வெள்ளிமணி

தற்பெருமையின் வெளிப்பாடு

23rd Oct 2020 09:27 PM | ஹாஜி.மு.முஹம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT

 

மக்களின் கவனம் தன்பக்கம் திரும்ப வேண்டும் என ஒருவர் தாமாகவே முயற்சித்தால், அவர் தற்பெருமையில் நுழைந்துவிட்டார் என அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
புகழும், பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம். அதைக் கையில் எடுக்கும் உரிமையை மனிதனுக்கு அல்லாஹ் தரவில்லை.
அல்லாஹ்வின் சமூகத்தில் நெருக்கமாக இருந்த இப்லீஸ், முதல் மனிதர் ஆதமைவிட தான் பெரியவன் என்று அல்லாஹ்விடம் தற்பெருமை பேசியதால்தான், அல்லாஹ்வின் அருளை இழந்து, அவனின் கோபத்திற்கு ஆளாகி, சுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.
தற்பெருமை கொள்பவர் கவனத்தின் வாசனையைக்கூட நுகரமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் குர்ஆனில், நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்களை, வீண் பெருமையுடையவர்களை நேசிப்பதில்லை - சூரா அன்னிஸô : 36. 
இறைவனால் அளிக்கப்பட்டுள்ள செல்வம், அறிவு, பதவி, அழகு, அந்தஸ்து என அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்கே தவிர, அதை வைத்து மனிதர்களிடம் பெருமை பாராட்ட இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் தங்களிடமுள்ள உலக வசதிகள், தங்க நகைகள், விலையுயர்ந்த ஆடைகள், வசதியான வீடு ஆகியவற்றைக் கொண்டு பெருமை கொள்ளக்கூடாது.
வசதியானவர் ஏழையைக் கேவலமாகப் பார்ப்பதும், கல்வி அறிவுடையவர் கல்லாதவரைக் குறைவாக நினைப்பதும் தற்பெருமையின் வெளிப்பாடேயாகும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:
நிச்சயமாக அவன் கர்வம் கொண்டவர்களை விரும்ப  மாட்டான்.            அல்லாஹுத ஆலா, பலரைவிட சிலரை மேலாக ஆக்கி வைத்திருக்கிறானே தவிர, எது ஒன்றும் மனிதரிடம் உள்ள சாதுர்யத்தால் வந்தவை அல்ல.
செல்வமான நிலையில் பணிவு கொள்வதும், தன்னைவிட பிறரை சிறந்தவர்களாகக் கருதுவதும் அல்லாஹ்வின் நேசத்திற்குரிய செயல்களில் உள்ளவை என அமீருல் முஃமினீன் அலீ (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இமர்ஷாபியீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ""நான் ஒருமுறை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களோடு அமர்ந்திருந்தேன்.  அப்போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் சிலர் வந்து சில கேள்விகளைக் கேட்டனர். அதில் பெரும்பாலான கேள்விகளுக்குத் "தமக்குத் தெரியாது' என்று பதிலளித்தார்கள்.  அல்லாஹ்வின் திருப்தி ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொள்பவர், தனக்குத் தெரியாத ஒன்றை "தெரியாது' என்று சொல்வதில் வெட்கப்படமாட்டார்கள். 
நம்மவர்களில் சிலர், ஒன்றைக் குறித்துத் தெரியாவிட்டால், தனக்குத் தெரியாது என்று சொன்னால், தன்னைக் குறைவாக நினைத்துக் கொள்வார்கள் என்று எண்ணி, ஏதாவது விளக்கத்தைக் கூறிவிடுகின்றனர்.  இதுவும் பெருமையின் அடையாளமேயாகும்.
தன்னிடமுள்ள உலக வசதிகளைக் கொண்டு மதிமயங்கி இறைவன் தடுத்துள்ள பெருமையின் பக்கம் சாய்பவர், அல்லாஹ்விடம் நன்றி மறந்ததோடு, மறுமையில் தன்னை நரகில் நுழைத்துக் கொள்கிறார்.
அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கிறான்: பெருமையோடு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான் - சூரா லுக்மான்:18.
அல்லாஹுத ஆலாவின் கண்காணிப்பு ஒவ்வொருவருடைய உள்ளத்தின் மீதும் இருக்கிறது.  பிறரைக் குறைத்தும், தன்னையும் தன்னிடத்தில் உள்ளவைகளைக் கொண்டும் மனதில் பெருமை கொண்டால் அது அல்லாஹ்வின் நேசத்தை விட்டு விலக்கிவிடும்.
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது.  "கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை' என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"தற்பெருமையின் அடையாளம் பிறரைப் பற்றிக் குறை பேசுவதாகும்' என ஷகீக் பல்கீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஹஜ் செய்பவர், தன்னைப் பிறர் "ஹாஜி' என்று அழைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் தற்பெருமையான எண்ணம்தான்.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT