வெள்ளிமணி

புதையலாய் வந்த புண்ணியர்!

20th Nov 2020 06:00 AM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT


நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் உள்ளது தெற்கு பனையூர் கிராமம். திருக்குவளையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் பாண்டவையாறு ஆற்றின் கரையில் அமையப்பெற்ற இவ்வூரில் தேவிமார்களுடன் ஐயனார் கோயிலும், முள்ளாட்சி மாரியம்மன் கோயிலும் சிறப்பான வழிபாட்டில் உள்ளது. பல புகழ்பெற்ற திருத்தலங்கள் இவ்வூரைச் சுற்றி உள்ளன.

சில வருடங்களுக்கு முன் இவ்வூரில் "திருவாசல் குளம்' என்று அழைக்கப்படும் பெரிய குளத்தின் அருகில் வயலில் பூமியில் புதைத்திருந்த 2 சிவலிங்கங்கள் ஆவுடையாருடனும், அம்பாள், விநாயகர் கற்திருமேனிகளும் கிடைத்தன. சிலைகள் தென்பட்ட இடம் ஊரின் ஈசான்ய பாகத்தில் இருந்ததால், ஓர் அருமையான சிவாலயம் ஒரு காலத்தில் அங்கு வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன், மீண்டும் ஒரு புதிய ஆலயத்தை எழுப்ப ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் வெளியூர் பக்தர்களும் பங்கேற்க, கடந்த மார்ச் மாதம் இதற்கான பூமிபூஜை செய்விக்கப்பட்டு பாலாலய பிரதிஷ்டை வைபவம் நடந்தேறியது. இதற்கிடையில் பல்வேறு தரப்பிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படியும், செவி வழிச் செய்திகளின் மூலமும் ஆலத்தின் வரலாறு அறியப்பட்டது. 

அதன்படி, இரட்டை லிங்கங்களில் ஒன்று சூரிய லிங்கம் எனவும், மற்றொன்று சந்திர லிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. முன்னது அகத்தியர் பெருமானாலும், பின்னது அவரது சீடர் சுதீஷணர் புலத்தியராலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையுடையது. அகத்தியர் குடும்பத்துடன் தங்கி வழிபட்ட தலம். ராமபிரான் முடிகொண்டான் செல்லும் வழியில் இங்கு தங்கிச் சென்றுள்ளாராம். திருமகளும் வழிபட்ட தலமாகும். கோரக்கச் சித்தர் வழிபட்ட சிறப்புடையது. மாணிக்கவாசகப்பெருமானும், திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு வழிபட வந்ததாகவும் கூறப்படுகிறது.

இரட்டை லிங்கங்கள் பிரதிஷ்டை செய்வதற்காக ஒரே சுற்றுச் சுவருடன் அருள்மிகு வரம் தரும் நாயகி சமேத ஸ்ரீசந்திர சேகரேந்திர சுவாமி என்ற பெயரில் ஒரு கோயிலும், அருள்மிகு சிவப்பிரியா சமேத தான் தோன்றீஸ்வரர் என்ற பெயரில் மற்றொரு கோயிலும் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பிள்ளையார், சுப்பிரமணியர், மஹாலட்சுமி தாயார், சண்டீகேஸ்வரர் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளுக்கு பக்தர்களின் உதவிகள் தேவைப்படுகின்றன.

ADVERTISEMENT

"சிவ புண்ணியத் தெளிவு' என்னும் சைவ உப ஆகம நூல், பாழடைந்துள்ள கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பிக்க உதவி செய்பவர்கள் அடையும் அபரிமிதமான பலன்களை விவரித்துக் கூறுகிறது. இந்த இரட்டைச் சிவலிங்கத் திருப்பணி கைங்கர்யத்தில் ஈடுபட்டு இரட்டிப்பு பலன்களைப் பெறுவது சிவநேயச் செல்வர்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாகும். மேலும் விவரங்களுக்கு: 9840053289 / 8778500470.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT