வெள்ளிமணி

கேட்கும் வரம் அருளும் கீழை நரசிங்கர்! 

27th Nov 2020 06:00 AM | -ஆர்.அனுராதா

ADVERTISEMENT


கிரேதாயுகத்தில் சிவனிடம் இறவா வரம் பெற்ற மது என்னும் அசுரனின் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகிய மூன்று மகன்கள் முனிவர்களின் தவத்தைக் கலைத்து கொடுமைகள் செய்தனர்.

பராசுர úக்ஷத்திரம்: விண்ணாற்றங் கரையில் பராசுர முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒரு நேரம் கடும் பஞ்சம் உண்டாகி குடிநீர்கூட இல்லாமல் போனது. பராசர முனிவர் ஆசிரமத்தில மட்டும் நன்னீர் ஊறி நலன் தந்தது. அசுர சகோதரர்கள் மூவரும் வந்து அந்த நீரை மற்றவர் பயன்படுத்தாத அளவுக்கு நாசம் செய்து பராசரரைத் துன்புறுத்தினர்.

தஞ்சகன் ஊர் - தஞ்சாவூர்: பராசரர் "ஹரி, ஹரி' என்று அலறி இடர் களைய வேண்டினார். பரந்தாமன் கருடனை அனுப்பி, அசுர சேனைகளையெல்லாம் அழித்தார். எம்பெருமான் நேரில் தோன்றி தஞ்சகனை சக்ராயுதத்தால் அழித்தார். சாகும்முன் அவன் வேண்டியபடி, அவன் பெயரால் தஞ்சகன் முக்தியடைந்த தலம் "தஞ்சகன் ஊர்' எனப்பட்டு மருவி தஞ்சாவூர் என வழங்கத் தொடங்கியது.

கீழை நரசிங்கர்: போரில் கஜமுகன் சிறிது தொலைவில் இருந்து பெருமாளுடன் போர் செய்து யானை உருவில் தாக்க வந்தான். பெருமாள் நரசிம்ம உருவெடுத்து அவனது மத்தகத்தில் தாக்க கீழே விழுந்தான்.உயிர் பிரியும் தருவாயில் பெருமாளிடம் தனக்கு மோட்சம் கேட்க அவர் அளித்தார். அவ்விடத்திலிருந்து அகன்று மேற்குப் புறமாகச் சென்று ஒரு புஷ்கரணியில் நீராடி யோகத்தில் அமர்ந்தார். பராசரர் வந்து பெருமாளைத் தொழுது நரசிம்மரை அதே கோலத்தில் இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டினார். அவ்விடம் தஞ்சை நகருக்குக் கிழக்கு வாயிலில் அமைந்திருந்தது. விண்ணாற்றங்கரை நரசிம்மர் மேலை நரசிம்மர் எனவும், இவர் கீழை நரசிங்கப் பெருமாள் எனவும் வழிபடப்பட்டார்.

ADVERTISEMENT

பாண்டியர் காலத்தில்: சோழர் ஆட்சிக்குப் பிறகு கி.பி 1218-இல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சை நகரை தீக்கிரையாக்கினான். பின்னர் பாண்டிய மன்னன் கோநேரின்மை கொண்டான் ஸ்ரீவல்லபன் காலத்தில் (கி.பி 1308 முதல்1344 வரை) தஞ்சை நகர் புனரமைப்பின் போது கீழை நரசிங்கப் பெருமாள் திருக்கோயிலையும் புனரமைத்தான். அவனுக்கு சாமந்த நாராயணன் என்ற பெயரும் உண்டு. மக்கள் கீழை நரசிங்கப் பெருமாள் கோயிலை புதுப்பித்தவன் பெயர் சேர்த்து "சாமந்த நாராயண விண்ணகரம்'என வழிபடத் துவங்கினர். தொண்டைமான் அக்கோயிலுக்கு "சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம்' என்னும் அக்கிரகாரத்தை ஏற்படுத்தி கோயிலில் பூஜைகள் குறைவற நடக்க ஏற்பாடுகள் செய்தான். பக்தர்கள் வசதிக்காக அருகிலேயே ஒரு திருக்குளமும் ஏற்படுத்தினான். இன்றும் தஞ்சாவூர் கீழவாயில் பகுதியில் திருக்கோயிலுக்கு அருகில், சாமந்த நாராயணனால் எடுக்கப்பட்ட சாமந்தான் குளத்தைக் காணலாம்.

யோகம் தரும் நரசிம்மர்: கர்ப்பகிருகத்தில் 5 அடி உயர யோக நரசிம்மமூர்த்தியாக நான்கு கைகளுடன் அமர்ந்து அருள் வழங்குகிறார். முன்புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் உற்சவராக அருள் தருகிறார். கஷ்டங்கள் நிவர்த்தியாக ஞாயிற்றுக்கிழமைகளில் புஷ்பம் சார்த்தி அர்ச்சனை செய்து கல்கண்டு நைவேத்தியம் செய்கிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் யோகத்தில் இருக்கும் நரசிம்மர் கண் விழித்து திருக்கண்களால் நேரிடையாக அனுக்கிரகம் செய்வதாகக் கருதப்படுகிறது.
இக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ளது. கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மேலும் தகவல்களுக்கு: 04362223384; 9443817103.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT