வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 112

டாக்டா் சுதா சேஷய்யன்


இரண்டாம் நூற்றாண்டு யாத்திரிகரும் வான நூல் வல்லாரும் எகிப்தில் பல்லாண்டுக்காலம் வாழ்ந்தவருமான டாலமி, தம்முடைய நில வரைபடங்களில் கொற்கையைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். பாண்டிய நாட்டு முத்துக்களும், பொதிகைச் சந்தனமும், ஏலம், மிளகு, ஜாதிக்காய் போன்ற உணவுப் பொருள்களும், பஞ்சாடைகளும், பட்டாடைகளும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சேரநாட்டு யானைத் தந்தங்களும்கூட ஏற்றுமதியாகின. வணிகத்தின் பொருட்டு யவனக் (கிரேக்கக்) கப்பல்கள் பல வந்தன. அரபு நாட்டிலிருந்தும் பற்பல கப்பல்கள் வந்தன. இவற்றில் அரபுக் குதிரைகளும் வந்தன. யவனர்களும், ரோமானியர்களும், அராபியரும் கொற்கையில் குடியேறினர். பாண்டியர்களின் படைகளில் வேற்றுநாட்டுஆடவரும், அந்தப்புரங்களில் வேற்றுநாட்டுப் பெண்டிரும் பணியாற்றினர். 

பாண்டிய நாட்டின் பெருந்துறைமுகமாகவும் பாண்டிய நாட்டோடு தொடர்பு கொள்வதற்கான பெருவாயிலாகவும் கொற்கை விளங்கியது என்பதாலேயே, வடமொழி நூல்களில் "பாண்டிய கபாடம்' என்று (கபாடம்=வாயில்) இந்நகரம் அழைக்கப்பட்டுள்ளது. "மதுரோதயநல்லூர்' என்னும் பெயரும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. பழம்பாண்டியர்கள் மதுரைக்கும் முன்னதாகக் கொற்கையையே தங்களின் தலைநகராகக் கொண்டிருந்தனர். மதுரை என்னும் மாநகரம் உதயமாவதற்குக் கொற்கையின் வணிக வளமையும் செல்வச்செழுமையுமே காரணம்; ஆகவேதான், இப்பெயர் என்றும் ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். இப்போதைய மதுரைக்கும் முன்னர், தென்மதுரை என்னும் ஊரே பாண்டியர்களின் தலைநகரமாகவும் தமிழ்ச்சங்கம் செழித்த இடமாகவும் இருந்தது. சங்க இலக்கியப் பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தென் மதுரை காலத்தில்கூட, பாண்டியர்களின் வணிகப்பெருமைக்கும் கடலோடு பெருமிதத்திற்கும் கொற்கையின் பங்களிப்பு அபரிமிதமாகவே இருந்திருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. 

பழம்பாண்டிய மன்னர்களில் ஒருவர் பொற்கைப்பாண்டியர். இவரைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. இவருடைய பெயராலேயே இவ்வூருக்குப் "பொற்கை' என்னும் பெயர் சூட்டப்பட்டதாகவும், பின்னர் அதுவே "கொற்கை' என்று மாறியதாகவும் செவி வழித்தகவல்கள் நிலவுகின்றன. உள்ளூர் மக்கள் இவ்வூரைப் பொற்கை  என்று வழங்குவதையும், ஊர்த்திருவிழாக்களில் "பொற்கை' என்றே வழங்குவதையும் இதற்குச் சான்றாகக்காட்டுகின்றனர். மக்கள் ஆசைபற்றி இவ்வாறு கூறுவதாகக் கொள்ளலாமேயன்றி, இதற்கான சான்றுகள் சரியாக இல்லை. 

ஆற்றோரத் துறைமுகம், வணிகத்தின் பொருட்டான பண்டகசாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள்ஆகியவற்றோடு, கலங்கரைவிளக்கமும் கப்பல்கள் பழுதுபார்க்கும் துறையும்கூட கொற்கையில் இருந்துள்ளன. 

இப்போதைய நிலையில், கொற்கை என்பது ஒரு சிற்றூர். ஏரல்-ஆற்றூர் பாதையில், வாழவல்லான் கிராமத்திற்குச் சற்று கிழக்காகவும், உமரிக்காடு கிராமத்திற்குச் சற்று வடக்காகவும் உள்ளது.  அக்கசாலை என்றொரு பகுதி, சற்று தொலைவில் உள்ளது. இதுவே, பண்டைய அஃக சாலை இருந்த இடமாகும். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகப் பெரிய குளம் ஒன்றின் நடுவில் ஆலயம் ஒன்று இருக்கிறது. 

இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அம்மனுக்குச் "செழுகை நங்கை' என்றொரு திருநாமம் இருப்பதாக மா. ராசமாணிக்கனார் தெரிவிக்கிறார். அருள்மிகு வெற்றிவேல் அம்மன் என்றும் இந்த அன்னை அழைக்கப்படுகிறாள். 

இப்போதைய காலகட்டத்தில் தலையைச் சாய்த்த நிலையில் அம்மனுடைய பிரதிமம் காணப்பட்டாலும், இங்கு முதன்மையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவம், அருள்மிகு கண்ணகியம்மன் என்பதுதான் இக்கோயிலின் சிறப்பு. 

சிலப்பதிகார வரலாற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம். கோவலன் இறந்து படுகிறான். அவனுக்குத் தவறாக வழங்கப்பட்ட தண்டனைக்காகக் கண்ணகி பொங்கியெழுகிறாள். கண்ணகியின் சீற்றத்தால் மதுரை மாநகரம் எரிந்துபடுகிறது. 

மதுரையை அப்போது ஆண்ட ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழிய அரசர் மாய்கிறார். இந்தச்சேதியைச் சேர மன்னரும் அவருடைய மனைவியும் செவியுறுகின்றனர். கண்ணகிக்குச் சிலை எடுப்பித்து வழிபாடியற்ற வேண்டும் என்று சேரமன்னர் இமயத்திலிருந்து கல்லெடுத்து வருகிறார். இந்நிலையில், மாடலமறையோனைச் சந்திக்கிறார். மாடலமறையோனிடம், மன்னரை இழந்த பாண்டிநாட்டில் என்ன நிகழ்ந்தது என்று விசாரிக்க, கொற்கையிலிருந்த பாண்டியர் ஒருவர், கண்ணகிக்கு விழா எடுத்த கதையை அவர் கூறுகிறார். 

"கொற்கையிலிருந்த வெற்றிவேல் செழியன்
    பொன் தொழில் கொல்லர் ஈ ஐந்நூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமாபத்தினிக்கு
    ஒரு பகல் எல்லை உயிர்ப்பலியூட்டி
 உரை செலவெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல் காலைத்
     தென்புலமருங்கில் தீதுதீர்சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்
    நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட
ஒருதனிஆழிக் கடவுள் தேர்மிசைக்
    காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்'

கண்ணகியின் சீற்றத்தின் காரணமாக மதுரை எரிகிறது. பாண்டிய அரசரும் இறந்து போகிறார். இந்நிலையில், கண்ணகியின் சீற்றத்தை அடக்கவும், அவளுக்கு இழைக்கப்பட்டகொடுமைக்குப் பரிகாரம் தேடவுமாக, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்னும் அரசர் கண்ணகிக்கு விழா எடுக்கிறார். பின்னர், நேர்ந்த குற்றத்திற்கான குறையைத் தென்னாட்டில் தீர்த்துவிட்ட நிறைவோடு, தம்முடைய தேரின்மீது சூரியதேவன் ஏறுவதுபோல், மதுரை சிம்மாசனத்தின் மீது சந்திர வம்சத்தைச் சேர்ந்த இவர் ஏறுகிறார். 

ஆக, மதுரை ஆட்சியைக் கொற்கை வெற்றிவேல் செழியன் ஏற்கிறார். அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர், வெற்றிவேல் செழியன் என்பவரை இளஞ்செழியன் என்று குறிப்பிடுகிறார். மன்னர் மதுரையில் இருக்கும்போது, இளவரசர் கொற்கையில் இருப்பது வழக்கம் என்னும் தகவலோடு இது ஒத்துப் போகிறது. பாண்டிய நெடுஞ்செழியனின் இளவலாக வெற்றிவேல் பாண்டியன் இருந்திருக்கக்கூடும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT