வெள்ளிமணி

வேண்டும் வரம் அருளும் வெள்ளாயணி தேவி

23rd Oct 2020 09:04 PM | -பனையபுரம் அதியமான்

ADVERTISEMENT

 

கோயில் திருவிழாக்களில் கருவறையில் உள்ள தெய்வத்தின் சார்பாக உற்சவ மூர்த்தி வீதியுலா சென்று வருவது பொதுவான வழக்கமாகும். ஆனால், கருவறையில் உள்ள மூலவரே 70 நாள்களுக்கும் மேலாக வீதியுலாவிற்கும், பக்தர்களின் வீடுகளுக்கும் சென்று வரும் அதிசய காளி கோயில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ளது. இக்கோயிலில் தேவியின் திருமுடியே மூலவர் என்பதும் தனிச்சிறப்பாகும். 

தல வரலாறு: பழங்காலத்தில் வெள்ளாயணி ஏரியில்  தெய்வீக சக்தி வாய்ந்த பச்சை நிறத் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. ஏரியின் கரையோரம் இருக்கும் தென்னை மரங்களில் பானைகளைக் கட்டி "கள்' இறக்குவது வழக்கமாக இருந்தது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மரத்தில் ஏறிய தவளை கள்ளைக் குடித்து பானையைக் காலி செய்து வந்தது. மரம் ஏறி கள் சேகரிக்கும் தொழிலாளிக்கு இந்த உண்மை ஒருநாள் தெரிய வந்தது. எனவே, மறைந்திருந்து கையும் களவுமாய் கண்டுபிடித்த அவன், அந்தத் தவளையின் மீது தன்னிடம் இருந்த கனமான கோலை வீசினான். அது தவளையின் காலில் அடி பட்டு ஏரியில் விழுந்தது. 

ADVERTISEMENT

இந்தச் செய்தியை தன் எஜமான் கேளன் குலசேகரன் என்பவரிடம் கூறினான். 
அதையறிந்து வியப்படைந்த குலசேகரன் அந்தத் தவளை தெய்வீக சக்தி கொண்ட பத்ரகாளி  என்பதை உணர்ந்தான். அந்தத் தவளையை ஆறு நாள்கள் தேடிக் களைப்படைந்தான். ஏழாம் நாள் அந்தத் தவளை அகப்பட்டது.
அதன் மீது தெய்வீக ஒளி வீசியது. அதன் சக்தியை ஒரு கலைமான் கொம்பில் ஆவாகணம் செய்து, ஏரிக்கு அருகே ஓலைக்குடில் அமைத்து அங்கேயே நிலை நிறுத்தினான். அப்பகுதியில் வாழ்ந்த எட்டு நாயர் குடும்பத்தினர் கோயில் அமைக்க பொருளுதவி செய்தனர். கிழக்குத் திசையில் கலைமான் கொம்பு நிறுவப்பட்டது. சக்தியின் வடிவாக வடதிசை நோக்கிய திருமுடி நிறுவப்பட்டு அதில் காளியின் சக்தி நிலை நிறுத்தப்பட்டது.
அந்த சக்தி வாய்ந்த திருமுடி வடிவமான பத்ரகாளியே மூலவராகவும், உற்சவராகவும் விளங்குகின்றார்.  இக்கோயிலை நிறுவிய கேளன் குலசேகரன் சமுதாயத்தைச் சேர்ந்த இரும்புக்கொல்லர் பரம்பரையினரே பூஜைகளையும், விழாக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
புராணம் கூறுவது: தாரகாசுரன் பிரம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்து 14 உலகிலும் உள்ள எவரும் தன்னை வெல்லமுடியாத வரத்தினைப் பெற்றான்.  வரம் பெற்ற ஆணவத்தில் இந்திர லோகம் சென்ற அசுரன் இந்திரனைத் தோற்கடித்தான். அதன்பின்பு 14 உலகிலும் உள்ள அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். இதைக் கண்டு மனம் வருந்திய நாரதர்,  அனைவரையும் காத்தருளுமாறு சிவபெருமானிடம் வேண்டி நின்றார். 
சிவபெருமானும் அதனை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து காளியை உருவாக்கினார். அந்த காளி ஆவேசம் கொண்டு தாரகாசுரனை அழித்து ஒழித்தார். ஆனாலும் காளியின் ஆவேசம் அடங்காமல் உலக மக்களை அச்சுறுத்தி வந்தது.
நாரதர்  மீண்டும் சிவபெருமானிடம் வேண்டி நிற்க, சிவபெருமான் காளியின் முன்பு தோன்றினார். காளியின் ஆவேசத்தை அடக்க முயற்சி செய்தார், முடியவில்லை. முடிவில், காளியின் முன்பு அவர் மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட காளி தன் சுயநினைவு பெற்று சாந்தம் அடைந்தார். அந்த சாந்தம் அடைந்த காளியே வெள்ளாயணி தேவியாக பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார் எனத் தல புராணம் கூறுகிறது.
கோயில் அமைப்பு: வடக்கு, கிழக்கு வாயில்களைக் கொண்ட இக்கோயிலின் மூலவர் பத்ரகாளி. அவர் வடக்கு நோக்கிய கருவறையில் நான்கரை அடி உயரமும், அகலமும் கொண்ட  திருமுடியாகக் காட்சியளிக்கிறார். பத்ரகாளி என்ற பெயரில் பக்தர்கள் அழைக்கின்றனர்.  
கேரள மாநிலத்தில் உள்ள காளி சிலா வடிவங்களில் இது பெரியதாகக் கருதப்படுகிறது.  இக்கோயிலில் விநாயகர், சிவபெருமான், நாகராஜன் சந்நிதிகள் உள்ளன. மாடன் தம்புரான் தனிச் சந்நிதியும் வளாகத்தில் அமைந்துள்ளது. கிழக்கு வாயில் சந்நிதியில் மான் கொம்பு அலங்கரிக்கிறது.
விழாக்கள்: இவ்வாலயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் "காளியூட்டு மகோற்சவம்' வேறெங்கும் காணமுடியாத சிறப்பாகும். கருவறையில் உள்ள மூலவரான திருமுடி  அப்பகுதியைச் சுற்றியுள்ள பல்லிச்சல், கள்ளியூர், பாப்பனம் கோடு, கோலியக்கோடு என நான்கு திசைகளிலும் திக்குபலி நடத்தி, தன் பக்தர்களின் இல்லங்களுக்கே சென்று 60  நாள்கள் முதல் 70 நாள்கள் வரை உலா வந்து, பின்னர் ஆலயம் வந்து சேரும். அங்கு தாரகாசுரனை வதம் செய்து, பக்தர்களுக்கு காளி தரிசனம் தருவார்.
இவ்விழாவில், "பத்ரகாளி தோட்டம் பாட்டு' பாடப்படும். இது தவிர, "பொங்கலா' எனும் பொங்கல் விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டு விழா நிறைவுபெறும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு இக்கோயிலை நிர்வகித்து வருகிறது.
பரிகாரத் தலம்: மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் அபிவிருத்தி, எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்றவைகளுக்காக பக்தர்கள் பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர். 
தரிசன நேரம்: மலையாள மாதத்தின் முதல் நாள் மற்றும் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகல் 12.30  மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.
திருமுடியே மூலவர்: பொதுவாக, தெய்வச்சிலையே மூலவராக விளங்குவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தங்கத்தினாலான நான்கரை அடி அகலமும், உயரமும் உடைய திருமுடியே மூலவராக விளங்குவது வெள்ளாயணி தேவி திருக்கோயிலில்தான் என்பது தனிச்சிறப்பு. இக்கோயில் உலகப்புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கும் முற்பட்டது என்று தல புராணம் கூறுகிறது.
அமைவிடம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து, தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் மணக்காடு தபால் நிலையம் அருகே வெள்ளாயணி தேவி கோயில் அமைந்துள்ளது.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT