வெள்ளிமணி

மனிதனின் இறுதி நேரம்

11th Sep 2020 06:00 AM | - ஹாஜி மு.முஹம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT


நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:     ஒவ்வொருவருடைய மரண நேரம், ஒவ்வொருவருடைய செயல், ஒவ்வொருவருடைய புதைக்கப்படும் இடம், ஒவ்வொருவருடைய வயது மற்றும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கவிருக்கும் உலக சாதனங்கள் ஆகிய ஐந்து காரியங்களை ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹுதஆலா எழுதி முடித்து விட்டான்.
இவ்வாறாக தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், துன்பத்தைக் கண்டு விரக்தி அடைவதும், நீண்ட நெடிய திட்டங்கள் போடுவதும், வியாபாரம், கொடுக்கல், வாங்கலில் அநியாயம் செய்வதும், பிறர் பொருளைத் திருடுவதும், அபகரிப்பதும், இன்பமோ, லாபமோ கிடைத்துவிட்டால் "என்னால் இப்படி நிகழ்ந்தது' என தற்பெருமை கொள்வதும் ஆகிய இவைவெல்லாம் மனிதன் தன் மரணத்தை உணராதது என்பதே பொருளாகும்.
உலகை நேசித்து இறைவனின் கட்டளைக்கு அஞ்சாமல் வாழக்கூடியவர்கள், மரண நேரத்திலும், மண்ணறையிலும், மறுமையிலும் நீண்ட, நீண்ட கடின வேதனைகளைச் சுகிக்க வேண்டியதிருக்கும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
அவர்களுடைய தவணை வந்துவிட்டாலோ, ஒரு கணமேனும் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். 
நாம் மரணத்தை நெருங்க விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால், அது அதிவிரைவாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.  மரணம் மனிதனை முடித்து வைக்கிறது எனப் பலர் எண்ணுகின்றனர்.  மரணம்தான், இறுதி பிரயாணத்தின் ஆரம்பம், உடலுக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவுக்கு அழிவு இல்லை.
அவன் தன் வாழ்நாளில் தேடிவைத்த செயல்களில் நன்மை மிகுதியாக இருந்தால், சந்தோஷமும், தீமைகள் மிகுதியாக இருந்தால் கைசேதமும் ஏற்படும்.
உயிர் உடலை விட்டுப் பிரியும்போது, இவ்வுலகக் கண்ணை மூடி, மறுமையின் கண் திறந்துவிடும். மரணம் ஒரு மனிதரை அழித்து விடக்கூடியதல்ல.  மாறாக, ஒரு உலகத்திலிருந்து மற்றொரு உலகத்திற்குச் செல்லும் பிரயாணமாகும்.  இவ்வுலகில் வாழும்போது கண்ணுக்குத் தெரியாத மறுமையைப் பற்றிச் சொல்லும்போது, நம்ப மறுத்த மனிதன் உயிர் பிரியும்போது அந்த உண்மையை உணர்ந்து கொள்வான்.  உயிர்,  உடலைவிட்டுப் பிரியப்போகும் இறுதி நேரமே "ஸ்க்கராத்' எனப்படும் 
மரணவேதனையாகும்.
நபித்தோழர் கஅப் (ரலி) அவர்களிடம் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள்,  ""மரணத்தைப் பற்றிக் கூறுங்கள்'' எனக் கேட்டபோது, ""அமீருல் முஃமினீன் அவர்களே! முட்கள் நிறைந்த ஒரு மரக்கிளை உடலினுள் புகுத்தப்பட்டு, அது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் நன்கு சுற்றி வளைத்து கொண்டு, பிறகு ஒரேயடியாக அது இழுக்கப்படுவது போன்று உயிரும் உடலிலிருந்து இழுக்கப்படுகின்றது'' என்று கூறினார்கள்.
இமாம் ஹழ்ரத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:  எவனது வசம் எனது உயிர் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக! உடலில் ஆயிரம் இடங்களில் வாளால் வெட்டப்படுவதைக் காட்டிலும் மரண இறுதி நேரத்தின் வேதனை மிகக் கடினமானதாக இருக்கும். ஸ்க்கராத்தின் நிலை மனிதனை அலங்கோலமாக்கிவிடும். மரணித்துவிட்ட மனிதனின் உடலைப் பார்த்து அவனது குடும்பத்தார்களும், உறவினர்களும் அழுது கொண்டிருக்க, மரணித்த ஆத்மாவோ தனது செயல்களைக் கண்டு, இறைவனிடம் தனது கதி என்னவாகுமோ என்று அழுது கொண்டிருக்கும்.  மரணித்தவனின் குடும்பத்தார்க்கு அந்த நாள் மட்டுமே துக்கம்; மரணித்தவனுக்கோ மறுமைநாள் வரை துக்கம்.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: மரண வேதனை உண்மையைக் கொண்டு வருகிறது. அப்போது ஏற்படும் கஷ்டங்களை அவரவர் மனம் மட்டுமே உணரும்.  அது வேறு யாருக்கும் தெரியாது; தெரிவிக்கவும் முடியாது.  அப்போது வாழ்நாளில் செய்த அத்தனைத் தீயசெயல்களும் மனதில் வந்து நிற்கும். அதனால் நெஞ்சு விம்மிவிம்மி அழும். ஆனால் கண்களில் கண்ணீர் வராது.  அந்தக் கஷ்டத்தை யாராலும் போக்க முடியாது.  வாழ்க்கையில் உலகப் பொருள்களைக் கொண்டு அடைந்த ஆனந்தமனைத்தும் அழுகையாக மாறும். 
பாவியான மனிதருக்கு மரணத் தருவாயில் உயிர் வாங்கப்படும் வேதனை ஒருபுறம்.  உயிரைக் கைப்பற்றும் "மலக்குல் மவுத்' என்ற வானவரின் உருவமே மிகப் பயங்கரமாகக் காட்சி தரும்.  கருத்த உருவமும், துர்நாற்றமும், சிலிர்க்க வைக்கும் சப்தமும், கரிய உடைகளும், வாயிலிருந்து புகையும் நெருப்பும் வெளிப்படுகின்ற கோலமே கொடூர வேதனையாக இருக்கும்.
ஒருதுளி இந்திரியத்திலிருந்து அவனை (மனிதனை)ப் படைத்து, அவனைச் சரியாக ஆக்கினான்.  அவனுக்கான வழியை எளிதாக்கினான்.  பின்னர் அவனை மரிக்கச்செய்து கப்ரில் ஆக்குகிறான். இறைவன் விரும்பும்போது அவனை உயிர்ப்பித்து எழுப்புவான்.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT