நமது வழிபாட்டு நெறி முறைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்தலும் ஒன்றாகும். "அஞ்ஞானம் என்னும் இருளிலிருந்து ஞானம் என்கின்ற ஒளிக்கு என்னை எடுத்துச் செல்வாயாக!' என்பதே உபநிடதம் கூறும் விளக்கம். "இல்லக விளக்கது இருள் கெடுப்பது' என்பது அப்பர் பெருமானுடைய வாக்கு. அத்தகைய ஒளி விளக்கேற்றி நாம் இல்லங்களிலும், ஆலயங்களிலும் வழிபடுவது மரபாகும்.
விளக்கேற்றுவதற்கு நாம் பரம்பரை பரம்பரையாக அகல் விளக்குகளையே பயன்படுத்தி வருகிறோம். நாகரீகம் கூடிய காலத்து அவை பித்தளையாக, வெள்ளியாக உருப்பெற்றன. அகல் விளக்கு ஏற்றுதல் என்பது மரபிற்காக மட்டுமன்று, எப்படி இந்தப் பிரபஞ்சம் பஞ்சபூதங்களைக் கொண்டு இறைவனால் உருவாக்கப் பெற்றதோ, எப்படி நமது உடலிலும் பஞ்சபூதத் தத்துவம் உண்டோ, அதே போல் அகல் விளக்கிலும் பஞ்ச பூதத் தத்துவத்தை தன்னுள்ளே கொண்டது.
பஞ்ச பூதங்கள்: அகல் விளக்கானது களிமண்ணினால் செய்யப்படுகிறது. பின்னர் நெருப்பினால் பக்குவம் செய்யப்படுகிறது. அதிலே நீர்த்தன்மையான எண்ணெய் ஊற்றப்படுகிறது. காற்றின் உதவியுடன் ஆகாயத்தில் (பூமிக்கு மேலே உள்ள அனைத்தும் ஆகாயம் தான்) ஜோதி ஏற்றப்படுகிறது. ஜோதியிலும் நெருப்புத் தத்துவம் உள்ளது. எனவே பஞ்சபூதங்களின் கலவையான மண் அகல்விளக்கை ஏற்றுவதன் மூலம், பஞ்சபூதங்களையும் மதித்து வணங்கி அருள் பெறுகிறோம். மேலும் மாசு ஏற்படுதலின் தீர்விற்கு பெரிதும் துணையாக இருப்பதால் மண் அகல்களை நாம் ஆதரிப்பதன் மூலம் இயற்கையைப் பாதுகாப்பதுடன், அத்தொழில் செய்வோர்க்கு மறைமுகமாக உதவுகின்றோம்.
நவ கிரகங்கள்: அகல் விளக்குகளை ஏற்றும்பொழுது அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே ஊற்ற வேண்டும். பழங்காலத்தில் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தினார்கள். அகல் விளக்கு ஏற்றுவதன் மூலமாக நவ கிரகங்களை வழிபடும் பேறு நமக்குக் கிடைக்கிறது.
அகல் விளக்கு சூரியனாகவும், அதில் ஊற்றப்படும் எண்ணெய் சந்திரனாகவும், விளக்குத் திரி புதனாகவும், ஜுவாலை செவ்வாயாகவும், ஜுவாலையின் மஞ்சள் நிறம் குருவாகவும், திரி எரிய எரியக் குறைவது சுக்கிரனாகவும், திரியில் உள்ள கரி சனீஸ்வரனாகவும், விளக்கின் நிழல் ராகுவாகவும், வெளிச்சம் கேதுவாகவும் வழிபாடு செய்யப்படுகிறது. இது நவ கிரகப் பிரீத்தியாகக் கருதப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் நாம் அகல்விளக்குகளை வீட்டின் வாசற்படியின் இருபுறத்திலும், வாய்ப்பு அமையுமானால் இல்லத்தில் பல பகுதிகளிலும் ஏற்றி வழிபாடு செய்தல் நலம் பெருக்கும். திருக்கார்த்திகை திருநாளில் ஆலயங்களில் சொக்கப்பனை ஏற்றுவதற்குப் பெரிய அளவிலான மண் அகல்களையே பயன் படுத்துகிறார்கள். இந்நாளில் சில ஆலயங்களில் லட்சம் அகல் விளக்கேற்றி லட்ச தீபவழிபாடு செய்யப்படுவது வழக்கம்.
திருப்பதியில் தினந்தோறும் ஏழுமலை நாதனுக்கு புதிய மண்பாத்திரத்திலேயே தயிர் சாதம் படைக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை வேதிகைகளைச் சுற்றி மண் கலசங்களே பூஜைக்கு வைக்கப்படுகின்றன. இதன் மூலம் மண்ணால் ஆன கலன்களின் பெருமை நமக்கு எளிதில் புலப்படுகிறது.
பெரியபுராணத்தில் நமிநந்தி அடிகள் மண் அகல் விளக்குகளில் நீரால் விளக்கெரித்த அதிசயத்தினை இன்றும் கூட வியந்து கூறுகின்றோம். தீபம் ஏற்றுவதன் மூலமாக இறையருளைப் பெற்றவர்களின் வரலாறுகள் ஏராளமாக உள்ளன. "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்பார் அப்பர் பெருமான்.
கரோனா என்னும் கொடிய நோய்த் தொற்று நீங்கிட கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் மின் விளக்குகளை நிறுத்தி, அகல் விளக்குகளை ஏற்றி நாம் வழிபாடு செய்தமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதனால் மேலை நாடுகளில் ஏற்பட்ட அளவிற்கு தீங்கு நேராமல், இயைறருளால் நாம் பெருமளவு பாதுகாக்கப்பட்டோம். வரும் கார்த்திகை திருநாளன்று நம் இல்லங்களிலும், ஆலயங்களிலும் மண் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வோம். அல்லல்கள் நீங்கப்பெற்று உலகம் முழுவதும் மீண்டும் ஆனந்தமயமாக இறைவன் திருவருளை வேண்டுவோம்!