியங்களுக்கு "கோவிந்தா கொள்ளி போடுதல்' என்று கூறுவர். காஞ்சி மஹா பெரியவர் தன்னுடைய அருளாசி உரைகளில் "அநாதை பிரேத சம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்' என்று குறிப்பிடுவது வழக்கம்!

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT