வெள்ளிமணி

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் - 23

30th Oct 2020 06:00 AM | - சுமதிஸ்ரீ

ADVERTISEMENT

 

சிவபெருமான் தன் பராக்கிரமங்களை நிலை நாட்டிய அட்ட வீரட்டானத் தலங்கள் குறித்தும் திருமூலர் பாடியிருக்கிறார்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே 
(பாடல் : 343)

பொருள்: சிவந்த பொன் போல பொலியும் விரிசடையின் மேல் கங்கையைச் சூடியுள்ள, எல்லாவற்றுக்கும் மூலமாய் இருப்பவன் பழமையானவனான சிவபெருமான். அவன் முப்புரங்களை எரித்தான் என்கின்றனர் மூடர்கள். பொன், வெள்ளி, இரும்பாலான மூன்று கோட்டைகளை அமைத்துக் கொண்டு தேவர்களையும் மற்றவர்களையும் வருத்திய வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகியோருடைய கோட்டைகளை சிவன் நெற்றிக்கண் நெருப்பால் அழித்ததை மூடர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். எனவே, முப்புரம் எரித்ததை யார் பார்த்தார்கள் ?

ADVERTISEMENT

சிவபெருமான் முப்புரங்களை  எரித்து தன் வீரத்தை வெளிப்படுத்திய தலம் "திருவதிகை'.

தரும சேனராக இருந்த திருநாவுக்கரசர், வயிற்று வலி நீங்க..

"கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல 
                                                                                செய்தன நான்அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும் பிரியாது 
                                                                       வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு 
                                                                                           துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடியேன்அதி கைக்கெடில 
                                                                    வீரட்டா னத்துறை அம்மானே' 
எனப் பதிகம் பாடி சூலை நோய் நீங்கியத் தலம் திருவதிகை.

"அப்பர் சுவாமிகள் உழவாரப் பணி செய்த திருத்தலத்தில் கால் வைக்க மாட்டேன்' என சுந்தரர், கோயிலுக்கு வெளியே நின்ற போது, அவருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை  கொடுத்த தலம் இது. 

ஞான சம்பந்தப் பெருமானுக்கு திருநடனக் காட்சியளித்ததும் இங்கு தான். சிவபெருமான் பல்வேறு அற்புதங்களைச் செய்த தலம் திருவதிகை. திலகவதியார் திருவதிகை திருக்கோயிலில்தான் தொண்டு செய்து வந்தார்.

சந்தான குரவர்களில் மெய்கண்ட தேவரின் சீடரும், உண்மை விளக்கம் நூலின் ஆசிரியருமான மனவாசகங் கடந்தார் அவதரித்த திருத்தலமும் இதுவே.

இவ்வளவு சிறப்புமிக்கத் திருவதிகையில்தான், தன் சிரிப்பின் மூலம் முப்புரம் எரித்தார் சிவன் எனச் சொல்கிறோம். "முப்புரம் என்பது நமது ஆணவம், கன்மம், மாயை தானே தவிர, எங்கோ இருப்பதல்ல' என்கிறார் திருமூலர்.

பதி, பசு, பாசம் இவற்றில் பசுவாகிய நாம், பாசமாகிய ஆணவம், கன்மம், மாயை இவற்றை விட்டு விட்டால் பதியாகிய இறைவனோடு சேரலாம் என்பதே சைவ சித்தாந்தக் கோட்பாடு.

"செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனே
மும்மை நலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே' 

என்கிறார் மாணிக்கவாசகர்.

"முழு முதல் பொருளாகிய சிவபெருமான், என் மும்மலங்களை அறுத்து, நாயாகிய என்னையும் பல்லக்கில் ஏற்றுவித்தான்' என்கிறார்.

சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம், நம் மும்மலங்களை அழிப்பதற்காகவே!

மும்மலத்தை ஒழித்தால் தான் இறைவனோடு சேர முடியுமா என்ற கேள்விக்கும் திருமூலரே பதில் தருகிறார். இறைவனோடு சேர்ந்து விட்டாலே, மும்மலங்கள் தானாக அழிந்து விடுமாம். இறைவனை எண்ணித் துதித்து, அவன் அருளுக்குத் தகுதி உடையவர்களாக ஆகும் போது, மும்மலங்கள் நம்மை விட்டு நீங்கி விடும்...

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

பஞ்சையும், சூரிய காந்தக் கல்லையும் ஒன்றாக வைத்தால் பஞ்சில் நெருப்பு பற்றுவதில்லை. ஆனால் சூரிய காந்த கல்லை, சூரியனைப் பார்த்த படி வைத்து, அதன் கீழே பஞ்சை வைத்தால் பற்றிக் கொள்கிறது. அது போலத்தான், இறைவன் என்ற சூரியனின் பக்கமாக நம் மனதைத் திருப்பினால், நம் ஆன்மாவாகிய சூரிய காந்தக்கல் மும்மலங்களாகிய பஞ்சை எரித்து விடும் என்கிறார் திருமூலர்.

ஒரு கண்ணாடிக் குடுவையில், குறிப்பிட்ட அளவு மணல் மற்றும் கூழாங்கற்களை நிரப்ப வேண்டும் என ஒரு போட்டி வைத்தால், முதலில் மணலை கண்ணாடிக் குடுவையில் நிரப்பி விட்டு, அதன் பிறகு கூழாங்கற்களைப் போட்டால், அதை நம்மால் செய்ய இயலாது. தோல்வியில் தான் முடியும். முதலில் கூழாங்கற்களைப் போட்டு விட்டு, பிறகு மணலைக் கொட்டினால், கூழாங்கற்களின் இடைவெளிகளில் மணல் எளிதாக நிரம்பி விடும்.

அதே போலத்தான், முதலில் மும்மலங்களை ஒழித்து விட்டு, பிறகு இறைவனைச் சேரலாம் என நினைப்பது மிகக் கடினமான காரியம். ஆனால், இறைவனைச் சரவணைந்து விட்டால் நமது மும்மலங்கள் மிக எளிதாக நீங்கி விடும்.

முப்புரம் என்பது எங்கேயோ இருப்பது அல்ல..! அது நம்முள்தான் இருக்கிறது.
பசுவாகிய நாம் "பாசம்' என்னும் மும்மலங்களை விட்டு, பதியாகிய இறைவனைப் பெற, அவனைச் சரணடைவோம்..!

(தொடரும் )

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

ADVERTISEMENT
ADVERTISEMENT