வெள்ளிமணி

ஞானகுருவின் பற்பல வடிவங்கள்!

30th Oct 2020 12:00 AM | -டி.எம். ரத்தினவேல்

ADVERTISEMENT


ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, கீர்த்தி தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி, திவ்ய தட்சிணாமூர்த்தி என்பவை ஆகமங்களும், சிற்ப நூல்களும் குறிப்பிடும் தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்களாகும். 

நாரதர், ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர், அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் தட்சிணாமூர்த்தியைச் சூழ்ந்து அமர்ந்துள்ளதாக "அம்சுமத் பேதாகமம்' தெரிவிக்கிறது. 

அகஸ்தியர், புலஸ்தியர், விஸ்வாமித்திரர், ஆங்கீரசர் ஆகிய முனிவர்கள் தட்சிணாமூர்த்தியின் முன்னால் அமர்ந்து இருப்பார்கள் என்று "காரணாகமம்' என்ற நூல் கூறுகிறது. 

அரக்கோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவ ஸ்தலம் தக்கோலம் ஸ்ரீஜல நாதீஸ்வரர் கோயில். இங்கு வித்தியாசமாக "உத்கடிக ஆசன' முறையில் அமர்ந்து, இடதுபுறம் தலையை சாய்த்தபடி அபூர்வ கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம்.  

ADVERTISEMENT

காஞ்சிபுரம், திருவொற்றியூர், நஞ்சன் கூடு ஆகிய திருத்தலங்களில் இருக்கும் இவர் பிரம்மனுக்கு அருள் புரிந்தவர் என்பதால் "பிரம்ம தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். 

வேதாரண்யம், நாகலாபுரம், திருப்பூந்துருத்தி, பெரு வேளூர் ஆகிய தலங்களில் இசை வல்லுநராக வீணாதர வடிவில் இருப்பதால் இவர் "வீணாதர தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். 

சிவபெருமான் மீட்டும் வீணை மட்டுமே உயிர்களுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது என்பதால் இவரை "கேய தட்சிணாமூர்த்தி' என்று "உத்தர காமிக ஆகமம்' கூறுகிறது. 

திருவலம், மேல்பாடி திருத்தலங்களில் ரிஷபத்தின் மீது அமர்ந்த வீணை வாசிக்கும் வடிவம் "வீணாதர தட்சிணாமூர்த்தி' வடிவமே! 

திருக்கண்டலம், திருக்கள்ளி தேவாரப்பாடல் பெற்ற தலம். இங்கே தட்சிணாமூர்த்தியின் மடியில் அம்பிகை அமர்ந்திருப்பதால் "சக்தி தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார். 

சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் இடது புறம் நிற்கும் அன்னை பெருமானை தழுவிய நிலையில் அற்புதக் காட்சி தருகிறார். இவரை "சாம்ய தட்சிணாமூர்த்தி' என்பர். 

மயிலாடுதுறையில் ரிஷபத்தின் மீது அமர்ந்து தியானம் உபதேசிக்கும் பெருமானை "மேதா தட்சிணாமூர்த்தி' என்பர். 

திருவிடைமருதூரில் உள்ள திருக்கோயிலில், காலடியில் நந்தி படுத்திருக்க, அதன் முதுகில் வலது காலை ஊன்றியபடி காட்சி தருகிறார் "சாம்பசிவ தட்சிணாமூர்த்தி'.   

தியாகசமுத்திரம் கைலாசநாதர் ஆலயத்தில் மழு ஏந்திய 
தட்சிணாமூர்த்தியைக் காணலாம். 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT