வெள்ளிமணி

புரட்டாசியில் உதித்த புனிதர்!

18th Sep 2020 05:36 PM | -ரஞ்சனா பாலசுப்ரமணியன்

ADVERTISEMENT

 

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாட்டம் கொண்டு, உலகத்து உயிர்கள் நலம் பெற வேண்டி, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வள்ளலார், சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21 -ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் (அக்டோபர் 5, 1823) கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையா பிள்ளை - சின்னம்மையார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 

ராமலிங்கம் என்று திருநாமம் சூட்டப்பட்ட அவர், தன் அருஞ்செயல்களால் ராமலிங்க அடிகளார் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். மக்களின் பசிப்பிணியைப் போக்க சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது வடலூரில் தரும சாலை ஒன்றைத் தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கி அருட்பிரகாச வள்ளலார் ஆனார். இங்கு அணையா அடுப்பு மூலம் தொடர்ந்து இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தெய்வ வழிபாட்டின் பெயரால் பலியிடுதல் கூடாதென்றும், எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக் கூடாதென்றும் புலால் உணவு உண்ணக் கூடாதென்றும் அறிவுறுத்தினார். கடவுள் ஒருவரே என்பதும்,  அவர் அருட்பெருஞ்சோதி வடிவானவர் என்பதும் அவர் கொள்கை. அதனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை' என்று முழங்கினார். வள்ளலார் பக்தி நெறி நின்றாலும் உலக வாழ்வில் மக்கள் சிறந்து வாழும் பக்குவ நெறியும் கண்டவர். ஏழை, பணக்காரன், மேல்சாதி, கீழ்சாதி முறைகளை வன்மையாகக் கண்டித்தவர். 

ADVERTISEMENT

""பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு இல்லை எனாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதே. தந்தை, தாய் மொழியைத் தள்ளி நடக்காதே'' என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.

இறைவனின் மீது "திருவருட்பா' என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சமரச சன்மார்க்கச் சங்கத்தை நிறுவி, எல்லா மக்களையும் சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து பயன்பெற அழைத்தார். 

தாம் உருவாக்கிய சித்தி வளாகத் திருமாளிகையில் பல்வேறு அற்புதங்களைப் புரிந்தார். ஒருமுறை மறுநாள் சமையலுக்கு பொருள் இல்லை என்று ஊழியர்கள் வந்து சொன்னபோது, உடனே சித்தி வளாகத்திற்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தார். பின் எழுந்து வந்து நாளை தேவையான பொருள்கள் வந்து சேருமென தெரிவித்தார். அவர் சொன்னது போலவே மறுநாள் வண்டி வண்டியாக பொருள்கள் வந்து இறங்கின. தண்ணீரில் விளக்கெரியச் செய்தார். ஒரே இரவில் 1596 வரிகளை உடைய அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தார். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, "திருவருட்பா' என்று ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. தூய வெண்ணிற ஆடையையே ஓராடையாக அணிந்தார். சென்னை கந்தகோட்டம் உள்பட பல ஆலயங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியுள்ளார். 

அண்ணியாக வந்த அன்னை: இவர் சென்னையில் தன் அண்ணன் வீட்டில் இருந்தபோது அருகிலுள்ள திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் ஆலயத்திற்குச் சென்று அம்பிகையைத் தொழுவது வழக்கம். ஒருநாள் அம்பிகையின் தோற்றத்தில் லயித்து அவளது சந்நிதியிலேயே இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. இரவு நடை சாத்தப்படுகையில் கிளம்பி வீட்டுக்கு வந்தார். கதவு தாழ்போட்டிருந்ததால் அண்ணியைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்றெண்ணி, திண்ணையிலேயே பசியுடன் படுத்துறங்கி விட்டார். திடீரென்று யாரோ தன்னை தட்டி எழுப்ப, திடுக்கிட்டெழுந்தவர் எதிரில் தன் அண்ணி, தட்டில் உணவோடு புன்னகையுடன் நின்றிருப்பதைக் கண்டார். உணவை உண்டு விட்டு மீண்டும் திண்ணையிலேயே படுத்து விட்டார். 

சிறிது நேரம் கழித்து தன்னை மீண்டும் யாரோ எழுப்புவதை உணர்ந்து கண்விழிக்க, எதிரில் தன் அண்ணி மீண்டும் நின்றிருப்பதைக் கண்டார். அண்ணி அவரிடம் ""தாமதமாக வந்தால் கதவைத் தட்டக் கூடாதா? ஏன் கதவைத் தட்டாமல் பசியுடன் படுத்துவிட்டாய்?'' என்று கேட்க, குழம்பினார் வள்ளலார். அப்படியென்றால், சற்று முன் வந்து தன்னை எழுப்பி உணவிட்டது அன்னை வடிவுடையம்மனே என்று உணர்ந்து கொண்டு, அதைப் பற்றி அண்ணியிடம் சொல்ல, வள்ளலாரின் பக்தியைக் கண்ட அண்ணியின் மேனி சிலிர்த்தது.  அன்னை தந்த உணவே வள்ளலாருக்கு ஞானத்தையும், மொழிப் புலமையையும் தந்தது. 

சமூக சீர்திருத்த அறிஞர், சொற்பொழிவாளர், புலவர், நூலாசிரியர், சித்த மருத்துவர் , ஞானாசிரியர் இவர்களுக்கெல்லாம் மேலாக "வெள்ளாடை துறவி' என பன்முகங்களைக் கொண்ட வள்ளலார், 1874-ஆம் ஆண்டு தை 19-ஆம் தேதி ஜனவரி 30 -ஆம் நாள் பூச நட்சத்திரமும், பெளர்ணமியும் கூடிய நன்னாளில் தன் உடலை "ஞான தேகம்' ஆக்கிக் கொண்டு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு ஒன்றாக ஜோதி வடிவாகக் கலந்து விட்டார். 

இவ்வாண்டு வள்ளலார் திரு அவதார தின நட்சத்திரம் வரும் புரட்டாசி 3-ஆம் தேதியன்று அமைகின்றது (19.9.2020). ஆங்கில தேதியைப் பின்பற்றியும் பல இடங்களில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலும், இல்லார்க்கு ஈதலும் ஆகிய அவர் சொன்ன பண்புகளை நாமும் கடைப்பிடித்து நல்லறம் காப்போம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT