வெள்ளிமணி

மன்னன் சாலமோனின் தீர்ப்பு!

25th Sep 2020 05:27 PM | -முனைவர் தே.பால் பிரேம்குமார்

ADVERTISEMENT

 

அறிவு, புத்தி, ஞானம் உள்ள மனிதரின் ஆற்றலை அனைவரும் போற்றுவர். நல்ல அறிவுள்ளவரை ஆறாம் அறிவு, ஏழாம் அறிவு உடையோர் எனவும் போற்றுகின்றனர். அறிவை "நாலேஜ்' எனவும் ஞானத்தை "விஸ்டம்' எனவும் ஆங்கிலத்தில் கூறுவர். ஞானம் அறிவின் எல்லா ஆற்றலிலும் குவிந்திருக்கும். 
வேதாகமத்தில் மன்னன் சாலமோன் ஞானம் மிக்க பெருமைக்குரிய பேரரசன் என்று குறிப்பிடப்படுகிறார். இன்றும் சாலமோனின் ஞானம் பேசப்படுகிறது. நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப் பாட்டுகள் என்று மூன்று புத்தகங்கள் பேரரசன் சாலமோனால் எழுதப்பட்டன. இப்புத்தகங்கள் நீதி, தத்துவம், காதல் பாடல்கள் என இதுவரை யாரும் எழுத முடியாத நூல்கள்.
சாலமோனின் அழகு, வண்ண உடை, வீரநடை, நடனம், ஞானமுள்ள பேச்சு, இசைப் பாடல், விருந்து, நட்பு, தெய்வபக்தி மற்றும் கட்டடக்கலை ஞானத்தால் தெய்வ ஆலயம் கட்டியது, தனக்கென்று ஒரு பெரிய அரண்மனை கட்டியது ஆகியவை இன்றும் பேசப்படுகின்றன. 
அவரது சிம்மாசன அமைப்பின் கலை நுட்பமும், அவர் பூசும் வாசனை திரவியங்களும் புகழ் பெற்றவை. அவரைப்போல் உடுத்தியவர் யாருமில்லை. அவரின் அந்தப்புரத்தில் ஆயிரம் அழகிகள் இருந்தனர். அவர்களுடன் சாலமோன் ஆடிய நடனங்கள் பேசப்பட்டன. 
பெர்ஷிய நாட்டு இளவரசி ஷீபா சாலமோனின் மேதமை குறித்து கேள்விப்பட்டாள்.
"இதெல்லாம் உண்மையா...?' என்று அவளால் நம்ப முடியவில்லை. அவரைச் சந்திக்க ஆவல் ஏற்பட்டது. 
சாலமோனுக்கு அளிப்பற்காக உன்னத பரிசுப் பொருள்களுடன் அவரைச் சந்திக்கச் சென்றாள். பெர்ஷிய இளவரசி ஷீபாவை சாலமோனே நேரில் சென்று வரவேற்றார். சாலமோன் தங்கியிருந்த அரண்மனையைக் கண்டு இளவரசி வியந்து போனாள் (11 நாளாகமம் 9:1).
மறுநாள் அரச சபையில் பேரரசன் சாலமோன் ஒரு கடினமான வழக்கை விசாரித்து தீர்ப்பு தரவேண்டும். "இந்தத் தீர்ப்பை அரசர் எப்படி வழங்கப் போகிறார்..?' என்று இளவரசி ஷீபா ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தாள். பேரரசனின் காலடியில் அழகுள்ள ஆண் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. இரண்டு அழகிய தாய்மார்கள் தீர்ப்புக்காக காத்திருந்தனர். "பிள்ளை எனது' என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி "குழந்தை என்னுடையது' என்றாள்.
முந்தைய நாள் இரவு தூங்கும் பொழுது இரண்டு இளம் தாய்மார்கள் தம் குழந்தைகளை அணைத்துக்கொண்டு தூங்கினர். நள்ளிரவில் ஒருத்தி தன் குழந்தை மேல் புரண்டு படுத்தாள். 
அதில் குழந்தை நசுங்கி இறந்து போனது. உடனே இறந்த குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கிடத்தி விட்டு, அவளது குழந்தையை இவள் எடுத்துக் கொண்டாள்.
இவ்வழக்கில் குழந்தைக்கு இரு தாய்மாரும் உரிமை கொண்டாடினர். பெர்ஷிய இளவரசி ஷீபா குழம்பிப் போயிருந்தாள். "யாருடைய குழந்தை அது?' அரசரின் தீர்ப்பை எதிர்பார்த்து அரச சபை அமைதியாக இருந்தது. 
ஞானம் நிறைந்த சாலமோன் தனது போர் வீரனை நோக்கி ""நீ உடை வாளினால் இக்குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதி கொடு...'' என்றார். 
உடனே குழந்தையை நோக்கி வீரன் வாளால் வெட்டச் சென்றான். அப்பொழுது ""குழந்தையை இரண்டாக வெட்ட வேண்டாம். அவளிடமே கொடுத்து விடுங்கள்...'' என்றாள் ஒரு தாய். மற்றவளோ ""குழந்தையை வெட்டி பாதியைக் கொடுங்கள்'' என்றாள்.
பேரரசன் சாலமோன் உண்மையைக் கண்டுகொண்டார். குழந்தையை அதன் தாயிடம் கொடுத்தார். இளவரசி ஷீபா சாலமோனின் தீர்ப்பைக் கண்டு வியந்து போனாள். 
பின்னர் இளவரசி ஷீபா சாலமோனை சோதிக்க எண்ணி அரச சபை மண்டபத்தில் இரு வண்ண அழகிய மலர் மாலைகளை தூரத்திலிருந்து காண்பித்தாள். ஒன்று அசல்; மற்றது போலி. ""அரசே... இவ்விரு வண்ண மாலைகளில் எது உண்மையானது என்று கண்டுபிடியுங்கள்...'' என்றாள்.
பேரரசன் சாலமோன் ""யார் அங்கே..? அந்த ஜன்னல் கதவைத் திறந்து விடுங்கள்...'' என்று ஆணையிட்டார். 
ஜன்னல் கதவு திறக்கப்பட்டது. தோட்டத்தில் ரீங்காரமிட்ட தேனீக்கள் ஜன்னல் வழியே வந்து புத்தம் புதிய மலர்களாலான மாலையின் மீது அமர்ந்தன. பேரரசன் உடனே ""இளவரசியாரே... தேனீ அமர்ந்த மாலையே உண்மையானது...'' என்றார்.
இளவரசி ஷீபா வியந்து போனாள். ""சாலமோனின் ஞானமே ஞானம்!'' என்று போற்றினாள். சாலமோன் தெய்வத்தைத் தொழுகையில், இறைவன் தோன்றி ""உனக்கு வரம் தருகிறேன். செல்வம், அமைதியான வாழ்வு, ஞானம் எது வேண்டும்?'' என்றார். பேரரசன் சாலமோன் தனக்கு ஞானமே வரமாகத் தரவேண்டும் என்று பெற்றுக்கொண்டான். 
இறைவன் தரும் ஞானம் பெற்று அறிவுடையோராக வாழ்வோம்; என்றும் இறையருள் நம்மோடு! 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT