வெள்ளிமணி

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்... - 16

11th Sep 2020 06:00 AM | - சுமதிஸ்ரீ

ADVERTISEMENT


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

 

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானும் கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அருச்சிக்கத் தான் இருந்தானே  
(பாடல் : 2355)

பொருள் : தன்னை முழுவதுமாக உணர்ந்தவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை. தன்னை அறியாமல், தாங்களே துன்பப் படுகிறார்கள். தன்னை முழுவதும் அறியும் அறிவு இறைவனாலே வாய்க்கும்  என்பதை அறிந்த பிறகு, தன்னையே  பிறர் வழிபடத் தகுந்தவர்களாக இருப்பார்கள்.
இன்று வரை எத்தனையோ தன்னம்பிக்கைப் 
பயிலரங்குகளில் கற்பிக்கப் படுகிற, சாக்ரடீஸ் சொன்ன புகழ் பெற்ற தத்துவமாக விளங்குகிற "உன்னையே நீ அறிவாய்' 
என்பதைத்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார் திருமூலர்.
தன்னை அறிதல் என்பது தனது பலம், பலவீனம், தனது சாதனைகள், தனது தோல்விகள், தன்னால் எது முடியும், எது முடியாது என அனைத்தையும் அறிந்திருப்பது. நம்மில் பலர் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி அறிவதிலேயே ஆர்வமாக இருக்கிறோம். அடுத்தவர்களைப் பற்றியே அதிகம் அறிந்திருக்கிறோம். ஆனால், நம்மைப் பற்றி நாம் அறிய ஆர்வம் காட்டுவதில்லை.
"எனக்கு இன்னும்  என் சட்டை அளவு கூட சரியாகத் தெரியாது' என்று சொல்கிற மனிதர்கள் நம்மிடையே அதிகம் உண்டு. தன் அன்றாட தேவைக்கான விஷயங்களைக் கூட அறிந்திராதவர்கள் அநேகம் பேர்.
ஒருவர் ஒரு காரியத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் திறமை இருந்தும், அதைச் செய்யாவிடில் உனக்கெல்லாம் என்ன கேடு? என நாம் கேட்பதைத்தான், திருமூலர் இப்பாடலில் நம் தோளில் கை போட்டு, ஆதுரமாகச் சொல்வதைப் போலச் சொல்கிறார்.
அப்பர் சுவாமிகளும், தன்னை அறிபவனால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்பதை...
"தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே' 
எனப் பாடியுள்ளார்.
வள்ளலாரும்... 
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே' 
எனத் தன்னை அறியும் இன்பத்தைத் தரும் தந்திரத்தை வேண்டுகிறார்.
அடுத்தவர்களை எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பது போல், தன்னுடைய குற்றங்களையும் அறிந்திருந்தால், நிலையான உயிருக்கு எந்தத் தீங்கும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
"ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'
உயிருக்கு என்றும் அழிவில்லை. அது நிலையானது என்பதாலேயே "மன்னு உயிர்' என்றார் வள்ளுவர்.
உடம்பு தான் அழியுமே தவிர, உயிர் நிலையானது. அந்த உயிருக்கு நாம் செய்ய வேண்டிய உபாயம்  என்ன என்பதையும் திருமூலர் சொல்கிறார்.
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே  (பாடல் : 2228)
ஒருவனுக்கு பகைவனும், நண்பனும் அவனே தான். இந்தப் பிறப்பிலும், இனி வரும் பிறப்பிலும் அவன் அடையவுள்ள இன்ப, துன்பங்களுக்கு அவன் மட்டுமே தான் காரணம். 
அவன் செய்த வினைப்பயன்களை அவன்தான் அனுபவித்துத் தீர்க்க வேண்டுமே தவிர வேறு யாரையும் துணைக்கு அழைக்க முடியாது. யாருக்கும் தனது துன்பதைப் பங்கிட்டுத் தரவும் முடியாது. 
இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால், அவனுக்குத் தலைவன் அவனே தான்... அவனை வேறு யாரும் தலைமை கொள்ள இயலாது எனபது பாடலின் பொருள்.
நாலடியாரும்...
"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் 
தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் 
நிலையினும்மேன்மேல் உயர்ந்து நிற்பானும் 
தன்னைதலையாகச் செய்வானும் தான்' 
என, ஒருவன் தன்னை ஒரு நிலைக்கு உயர்த்திக் கொள்வதும், உயர்ந்த நிலையிலிருந்து தன்னைக் கீழே தாழ்த்திக் கொள்வதற்கும், இப்போது இருப்பதை விட உயர்ந்த இடத்தை அடைவதற்கும், தன்னைத் தலைமை ஏற்று நடத்துபவனாகச் செய்து கொள்வதும் அவனேதான் என்கிறது.
"எனக்கு'னு யாருமே இல்லை' என வருந்தாதீர்கள். உங்களுக்கு நீங்கள்  மட்டும்தான் துணை என உணருங்கள். நிலையான உயிர் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கப் போகும் அனைத்தும் உங்கள் செயல்களைப் பொருத்தே அமையும். உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே காரணம் என எடுத்துரைக்கிறார் திருமூலர்.
நம்மில் பெரும்பாலானோர் அடுத்தவர்களின் வார்த்தைகளில் தான் வாழ்கிறோம். யாராவது "என்ன இன்னிக்கு அழகா இருக்கீங்க..!' என்று சொன்னால், அந்த நாள் முழுவதுமே மிக மகிழ்ச்சியாக இருப்போம். "காய்ச்சலா? சோர்வா இருக்கீங்களே..!' என கேட்டால், அன்று முழுவதும் சோர்வாகவே இருப்போம். அடுத்தவர்களின் வார்த்தை நம்மை பலவீனப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது.
ஒரு கதை சொல்கிறேன்: 
ஒரு ராஜா, மார்கழி மாத நள்ளிரவில் தன் அரண்மனைக்குப் போகும் வழியில், ஒரு பிச்சைக்காரன் கோவணம் மட்டுமே உடுத்தியபடி படுத்திருப்பதைக் கண்டார். அவனை எழுப்பி, "இந்த மார்கழி மாதக் கடும் குளிரில் ஒரு போர்வை கூட இல்லாமல் எப்படி உறங்குகிறாய்?' எனக் கேட்டார்.
"எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் இப்படித்தான் இருக்கிறேன். இந்தக் குளிர் என்னை எதுவும் செய்ததில்லை' என்று பதில் சொன்னான் அந்தப் பிச்சைக்காரன். "என் ஆட்சியில் ஒருவன் குளிரில் போர்த்திக் கொள்ள எதுவும் இல்லாமல் இருப்பதை என்னால் ஏற்க முடியாது. நான் அரண்மனைக்குச் சென்றதும் உனக்கு ஆடைகளும், இரண்டு கம்பளிகளும் கொடுத்து விடுகிறேன். கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்குகிற சுகத்தை அனுபவித்துப் பார்...' என்று சொன்ன ராஜா, அரண்மனைக்குச் சென்றதும் அதை மறந்தே போனார். 
அடுத்த நாள் காலையில், பிச்சைக்காரனுக்கு கொடுத்த வாக்குறுதி நினைவு வந்தது. உடனே, இரண்டு கம்பளிகளை எடுத்துக் கொண்டு அவன் இருப்பிடம் வந்தார். அந்த பிச்சைக்காரன் இறந்து போயிருந்தான். அவன் அருகில் ஒரு கடிதம் இருந்தது...
"ராஜா... ஒருமுறை கூட என் உடல் குளிரால் வருந்தியதே இல்லை. நேற்று நீங்கள் கம்பளி தருவதாகச் சொன்ன பிறகு, கம்பளியைப் போர்த்தி தூங்கும் சுகத்திற்கு என் மனம் ஏங்க...ஏங்க... குளிரைத் தாங்க முடியாமல் என் உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் கம்பளி எடுத்து வந்தால், அப்போது குளிரைத் தாங்க முடியாமல் நான் இறந்து போயிருப்பேன்.' 
"இந்தக் குளிரை என்னால் தாங்க முடியும், இன்னொருவர் தரும் கம்பளி தேவையில்லை' எனத் தன் வலிமையை உணராததால் பரிதாபமாக இறந்து போனான்.
நாம் எல்லோருமே அந்த பிச்சைக்காரர் போலத்தான். நம்மால் எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், உனக்கு நான் இருக்கிறேன்... நான் உனக்கு உதவி செய்கிறேன்.... நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என அடுத்தவர்களின் வார்த்தையை நம்பி பலவீனமானவர்களாகிறோம்.
உங்களுக்கு நீங்கள் மட்டுமேதான் துணை. நீங்கள் செய்யும் செயல்களை வைத்தே உங்களின் இன்ப, துன்பம் அமைகிறது. அடுத்தவர்களைப் பற்றி ஆராய்வதை விட்டு விட்டு உங்களை அறிய முற்படுங்கள். உங்களை முழுவதும் நீங்கள் அறியும் போது மற்றவர்கள் உங்களை வழிபடுவார்கள் என்ற திருமூலரின் வார்த்தைப்படி வாழ்ந்து, மற்றவர்கள் வழிபடத் தகுந்தவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வோம்.
(தொடரும் )

ADVERTISEMENT

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT