வெள்ளிமணி

பாவமன்னிப்பு

18th Sep 2020 06:03 PM | - ஹாஜி.மு.முஹம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் (மன்னிப்பு) செய்பவர் ஆவார்.
பாவம் என்று தெரிந்து கொண்டு அதனை வேண்டுமென்றே செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் எச்சரிக்கிறான்.
இன்னும் எவர்கள் பாவத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கியபோது, நிச்சயமாக இப்போது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன் என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர் குஃப்பார்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்வதன்மீது துணிச்சல் ஏற்பட்டுவிட வேண்டாம். மரணம் வரும்போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் எனக் கருதி தொடர்ந்து பாவத்தில் ஈடுபடக் கூடியவர்கள், தங்களின் மரண நேரத்தில் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
அல்லாஹ்வுடைய கட்டளைகளில் குறைவு செய்வதால் ஏற்படும் பாவம் ஒரு வகை. இன்னொன்று, மனிதர்களிடத்தில் குறைவு செய்வதால் ஏற்படும் பாவம். மனிதர்களை ஏமாற்றுவது, பிறருக்கு நாவையும், கரத்தையும் கொண்டு தீங்கிழைப்பது போன்ற பாவங்கள் செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட மனிதரிடம் சரி செய்யாமல், இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவது என்பது அல்லாஹ்விடம் ஏற்புடைய செயலல்ல.
உதாரணமாக, யாருக்கு வாரிசு சொத்தில் பங்கு இருக்கிறதோ அதனை அவருக்கு வழங்காமல் அதனைக் கைப்பற்றி, பிறகு அதிலிருந்து தான தருமங்களைச் சிறிதளவு செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என சிலர் நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளன், எந்த ஒரு படைப்பும் இன்னொரு படைப்பிற்குத் தீங்கு செய்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அத்தகைய தர்மத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை. எவரின் உரிமையையும் வேறு எவரும் பறித்துக் கொள்ளக்கூடாது. அது கியாமத் நாளில் நீதிவிசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் நீதி வழங்குவான்.
மூன்று நிபந்தனைகளுடன் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹுத ஆலா மன்னிக்கிறான். அவை: 1. பாவமன்னிப்பு கோருபவர் தான் செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்த வேண்டும். 2. அந்தப் பாவத்தை இப்பொழுதே முழுமையாக கைவிட்டுவிட வேண்டும். 3. இனி அந்தப் பாவத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.
அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான் :
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவாகப் பாவமன்னிப்பு தேடிக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான்.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT