வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 121

டாக்டா் சுதா சேஷய்யன்


பொருநையாள் ஊட்டி வளர்த்த தேசிய உணர்வு: பொருநையாள் ஊட்டி வளர்த்த தேசிய உணர்வு என்றவுடனேயே பூலித்தேவன் தொடங்கி, வ.உ.சிதம்பரனார் தொடர்ச்சியாகப் பலரும் நம் நெஞ்சங்களில் உலா வருவார்கள். 

1857-ஆம் ஆண்டு மீரட்டிலும் பிற இடங்களிலும் நடைபெற்ற சுதந்திர எழுச்சியை, "சிப்பாய்க் கலகம்' என்னும் பெயரால் ஆங்கிலேயர் அழைத்தனர். ஆயின், அது வெறும் கலகமன்று, ஆண்டாண்டு காலமாக உள்ளுக்குள் சுழன்று, உணர்வுக்குள் பொங்கி, நெஞ்சுக்குள் புடமாகி, நேர்மையிலும் நியாயத்திலும் வெளிப்பட்ட எழுச்சி என்பதால், "இந்தியச் சுதந்திரப் போர்' என்றே வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடத் தொடங்கினர். 

1857-இல் நடைபெற்ற இவ்வெழுச்சி குறித்து 1900-களில் நூல் எழுதிய வீர சாவர்க்கர், "1857-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியச் சுதந்திரப் போர்' (தி இண்டியன் வார் ஆஃப் இண்டிபெண்டென்ஸ் - 1857) என்றே நூலுக்குப் பெயர் சூட்டினார். 

1850-கள் தொடங்கி இந்திய நிலைமையைக் கூர்ந்து கவனித்து, அமெரிக்காவின் "நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்' இதழில் கட்டுரைகள் எழுதி வந்த கார்ல் மார்க்ஸூம் அவருடைய நண்பர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸூம் "முதல் இந்தியச் சுதந்திரப் போர்' என்றே குறிப்பிட்டனர். 
எனினும், 1857-க்குப் பல காலம் முன்னரே, சுதந்திரக் கனலானது, பொருநைப் படுகைகளில் கொழுந்து விடத் தொடங்கியது. 

பூலித்தேவன் என்றால் சிம்ம சொப்பனம்!:

1755-ஆம் ஆண்டு, முதலில் களக்காட்டிலும், அடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் இரண்டு போர்கள் நடைபெற்றன. ஒரு பக்கத்தில் அலெக்ஸாண்டர் ஹெரான் மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள்; இன்னொரு பக்கம், பூலித்தேவனும் அவரின் படைகளும் - களக்காட்டுப் போரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் போரும் பூலித்தேவனுக்கு வெற்றியைக் கொடுத்தன என்பதைவிட, தேசிய உணர்வுக்கு வித்திட்டன என்பதே சாலப் பொருத்தம். 

மீண்டும் 1756, மார்ச் 21-ஆம் நாள் திருநெல்வேலிக்கு அருகே நடைபெற்ற போரில், பல்வேறு காரணங்களால் பூலித்தேவன் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 1759 தொடங்கி ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கு ஆங்கிலேயருக்குப் பூலித்தேவன் என்றால் சிம்ம சொப்பனம்தான்! பூலித்தேவனின் வாசுதேவ நல்லூர்க் கோட்டையை அவர்கள் எண்ணற்ற முறைகள் தாக்கியுள்ளனர். 

"பூலித்தேவன்' பெயர் எப்படி வந்தது?

பூலித்தேவன் என்னும் பெயர் எப்படி வந்தது? இதுபற்றிய அகச்சான்று ஏதுமில்லை எனினும், செவிவழித் தகவல்கள் வாயிலாகச் சில செய்திகளை வரலாற்றாசிரியர்கள் பதிவிடுகின்றனர். ஆவுடையார்புரம் என்னும் ஊரில் சித்திரபுத்திரன் - சிவஞானம் ஆகியோரின் மகனாக 1715-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் நாள் இவர் பிறந்ததாகத் தெரிகிறது. 

பெற்றோர் இவருக்குக் காத்தப்பன் என்றுதான் பெயர் சூட்டினராம். காட்டுப்பகுதி கிராமமாக இருந்த ஊருக்குள் புலி ஒன்று வந்துவிட்டது; சிறுவனாக இருந்த காத்தப்பன், அந்தப் புலியை வேறெந்த வித ஆயுதமும் இல்லாமல் கழி ஒன்றை மட்டும் கொண்டு அடித்துக் கொன்றார். இதனால், பூலித்தேவன் என்ற பெயர் ஏற்பட்டது. 

சிலம்பம் போன்ற வீரக் கலைகளில் நாட்டம் கொண்டு அவற்றில் தேர்ச்சி பெற்றார். பாளையத்தை நிர்வகித்து ஆட்சி செய்யக்கூடியவராக இருந்ததால், பல்வேறு திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் நடத்தி வைத்தார்; தம்முடைய நிலங்களையும் நிவந்தப்படுத்தினார். 

இந்த நிலையில்தான், பிரிட்டிஷாரின் குறுக்கீடு வந்தது. ஆற்காடு நவாப் முஹம்மத் அலிகான், தென் பகுதி முழுவதுமுள்ள குறுநில ஆட்சியாளர்கள் தனக்குக் கப்பம் கட்டவேண்டுமென்று வலியுறுத்திய காலம்; மதுரையும் திருநெல்வேலியும் வளமாக இருந்தன; தன்னுடைய பொக்கிஷத்திற்கு இந்த நகரங்களின் வருமானம் தேவையென்றும், கப்பம் கட்டும் பாளையங்களும் ஆட்சியாளர்களும் தன்னுடைய மேலாண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றும் நவாப் விழைந்தார். இருந்தாலும், இந்தப் பகுதிகளைப் பணிய வைப்பதற்கான ராணுவ பலம் அவரிடம் இல்லை. மதராஸின் கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், கப்பம் வசூலிக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக முன்வந்தனர். இப்படித்தான் கப்பக் குத்தகையை பிரிட்டிஷார் எடுத்தனர். 

1750-களின் தொடக்க ஆண்டுகளில் திருநெல்வேலியின் குறுநில ஆட்சியாளர்கள் பலர், நவாபின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1755 ஜனவரி 5-ஆம் நாள், ஐரோப்பாவில், இங்கிலாந்திற்கும் ஃபிரான்சிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. 

இதன்படி, இந்த இரு நாடுகளும் காலனிகளோ கம்பெனிகளோ அமைத்துள்ள பிற நாடுகளின் குறுநில ஆட்சியாளர்களுக்குள் முரண்பாடுகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டால், அவற்றில் இரு நாடுகளுமே தலையிடக்கூடாது. 

இதற்கு முன்னர்வரை, ஆங்கிலேயக் கம்பெனியும் ஃபிரஞ்சுக் கம்பெனியும் குறுநில ஆட்சியாளர்களுக்குள் முரண்பாட்டைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கும். இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும், குத்தகை வசூலித்துத் தருவதாகக் கிழக்கிந்தியக் கம்பெனி களத்தில் இறங்கியது. 

1755 ஜனவரி இறுதியில், மதராஸ் ஐரோப்பிய ரெஜிமெண்ட்டின் 2,500 வீரர்களோடு கர்னல் அலெக்சாண்டர் ஹெரான் புறப்பட்டார். முதலில் திருச்சிப் பகுதியை அடைந்தார். ஆட்சியாளர்கள் சிலரை அடிபணியச் செய்துவிட்டு, மதுரை நோக்கி நகர்ந்தார். அப்போதைய மதுரை ஆட்சியாளர், ஒரு சில வீரர்களை மட்டும் காவலுக்கு விட்டுவிட்டு, மக்களோடும் பொருள்களோடும் தப்பி விட்டதாகத் தெரிகிறது. 

இந்நிலையில், மதுரைப் பகுதியை முற்றுகையிடும் போதே, திருநெல்வேலிப் பாளையக்காரர்களுக்கு ஹெரான், தன்னிடம் கப்பம் செலுத்தி அடிபணிய வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். பிப்ரவரி 25-ஆம் நாள், ஹெரானுடைய படை நெல்லையை அடைந்தது. 

ஹெரானோடு, தன்னுடைய சகோதரர் மாஃபுஸ்கானையும் நவாப் அனுப்பியிருந்தார். ஹெரான்-மாஃபுஸ்கான் ஆகியோரின் இரட்டைப்படையைத்தான் களக்காட்டிலும் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் பூலித்தேவன் எதிர்த்தார். 

கம்பெனிப்படைகள் தோல்வியைத் தழுவிய நிலையில், ஹெரானையும் மாஃபுஸ்கானையும் திரும்பி வரும்படியாகக் கட்டளையும் வந்தது. ஹைதராபாத் நிஜாமும் தக்காண ஸþபேதாருமான மிர்ஸல பத்ஜங் மற்றும் ஃபிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதியுமான டிபுஸ்ஸி ஆகியோர் மைசூர் மீது படையெடுத்து வந்து கொண்டிருந்தனர். 

ஆகவே, ஹெரானும் மாஃபுஸ்கானும் உடனடியாகத் திருச்சிக்குத் திரும்பும்படிப் பணிக்கப்பட்டனர். தோல்வியைச் சந்திருந்தவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது (அடுத்த சில மாதங்களிலேயே, இந்த ஹெரான், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு, கம்பெனியிலிருந்து அகற்றப்பட்டார் என்பது தனிக்கதை). 

பூலித்தேவன் பெற்ற முதல் வெற்றிதான், பொருநைப் படுகைகளில் தேசிய உணர்வு ஊன்றப்படுவதற்கு வித்தாக அமைந்தது எனலாம். ஒரு நெல்மணியைக்கூட கப்பமாகக் கட்டமுடியாது என்று பூலித்தேவன் எழுப்பிய குரலே, ஆவுடையார்புரம் என்னும் பாளையத்தின் பெயரை, "நெல் கட்டான் செவ்வல்' என்று மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT