வெள்ளிமணி

பன்முகத் தன்மையில் பளிச்சிட்டவர்  

27th Nov 2020 06:00 AM | -மு.அ.அபுல் அமீன்

ADVERTISEMENT


ஓரிறை கொள்கையை ஓர்ந்து கூறும் ஒப்பிலா குர்ஆனின் பொருளைத் தப்பில்லாது விளக்கும் விரிவுரையாளர், இஸ்லாமிய சட்ட களஞ்சியம், இனிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனிவான பணியாளர் என்று பன்முகத் தன்மையில் பளிச்சிட்டு ஒளிர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஹுதைல் கோத்திரத்தில் பனீ ஹுசைல் என்னும் எளிய குடும்பத்தில் பிறந்தார். இவர்களின் தாயார் பெயரை இணைத்து இவரை இப்னு உம்மு அப்து என்றும் அழைப்பர்.
சிறு வயதில் மக்காவில் குரைஷி குல தலைவர் உக்பா இப்னு அபீ உமைத்தீன் ஆடுகளை மேய்த்தார். அண்ணல் நபி (ஸல்), அபூபக்கர் சித்தீக் (ரலி) இருவரும் ஒருநாள் அவ்வழியே செல்லும் பொழுது ஒரு பாத்திரத்தில் பால் கறந்து கேட்டனர். 
சிறுவனோ ""ஆடுகள் எனக்கு உரியன அல்ல'' என்று பதிலுரைத்தான். கேண்மைமிகு மேன்மையான நபி (ஸல்) அவர்களும், அவரது தோழரும் இறைவனை இறைஞ்சி மலடான ஆட்டின் மடியை தடவினார்கள். பாத்திரத்தில் பாலைக் கறந்து பருகினார்கள். 
பின்னர், சிறுவனிடம் அவனின் தேவையைக் கேட்டனர். சிறுவன் ""நீங்கள் எதை ஓதி பால் கறந்தீர்களோ அதை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்றான்.  
அச்சிறுவன் இந்த அறிவைப் பரப்பும் நற்பேற்றினைப் பெற்றிட இறைவனை இறைஞ்சினார்கள் இறைதூதர் (ஸல்) அவர்கள். 
இச்சிறுவன் ஆறாவது நபராக இஸ்லாத்தில் இணைந்தார். இவர் வஹீ - இறை மறை குர்ஆன் வசனங்கள் வந்ததும் ஈச்ச மட்டைகளிலும், எலும்புகளிலும், ஓலைகளிலும் எழுதுவார். எழுபது சூராக்களைத் திரும்பத் திரும்ப சொல்லி எனக்குக் கற்பித்தார்கள் எனபொற்புடைய நபி (ஸல்) அவர்கள் என்று அறிவிக்கிறார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி). எழுபது அத்தியாயங்கள் இவர்களின் கைகளால் எழுதப்பட்டவை. 
மாநபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் நான்கு காரிகளைக் குறிப்பிட்டு குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். அந்த நால்வரில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி). இவர்களின் இல்லத்தில் குர்ஆனை கற்றுக்கொள்ள ஒரு பெருங்கூட்டம் நிறைந்தே இருக்கும். 
இவர்களை அழைத்து குர்ஆனை ஓத கேட்டு மகிழ்வார்கள் மாநபி (ஸல்) அவர்கள். குறிப்பாக சூரத்து நிஷா ஓதும் பொழுது உள்ளம் உருகி விடுவார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். இவர்கள் ஓதுகிற தொனியும், தோரணையும் அத்தகையது. 
இவர்கள் கையால் எழுதிய குர்ஆன் வசன பிரதிக்கு சஹீபத்துல் இப்னு மஸ்வூத் என்று பெயர். இவர்கள் 848 நபிமொழிகளை நவின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு மாற்றுத்திறனாளி போன்ற உருவ அமைப்பு. அவர்களின் மனைவி ஜைனப் (ரலி) குடும்ப வேலைகள் அனைத்தையும் பொறுப்பாய் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவாற்றல் மிக்கவர். அதனால் அவரை உமர் (ரலி) கூபாவின் நிதிப் பொறுப்பைக் கவனிக்க நியமித்தார்கள். இப்பொறுப்பு ஆளுநர் பதவிக்கு இணையானது. கருவூல காப்பாளராக இருந்த பொழுது இவர்கள் கட்டிய தொழும் பள்ளி புகழ்பெற்றது. 
ஹிஜ்ரி 32 -இல் காலமானார்கள். மதீனாவில் உள்ள ஜன்னத்து பகீயில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT