வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 117

டாக்டா் சுதா சேஷய்யன்

1550-களில் போர்த்துகீசியர் இங்கு வந்தனர். அடுத்த ஐம்பதாண்டுகளுக்குப் போர்த்துகீசியர்களின் தலைமைப்பீடமாகவே புன்னைக்காயல் விளங்கியுள்ளது. 

இந்த நிலையில்தான், "முதல் ஜெஸூயிட் தூதுவர்' என்னும் அடைமொழிக்குப் பொருத்தமானவரான புனித ஃபிரான்சிஸ் சேவியரும் புன்னைக்காயலுக்கு வந்தார். 

நவரே அரசில் (இப்போதைய ஸ்பெயின்) 1506, ஏப்ரல் 7-ஆம் நாள் பிறந்த ஃபிரான்சிஸ் கோடிஜாசோ சேவியர், 1539-இல், யேசுவின் சங்கம் (சொûஸட்டி ஆஃப் ஜீஸஸ் என்னும் ஜெஸூயிட் அமைப்பு) என்னும் அமைப்பைத் தொடங்கிய எழுவரில் ஒருவர் ஆவார். 1540-இல், இந்த அமைப்புக்குப் போப்பாண்டவர் மூன்றாம் பால் அவர்களின் அங்கீகாரம் கிட்டியது. 

1500-களின் தொடக்கத்திலிருந்தே போர்த்து

கீசியர்கள் இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் பலவற்றை வசப்படுத்தி வைத்திருந்தனர். இந்தப் பகுதிகளில் போர்த்துகீசியர்கள் பலர் குடியமர்ந்திருந்தனர். இப்பகுதிகளில் யேசுவின் நெறியைப் பரப்ப வேண்டும் என்று விரும்பிய போர்த்துகீசிய அரசர் ஜான், 1540-இல், ஜெஸூயிட் தூதுவர்களை இந்தியா செல்லுமாறு கேட்டுக்கொண்டார். நிக்கோலஸ் பொபடில்லா மற்றும் சிமாவ்ராட்ரிக்ஸ் ஆகிய இருவரும் இதற்காக ஆயத்தமாகினர். கடைசித் தருணத்தில் பொபடில்லா நோய் வாய்ப்பட, ஃபிரான்சிஸ் சேவியர் அந்த இடத்திற்குத் தேர்வானார். 

1540 மார்ச் மாதம் ரோம் நகரிலிருந்து புறப்பட்டு, ஜூன் மாதம் லிஸ்பன் நகரம் சென்றடைந்த சேவியர், அரசரையும் அரசியையும் சந்தித்தார். சான்டியாகோ என்னும் கப்பலில் 1541, ஏப்ரல் 7-ஆம் நாள் லிஸ்பனிலிருந்து புறப்பட்ட சேவியர், 1542, மே 6-ஆம் நாள், அப்போதைய போர்த்துகீசிய இந்தியாவின் தலைமையிடமான கோவா நகரை அடைந்தார். 1544, ஆகஸ்ட் 21-ஆம் நாள், சேவியர் புன்னைக்காயலை அடைந்ததாகத் தெரிகிறது. தமிழ் மொழியில் சமயப் பாடங்களை மனப்பாடம் செய்துகொண்டு, வீதி வீதியாக மணியடித்துக் கொண்டே சென்று அவர் சமயப்பணியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 

1544 டிசம்பரில், சேவியர் கோவா திரும்பினார். புன்னைக்காயலின் மீன்பிடி கிராமங்களில் சமயப்பணி மேலும் நடைபெறவேண்டும் என்று கருதிய சேவியர், ஜெஸூயிட் இயக்கத் தலைவரான இக்னேஷியஸ் லயோலா அவர்களுக்குக் கடிதம் எழுதி, மேலும் சில ஜெஸூயிட் தூதுவர்களை அனுப்பக் கோரினார். இதன்படி, இத்தாலிய ஜெஸூயிட் போதகரான ஆன்டனி க்ரிமினேல் என்பாரும் போர்த்துகீசிய ஜெஸூயிட் போதகரான ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் என்பாரும் கோவாஅடைந்தனர். 

1546-இல், க்ரிமினேல்லைத் தூத்துக்குடி- புன்னைக்காயல் பகுதிக்கு அனுப்பினார் சேவியர்; தமிழை எழுதப்படிக்கக் கற்றுக் கொண்ட முதல் வெளிநாட்டுப் பாதிரியார்ஆன்டனி க்ரிமினேல் என்பதாகத் தோன்றுகிறது. 1548-இல், மிகக் குறுகிய காலத்திற்குக் கிழக்குக்கரைப் பக்கம் வந்த சேவியர், க்ரிமினேல்லைத் தம்முடைய வாரிசாக அடையாளம் காட்டிச் சென்றார். இருந்தாலும்,1549-இல், க்ரிமினேல் அகால மரணமடைய, ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் முக்கியத்துவம் பெற்றார். ஆங்கில-தமிழ் உச்சரிப்புக் குறிப்புகளைக் கொண்டு இவருடைய பெயர் அன்ரீக் அன்ரிக்ஸ் என்றும் வழங்கப்பட்டுள்ளது. 

1550 தொடங்கி அடுத்து வந்த ஐம்பது ஆண்டுகளுக்கு ஹென்ரிக்ஸ் ஆற்றிய பணிகளின் பட்டியல் மிக நீளமானது. "முத்துக்குளிப் பகுதிகளின் பொற்காலம்' என்றே இக்காலம் விவரிக்கப்படுகிறது. கிறித்துவ சமயப் பணியில் ஈடுபட்டிருந்த ஹென்ரிக்ஸின் முயற்சிகளால் தேவாலயங்கள், சமூகக் கூடங்கள், பயிற்சி நிலையங்கள் போன்றவை இப்பகுதியில் நிறுவப்பட்டன. இக்காலகட்டத்தில், முத்துக்குளிப் பணிகள் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன; இவற்றின்  தலைவராக ராட்ரிக்ஸ் குடினோ என்னும் போர்த்துகீசியர் இருந்துள்ளார். 

புன்னைக்காயல் பகுதியில் தங்கியிருந்த போர்த்துகீசியர்கள் பலர் நோய்வாய்ப்பட, மருத்துவமனை ஒன்றை ஹென்ரிக்ஸ் நிறுவினார். மருத்துவர்கள் என்று யாரும் இங்குப் பணியாற்றியதாகத் தெரியவில்லை. இருப்பினும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இடமளிக்கக்கூடிய மருத்துவமனை என்னும் ஒன்று முதன் முதலாக நிறுவப்பட்ட இடம் என்று புன்னைக்காயல் இதனால் சிறப்படைகிறது (சோழப்பேரரசிலும், பாண்டியப்பேரரசிலும் ஆதுரச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன என்றாலும், 14 முதல் 16-ஆம் நூற்றாண்டுக் காலகட்டங்களில் இத்தகைய ஆதுரச்சாலைகளும் மருத்துவச்சாலைகளும் அநேகமாகக் காணாமல் போயிருந்தன). 

1551-இல், சமயப்பயிற்சிப் பள்ளி ஒன்றையும் ஹென்ரிக்ஸ் நிறுவினார். தம்முடைய சமயப் பணிகள் வெற்றி பெறவேண்டுமெனில், கிறித்துவக் கோட்பாடுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என்பதை ஹென்ரிக்ஸ் உணர்ந்தார். 

(தொடரும்) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT