வெள்ளிமணி

மகத்தான பலன் தரும் மஹாளயம்

11th Sep 2020 06:00 AM | -அபிராமி மைந்தன்

ADVERTISEMENT


தொன்றுதொட்டே முன்னோர் வழிபாட்டிற்கென்று ஒருசில தினங்களை வகுத்திருக்கின்றனர். முன்னோர் மறைந்த தினம், மாதப் பிறப்பு மற்றும் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை போன்ற தினங்களே அவை. இதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர்.

இதில் புரட்டாசியில் வரும் அமாவாசையையே "மஹாளய அமாவாசை' என்று சிறப்பித்து கூறுகின்றனர். "மஹாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்றும் பொருள்படுகிறது. இந்த காலகட்டத்தில் மறைந்த நம் முன்னோர்கள்  எல்லோரும் நம் இல்லத்திற்கு வருகிறார்களென புராணங்கள் கூறுகின்றன. மற்ற காலங்களில் தாங்கள் இருக்கும் பித்ருலோகத்திலிருந்து பூமிக்கு வர அவர்களால் இயலாது.

பொதுவாக, புரட்டாசி மாதம் பெளர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும் காலம் மஹாளயபட்சமாகும். (சில ஆண்டுகளில் ஆவணி மாதமே இந்தக் காலம் துவங்கும்). இந்த காலகட்டத்தில் வரும் பரணி - மஹாபரணி என்றும், அஷ்டமி - மத்யாஷ்டமி என்றும், திரயோதசி - கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. 

முன்னோர்கள் இறந்த நாள்களிலோ அல்லது அமாவாசை நாள்களிலோ திதி (தர்ப்பணம்) கொடுக்க மறந்து விட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பைத் தவறி விட்டாலோ, அவர்கள் இந்த மஹாளய காலத்தில் திதி கொடுத்தால் முழுப் பயனும் கிடைக்கும். அதையும் தவறவிட்டவர்கள் மஹாளய அமாவாசையன்று அவசியம் திதி கொடுத்து விடவேண்டும். முன்னோர்களைத் தொழுதால் அவர்களின் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை. 

ADVERTISEMENT

இந்த மஹாளய புண்ணிய காலத்தில், நம் முன்னோர் மட்டுமின்றி, நமக்கு குருவாய் இருந்தவர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், விருப்பமானவர்கள், வாரிசு இல்லாமல் இறந்தவர்கள் என எவருக்கு வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம்; அவர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.

மஹாளய அமாவாசையில் தான தருமங்கள் செய்வது முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கச் செய்வதால், அவர்கள்  மகிழ்ந்து திருப்தியுடன் மீண்டும் பித்ருலோகம் செல்கையில் மன நிறைவுடன் உங்களை வாழ்த்துவர். சிலருக்கு ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதாகச் சொல்வர். அந்த தோஷமும் இதன் மூலம் நீங்கும்.

இந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கிய மஹாளயம், வரும் 17-ஆம் தேதி  (புரட்டாசி முதல் தினம்) அன்று மஹாளய அமாவாசையுடன் முடிகிறது. மஹாளய அமாவாசையில் நம் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து அவர்களது அருளையும், ஆசியையும் பெற்று வளமாக வாழ்வோம்..!

ADVERTISEMENT
ADVERTISEMENT