வெள்ளிமணி

நம்பிக்கையை பாதுகாப்போம் !

20th Nov 2020 06:00 AM | - ஹாஜி.மு.முஹம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT

 

அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி நடக்கக்கூடியவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ளவேண்டுமே தவிர, மார்க்கத்தைக் குறைகூறிக் கொண்டிருப்பவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது.
அல்லாஹ் குர்ஆனில் எச்சரித்துக் கூறுகிறான்:
(நபியே) நம் வசனங்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர்  கண்டால், அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டு ஒதுங்கிவிடும்.
சிலர் மார்க்க விஷயத்தில் விளையாட்டாக இறைச்சட்டங்களைக் குறித்து மாற்றுக்கருத்து கூறுகின்றனர்.  உதாரணமாக, "பொய் சொல்வது கூடாது' என்று அல்லாஹ்வின் கட்டளை இருக்க, “"பொய் பேசாமல் வாழ முடியுமா?'”என்று பேசுவதும், "வட்டியை அல்லாஹ் தடை செய்திருக்கும்போது, “வட்டிக்கு வாங்காமல் எப்படித் தொழில் செய்வது?'”என்றும் கூறுவது ஈமானை இழக்கச் செய்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர், தன் தவறுக்கு பிறரைக் குறை கூறி நியாயப்படுத்துவது: அதாவது, "யார்தான் பொய் சொல்லவில்லை! யார்தான் புறம் பேசவில்லை! யார்தான் யோக்கியமாக இருக்கிறார்கள்?'”
இத்தகைய பேச்சுக்களைப் பேசுபவர்கள் இறைவனிடம் கடும் தண்டனைக்கு ஆளாகுவர்.  ஏனெனில், "யார்தான்?' என்று கேட்பதில் நல்லோர்களும் அடங்கிவிடுகின்றனர்.  உண்மை மட்டுமே பேசுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்; புறம், கோள், முகஸ்துதி, நேர்மையான சம்பாத்தியம், வட்டியின் பக்கம் செல்லாதவர்கள், லஞ்சம் வாங்காதவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். தன்னுடைய தவறுகளுக்கு ஊர் உலகத்தையே அழைத்து எல்லோரையும் பாவம் புரிபவர்கள் என்று சொல்வதற்கு இவர்கள் என்ன மற்றவர்களின் அந்தரங்கத்தை அறிந்தவர்களா என்ன?
அல்லாஹ் குர்னில் கூறியுள்ளான் :
எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயற்சிக்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள். -சூரா ஸபஉ: 38  
மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளாகும்.  இதில் மாற்றுக் கருத்துச் சொல்லவோ, கட்டளையை மாற்றியமைப்பதற்கோ யாருக்கும் உரிமைத் தரப்படவில்லை.
"தொழுகைக்குச் சென்றால் கடையை யார் பார்ப்பார்கள்?' என்பது இறைமறுப்பாகும். இந்த சொல் வாயிலிருந்து வந்துவிட்டால், நம்பிக்கை (ஈமான்) உள்ளத்தை விட்டு வெறியேறிவிடும் என்பது திண்ணம். 
இறை நம்பிக்கைக்கு எதிராகப் பேசும் இத்தகையவர்களுடன் சகவாசம், நட்புறவு வைப்பது மிகத் தீங்கானது.  அப்படி யாராவது இறைக்கட்டளையை கேலி செய்தோ, விளையாட்டாகவோ பேசினால் கண்டிக்க வேண்டும்.  நம்முடைய பிரியத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார்கள் என்று கரிசனம் காட்டாமல் கண்டிக்க வேண்டும்.  அவர்களுக்கு அறிவுரை கூறி இத்தகைய தவறிலிருந்து மீட்க வேண்டும்.  இது நம்பிக்கையின் அடையாளமாகும்.    

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT