வெள்ளிமணி

துங்கபத்ரா புஷ்கர விழா!

30th Oct 2020 12:00 AM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT


"நதிகள் விழா' எனப்படும் புஷ்கரத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது குறிப்பிட்ட ராசிக்குரிய நதியில் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு மகர ராசிக்குரிய துங்கபத்ரா நதியில் புஷ்கரத் திருவிழா நடைபெறவிருக்கிறது. இதனைப் பற்றிய விவரங்கள் அறியுமுன், புஷ்கர விழா தொடர்புடைய புராணக் கதையைத் தெரிந்து கொள்வோம்.

ஒரு சமயம் நவகிரகங்களில் எந்தவித தோஷமில்லாதவரும், சுப கிரகமுமான குரு பகவான் ஒரு வேண்டுதலோடு பிரம்மாவை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். அவரது தவ வலிமையைக் கண்ட பிரம்மன் குருவின் முன் தோன்றி அவரது கோரிக்கை யாது என வினவினார். தேவ குருவும் தனக்கு "கிரஹாதிபத்யம்' (கிரகங்களனைத்திலும் மேலான நிலை) வேண்டுமெனவும், பிரம்ம கமண்டலத்திலுள்ள புஷ்கரத்தையும் அளிக்குமாறு கேட்க, அவ்வண்ணமே நான்முகனும் வரமருளினார். 

ஆனால் பிரம்ம கமண்டலத்தில் வசிக்கும் "புஷ்கரர்' என்ற அரசர் (உலகிலுள்ள 3 1/2 கோடி தீர்த்தங்களுக்கும் அரசர்) "பிரம்மாவை விட்டு நீங்கமாட்டேன்' என்று சொல்லவும், "கொடுத்த வரத்தைத் திரும்பப்பெற முடியாது' என்று நான்முகன் எடுத்துச் சொல்லவும், ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. 

அதன்படி, குரு பகவான் ஒவ்வொரு ராசியில் பிரவேசித்த முதல் 12 நாள்களும், அந்த ராசியிலிருந்து விடுபடப்போவதற்கு முந்தைய 12 நாள்களும், இடைப்பட்ட காலத்தில் உள்ள நாள்களில் நடுப்பகலில் 4 நாழிகை அதாவது 96 நிமிடங்கள் புஷ்கரர் அந்தந்த ராசிகளுக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. எனவே குருபெயர்ச்சியின் பொழுது சம்பந்தப்பட்ட நதிகளில் புஷ்கரர் அனைத்து தீர்த்தங்களுடனும் வாசம் செய்வதாக ஐதீகம். இதுவே புஷ்கரம் எனப்படும். 

ADVERTISEMENT

புஷ்கர காலத்தில் மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் அந்தந்த தீர்த்தங்களில் வந்து நீராடி மகிழ்வதாகவும், நீராடும் மக்களுக்கு அனைத்து நதிகளிலும் நீராடிய பேறு கிடைக்கும் எனவும், அக்காலங்களில் செய்யப்படும் தானதர்மங்களுக்கு பல மடங்கு பலன்கள் வந்தடையும் என்றும், பித்ருதோஷம் உள்பட அனைத்து விதமான தோஷங்களும், செய்த பாவங்களும் விலகும் எனவும் புராணங்கள் விவரிக்கின்றன. 

ராசிகளும் அதற்குரிய நதிகளும் (புராணங்களில் உள்ளபடி) 

மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - பிரம்மபுத்ரா, மகரம் - துங்கபத்ரா, கும்பம் - சிந்து, மீனம் - பிரணீதா.

இவ்வாண்டு குருபெயர்ச்சி

வாக்கியக் கணித முறைப்படி நவம்பர் 15 (ஐப்பசி 30), திருக்கணித முறைப்படி நவம்பர் 20-ஆம் தேதி (கார்த்திகை - 5) குருபகவான், அவரது ஆட்சி வீடான தனுர் ராசியை விட்டு நீச்ச வீடான மகரத்தில் பிரவேசித்து அதே ராசியில் அமர்ந்துள்ள சனி பகவானுடன் இணைகிறார். புண்ணிய நதி தீரங்கள், மகான்களின் பிருந்தாவனங்கள், ஜீவசமாதிகள், வேத சப்தம் ஒலிக்கும் இடங்கள் ஆகியவற்றில் குருபகவான் எழுந்தருளி தனது சாந்நித்யத்தை வெளிப்படுத்துவார் என்பது ஐதீகம்.

வராகம் தந்த துங்கபத்ரா

மகர ராசிக்கு உரிய நதி துங்க - பத்ரா, மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்காமூலா என்னுமிடத்தில் உற்பத்தியாகி, கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திரமாநிலம் வரை பாய்கிறது. 

புராணங்கள் கூற்றின்படி, இந்த மலைக்கு "வராஹ பர்வதம்' என்று பெயர். வராக அவதாரம் முடிந்தபின் இங்கு அமர்ந்து சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாராம் திருமால்.  அப்போது அவரது வாயிலிருந்து கோரைப்பற்கள் மூலமாக ஒழுகிய அமிர்த தாரகையான நீர் வழிந்து இடது பல்லிலிருந்து ஒழுகியது துங்கை எனவும், வலது பல்லிருந்து ஒழுகியது பத்ராவாகவும் பரிமளித்தன (ஷிவ மொக்காவுக்கு அருகில் "கூடலி' என்ற இடத்தில் ஒன்றிணைந்து துங்கபத்ராவாகிறது).

வேதங்களின் "தாதி' என்றே துங்கபத்ரா கொண்டாடப்படுகிறாள். ஸ்ரீமத் பாகவத்திலும், பத்ம புராணத்திலும், மார்க்கண்டேய புராணத்திலும் இந்நதி சிறப்பாக சொல்லப்படுகிறது. "துங்கா பானே! கங்கா ஸ்நானே' என்று உலகிலேயே சிறந்த சுவையுள்ள துங்கபத்திரை நீரின் ருசியை சிலாகித்து வழங்குவது உண்டு. இந்த நதி தீரத்தில் முக்கியமான ஸ்தலங்கள் உள்ளன.

புஷ்கர விழா நடைபெற உள்ள பகுதி 

"ஆனேகுந்தி' விஜயநகரப் பேரரசர்கள் காலத் தில்  யானைகளைக் கட்டுமிடமாக விளங்கியதால் இந்தப் பகுதி "ஆன கோந்தி' என்று கன்னடத்தில் அழைக்கப்பட்டது;  "ஆனே குந்தி' என்று தமிழில் அழைக்கப்படுகிறது. 

ராமாயண காவியம் தொடர்புடைய பல இடங்கள், குறிப்பாக சபரி ஆசிரமக் குகை, ரிஷ்யமுக பர்வதம், ஸ்ரீராமன் சுக்ரீவனை சந்தித்த சிந்தாமணி குகை, மலையாவந்தம், ஆஞ்சநேயர் அவதரித்த அஞ்சனாத்ரி போன்றவை இங்குதான் சுமார் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ளன. மாத்வ ஆச்சாரியர்களின் நவ பிருந்தாவனமும் துங்கபத்திரா நதியில் ஒரு தீவில் அமைந்துள்ளது. 

இந்த நதி தீர்த்தத்தின் மகிமையை உணர்ந்த காஞ்சி மஹா சுவாமிகள் 1978-79 -இல் சுமார் 172 நாள்கள் இப்பகுதியில் தங்கியிருந்து பூஜை, ஜபங்களை மேற்கொண்டுள்ளார் என்பது ஒரு சிறப்பாகும்.

புஷ்கர விழா

ஸ்ரீகாஞ்சி காம கோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுக்ரகத்துடனும், நஞ்சன் கூடு ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் ஸ்ரீஸ்ரீசுபேந்திர தீர்த்த சுவாமிகள் அனுக்ரகத்துடனும் உதவியுடனும், பல்வேறு மடாதிபதிகள், குரு மகாசந்நிதானங்கள், ஆதீனகர்த்தாக்களின் அருளாசியுடனும் இவ்விழா நவம்பர் 20 -ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 1 -ஆம் தேதி வரை ஆனேகுந்தி சிந்தாமணி கோயில் படித்துறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தொற்று நோய் பரவல் தடுப்புக்காக, மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் வகுத்துள்ள விதிகளின்படி, மிக மிக எளிய முறையில் விழா நடைபெறும்.

இதில், வேதபாராயணம், மகா ருத்ரஜபம், சண்டி பாராயணம், விசேஷ காம்யார்த்த ஹோமங்கள், கலச தீர்த்தங்களை நதியில் சேர்ப்பித்தல், நதி ஆரத்தி போன்ற வைபவங்கள் சிறப்பாக நடைபெறும். 

ஏற்கெனவே காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா புஷ்கரங்களை சிறப்பாக நடத்திய அதே ஆன்மிக அன்பர்கள் குழுவே துங்க பத்ரா புஷ்கர விழாவையும் உள்ளூர் முக்கியஸ்தர்களுடன் இணைந்து நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

மேலும் தகவல் தொடர்புக்கு: மகாலட்சுமி சுப்ரமணியம் (முதன்மை அமைப்பாளர்) - 9840053289, வளசை கே.ஜெயராமன் (நிகழ்ச்சி நிரல் பொறுப்பாளர்) - 9444279696.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT