வெள்ளிமணி

ஏழூர் எல்லை கொண்ட ஸ்ரீசக்தி சந்தியம்மன்

11th Sep 2020 06:00 AM | - இரா.இரகுநாதன் 

ADVERTISEMENT

 

இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனப்படும் மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மகாசக்தியாக  திரிசூலம் மலைகளுக்கு நடுவே குடிகொண்டு அருள்பவள் ஸ்ரீசக்தி சந்தியம்மன்.  

இந்த மகாசக்தியை வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீரமுனி, கருமுனி, வேதமுனி, சடாமுனி ஆகிய ஏழு முனிவர்களும் வந்து தரிசித்துள்ளனர்.  

அதைத் தொடர்ந்து, மீனம்பாக்கம், பல்லாவரம், பழவந்தாங்கல், மூவரசம்பட்டு, கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல் ஆகிய ஏழு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டனர். இந்த இடம் இன்றைய திரிசூலம் (சென்னை விமான நிலையப் பகுதி) ஆகும். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசக்தி சந்தியம்மன் மேற்சொன்ன ஏழூர்களை எல்லைகளாய்க் கொண்டு, எட்டு திசைகளிலும் தன் ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கிறாள்.  

ADVERTISEMENT

தல வரலாறு: அக்காலத்தில் அருகிலோடிய  ஆற்றங்கரை மரத்தடியில் எழுந்தருளியிருந்த சந்தியம்மனுக்கு ஆடிமாதத்தில் பத்துநாள்கள்  திருவிழா எடுப்பது வழக்கம். ஒருமுறை பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு வழக்கம்போல் திருவிழாவைச் சிறப்புடன் நடத்திக் கொண்டிருந்தனர்.  அன்னை சர்வ அலங்காரத்துடன் தேரில் பவனி வந்து கொண்டிருந்தாள்.  

திடீரென்று மழை வந்ததால், அம்பாளை அப்படியே விட்டுவிட்டு பக்தர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.  கோபமடைந்த சந்தியம்மன் தேரோடு ஆற்றில் இறங்கி மறைந்து போனாள். அன்றுமுதல் அம்பாள் எவருக்கும் காட்சி தரவில்லை. அவ்வாண்டு நாடு முழுவதும் நோயும் நொடியும் உண்டாகி மக்கள் அல்லல்பட்டனர். பின்னர் பக்தர்கள் அழுது முறையிட்ட பின்பு, அம்பாள் ஆற்றிலிருந்து தோன்றி நோய் நொடிகளை நீக்கி சுபிட்சத்தை நல்கினாள் என்பது வரலாறு. 

திருக்கோயிலுக்குள் ஸ்ரீசக்தி சந்தியம்மன் திருச்சந்நிதி விமானத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் திரிசூலநாயகியாக அன்னை திருமுகத்தோடு தரிசனம் தருகிறாள்.   திருக்கோயில் பிராகாரத்தில்  நவகிரகங்கள்,  விநாயகர், முருகப்பெருமான், ஐயப்பன், முனீஸ்வரர் எழுந்தருளியுள்ளனர்.  

அங்குள்ள அரசமரத்திற்குக் கீழே சிவன், விநாயகர் அருள்பாலிக்கின்றனர். தொடக்கக் காலத்தில்  மண்சுவராக இருந்த இடம் நாளடைவில் நவீன கட்டுமான அமைப்புடன்  உருவாகியுள்ளது.  கோயிலுக்கு வெளியே சப்தகன்னியர்கள் சந்நிதி உள்ளது.   

பொதுவாக  தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்  தரிசன நேரமாகும். இத்திருக்கோயிலில் ஒருகால பூஜை நடைபெறுகிறது. ஏழூர் தவிர அருகில் உள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். வெள்ளி, செவ்வாய் மற்றும் பெளர்ணமி நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் கூடுகிறது. வேண்டுதல் செய்கிறவர்கள் அவ்வப்போது பொங்கல் வைத்து அன்னையை மனமுருகி வழிபடுகின்றனர்.

விண்ணில் பயணிப்போருக்கும், மண்ணில் வசிப்போருக்கும் அருள் பாலிக்கும் சந்தியம்மன் தன்னை நாடி வந்து வழிபடுவோர் அனைவருக்கும் வேண்டியதை அருள்வதால், வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் கண்கண்ட தெய்வமாய்ப் போற்றி வணங்குகின்றனர்.  

நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்களேன். மேலும் விவரங்களுக்கு: 044-22562035; 9940176365.

ADVERTISEMENT
ADVERTISEMENT