வெள்ளிமணி

சிறுவன் தாவீதை ராஜாவாக அபிஷேகித்த தேவன்

11th Sep 2020 06:00 AM | -எம்.ஜி.நிர்மலா 

ADVERTISEMENT

 

நாட்டை ஆள்பவர் நல்லவராகவும், நற்குணம் உள்ளவராகவும், நீதி நியாயம் தெரிந்தவராகவும், வீரம் மிக்கவராகவும், எல்லோரையும் நேசிப்பவராகவும், தெய்வபக்தி உள்ளவராகவும் இருந்தால் அரசு மேன்மை பெறும். ஒரு தலைவர் பிறக்கும் பொழுதே எல்லா குணநலன்களும் உள்ளவராக இருப்பார். ஆனால் சமயம் வாய்க்கும்போதுதான் அவர்களின் ஆளுமை வெளிப்படும். 
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் காலத்தில் யூதர்கள் தங்களுக்கு அரசர் வேண்டாம் என்றும் ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் தங்களை ஆண்டால் போதும் என்றும் நினைத்திருந்தனர். 
ஆனால் பிற நாடுகளில் அரசர்கள் தோன்றி ஆட்சி செய்தார்கள். அதைக்கண்டு இஸ்ரவேல் மக்களும் தங்களுக்கு அரசர் ஒருவரை தேர்வு செய்து தரும்படி அக்காலத்தில் இருந்த தீர்க்கதரிசியான சாமுவேலிடம் வேண்டினார்கள். 
அவர் கர்த்தரிடம் வேண்டி சவுல் என்னும் திடமான, வீரமான, அழகான வாலிபரை தெரிவுசெய்து அரசராக அபிஷேகித்தார். 
சவுல் மிகச்சிறந்த அரசனாக ஆட்சி செய்தார். பின்னர், வழி விலகி தன் இஷ்டம்போல் ஆட்சி செய்து கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், தீர்க்கதரிசிகளின் சொற்களைக் கேட்காமல் பாதை மாறிப் போனார். தீர்க்கதரிசி சாமுவேல் இதைக்கண்டு மிகுந்த வேதனைக்கு ஆளானார். 
கர்த்தர் சாமுவேலை நோக்கி ""சவுலுக்காக துக்கம் அடைய வேண்டாம். பெத்தலகேம் என்னும் ஊரில் நான் காண்பிக்கும் நபரை அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்..!'' என்றார். 
சாமுவேல் யாருமறியாமல் பெத்தலகேம் நகருக்குச் சென்றார். பலியிட ஒரு காளையுடன் ஆலயத்துக்கு வந்தார். ஊரிலிருந்த பெரியவர்களை அழைத்து,   ""நான் இங்கு பலியிட வந்துள்ளேன். 
இவ்வூரில் வாழும் ஈசாய் என்பவரையும், அவரது ஏழு பிள்ளைகளையும் பலி விருந்துக்கு அழைத்து வாருங்கள்'' என்று சாமுவேல் கூறினார். 
ஆலயத்தில் பலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பலி விருந்து ஆயத்தமானது. சாமுவேலிடம் தெய்வம் சொன்ன நேரம் வந்தது.
ஈசாயின் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் பலிபீடத்தைக் கடக்கச் செய்தார். அவர்களில் எலியா, சம்மா போன்றவர்கள் ஓர் அரசனுக்குரிய ஆளுமை உள்ளவர்களாக இருந்தார்கள். அந்த ஏழு குமாரர்களும் பலி பீடத்தைக் கடந்த பொழுது யாரையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை. 
""நீயோ முகத்தைப் பார்க்கிறாய்... கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்'' என்றார்  சாமுவேல் (1 சாமுவேல் 16:7). அப்பொழுது ஈசாய் ""எனக்கு இன்னொரு மகன் இருக்கிறான். அவன் பெயர் தாவீது. அவன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான்'' என்றார். 
""உடனே அவனை அழைத்து வாருங்கள்'' என்று சாமுவேல் கூறினார். தாவீதை அழைத்து வந்தனர். பலி பீடத்தை தாவீது கடந்து சென்றான்.
அப்பொழுது கர்த்தர் ""இவனையே நான் தெரிந்துகொண்டேன்'' என்று கூறினார். 
உடனே சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து தாவீதின் தலையின் மேல் ஊற்றி, ""இஸ்ரவேலின் ராஜாவாக கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்'' என்றார். இந்த அபிஷேகம் ரகசியமாய் நடந்தது. கர்த்தரின் ஆவி தாவீதின் மேல் இறங்கியது. 
தாவீது எல்லாத் தகுதிகளும் பெற்று இஸ்ரவேலின் ராஜாவாக அரசாண்டார். தெய்வ ஆசியிருந்ததால் வீரனாகவும், கவிஞனாகவும், பக்தி உள்ளவனாகவும் விளங்கினார். இசைக்கருவிகளை மீட்டி, தெய்வப் பாடல்களை நூற்றுக்கும் மேலாக இயற்றினார். 
நம்மையும் தெய்வம் தேர்வு செய்து அவரவர் வழிகளில் வழிநடத்துகிறது. இறைவன் தந்த வழிகளில் செம்மையாய் நடந்து நற்பெயர் பெறுவோம். கடவுளின் ஆசீர்வாதம் நம்மை வழி நடத்துவதாக..! 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT