வெள்ளிமணி

தொழுநோய் தீர்த்த யோர்தான் நதி!

23rd Oct 2020 09:24 PM | முனைவர் தே. பால் பிரேம்குமார்

ADVERTISEMENT

வேதாகமத்தில் சிரியா தேசத்தின் தளபதியான நாகமான் என்பவருக்குத் தொழுநோய் வந்தது. அரண்மனையில் தனது உடல் முழுவதும் கவசங்களால் மூடி வைத்திருக்கும் நாகமான் வீட்டுக்கு வந்து உடைகளைக் கழற்றியதும், தனது தொழுநோய் பிடித்த உடலைக் கண்டு கதறி அழுவார். 
தளபதி பதவியில் இருந்தும், செல்வாக்கு, வீரம், பராக்கிரமம், வெற்றி என அனைத்தும் இருந்தும் இந்த நோய் தன்னை வாட்டுவதைக் கண்டு மிகவும் துன்பமுற்றார். (ஐஐ இராஜாக்கள் 5:1).
இந்த நோயை குணமாக்க முடியாது என்பதாலும், மேலும் மேலும் இந்நோய் பரவிக் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாது என்பதாலும் அவரது துயரம் 
அதிகரித்து வந்தது.
நாகமான் ஒருமுறை இஸ்ரவேல் நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வரும் பொழுது, ஒரு சிறு பெண்ணை சிறை பிடித்துக் கொண்டுவந்து தன் மனைவிக்கு அடிமையான பணிப்பெண்ணாக அமர்த்தினார்.
அச்சிறுமி எஜமானிக்கு உரிய பணிவிடைகளை செய்த போதிலும், தெய்வத்தைத் தொழுவதிலும், தோத்திரப் பாடல்கள் பாடுவதிலும் கருத்தாக இருந்தாள்.
ஒருமுறை வீட்டுக்கு வந்த தளபதி நாகமான் தொழுநோயுற்ற தன் உடலைக் கண்டு அழுவதைப் பார்த்தாள்.
தன் எஜமானியிடம் சென்று ""அம்மா! நம் தளபதி இஸ்ரவேல் நாட்டிற்குச் சென்று, அங்குள்ள தீர்க்கதரிசிகளால் ஜெபிக்கப் பெற்றால் நிச்சயம் குணமாகி விடுவார்'' என்று கூறினாள்.
இதை அறிந்த நாகமான் சிரியாவின் ராஜாவிடம் கூறி, இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு பரிந்துரை கடிதம் வாங்கிக் கொண்டு சென்றார்.
இஸ்ரவேல் ராஜா கடிதத்தைப் படித்துவிட்டு ""தொழுநோயைக் குணப்படுத்த முடியாதே'' என்று வருத்தம் தெரிவித்தார்.
தீர்க்கதரிசி எலிசா இதைக்கேட்டு தளபதி நாகமானை தம்மிடம் அனுப்புமாறு இஸ்ரவேல் ராஜாவிடம் கூறினார். அதன்படி ராஜாவும் நாகமானை தீர்க்கதரிசி எலிசாவை சந்திக்குமாறு அனுப்பிவைத்தார்.
தளபதி நாகமான் மிகவும் பயபக்தி
யுடன் தீர்க்கதரிசி எலிசா வாழும் கர்மேல்
மலைக்கு வந்தார். எலிசா அவரைக் கண்டு ""நீ போய் யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கி எழுந்தால், உன் குஷ்டம் குணமாகும்'' என்று கூறினார். 
இதைக்கேட்டு தளபதி நாகமானுக்கு கடும் கோபம் வந்தது. தீர்க்கதரிசி தன்னைத் தொட்டு ஜெபிப்பார், தனக்காக வழிபாடு செய்வார் என்று எண்ணினார். ஆனால் அவரோ தன்னைத் தொடாமல், ஜெபிக்காமல் "யோர்தான் நதியில் மூழ்கி எழச் சொல்கிறாரே' என்று அதிருப்தி
யுடன் திரும்பினார்.
திரும்பிச் செல்லும் வழியில் யோர்தான் நதி வந்தது. அப்பொழுது ஒரு படைவீரன் தளபதி நாகமானிடம் ""ஐயா தீர்க்கதரிசி கூறியபடி யோர்தான் நதியில் ஏழு தரம் நீங்கள் ஏன் மூழ்கி எழக் கூடாது..?'' என்று வேண்டிக்கொண்டான். 
சலிப்புடன் நாகமான் யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கி எழுந்தார். ஏழாம் முறை மூழ்கி எழுந்த பொழுது, அவருக்கு ஆச்சரியம்..! 
அவர் உடலில் இருந்த தொழுநோய் முற்றிலும் குணமாகி இருந்தது. நாகமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இஸ்ரவேல் தெய்வத்திடம் பற்று வைத்தார். 
நாமும் நற்சுகத்துடன் வாழ்வோம். நோயுற்ற பொழுது இறைவன் அருளை வேண்டுவோம். இயேசு குணமாக்கும் தெய்வம். என்றும் இறையருள் நம்மோடு! 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT