வெள்ளிமணி

கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட குமரக்கோட்டம்

20th Nov 2020 06:00 AM | -சி.வ.சு. ஜெகஜோதி

ADVERTISEMENT


அருளாளர்கள் பலர் வாழ்ந்தும், வழிபட்டும், பாடியும் பெருமை சேர்த்த காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரநாத சுவாமி கோயிலுக்கும் இடையில் நகரின் மையப்பகுதியில் ராஜவீதியில் அமைந்துள்ளது குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 

முருகப்பெருமானின் அரிய தோற்றம்: படைப்புத்தொழிலை மேற்கொண்டிருந்த பிரம்மாவை தலையில் குட்டி சிறையிலிட்ட பின்பு படைப்புத் தொழிலை முருகப் பெருமானே மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் வெளிப்பாடாக இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் பிரம்மாவை நினைவு படுத்தும் வகையில் படைப்புக்கோல மூர்த்தியாக, பிரம்ம சாஸ்தாவாகவே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் உடையவராக, பிரம்மச்சாரியாக காட்சியளிக்கிறார். உயர்த்திய வலக்கரத்தில் ருத்திராட்ச மாலையும், அதற்கு இணையான இடக்கரத்தில் கமண்டலமும் உள்ளன. மற்றொரு வலக்கரம் பக்தர்களுக்கு அருள் தருவது போன்றும், அதற்கு இணையான இடக்கரம் தொடையின் மீதும் உள்ளது. மான்தோல் உடுத்தியும், அரைஞாண் கயிறு அணிந்தும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். 

கந்த புராணம் தோன்றிய வரலாறு: இக்கோயிலில் உள்ள முருகப்பெருமானை தினசரி வழிபட்டு வந்தவர்களில் ஒருவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவரது கனவில் முருகன் தோன்றி "தம் வரலாற்றை நற்றமிழில் பாடுக!' என்று பணித்தார். கச்சியப்பரோ "என்னால் எப்படி முடியும்?' என்று கேட்டார். அப்போது முருகப்பெருமான் ஆறுமுகமாகக்காட்சியளித்து "திகடச் சக்கர செம்முகம்' என்று முதலடி எடுத்துக் கொடுத்து பாடுமாறு அருள்புரிந்தார். அவர் கொடுத்த தொடக்கத்துடன் கச்சியப்பர் கந்த புராணம் எழுதத் தொடங்கினார். 
முருகனின் வரலாற்றை ஒரு நாளைக்கு 100 பாடல்கள் என்று எழுதி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்லும் போது, எழுதியவற்றை முருகனின் திருவடிகளிலையே வைத்து விட்டுச் செல்வாராம். மறுநாள் வந்து அந்த ஏட்டுச் சுவடிகளை எடுத்துப் பார்த்தால் அதில் ஏற்ற, இறக்கங்களும், பிழைத் திருத்தங்களும் செய்யப்பட்டிருந்தது. எழுதுவதற்கு முதலடி எடுத்துக் கொடுத்தது மட்டுமின்றி தொடர்ந்து உடனிருந்து திருத்தியும் வழங்கிய கந்தனின் அருளால் கந்தபுராணம் நிறைவு பெற்றது.

அரங்கேற்றம் ஓர் அற்புத நிகழ்வு: அக்கால மரபுப்படி தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்கள் முன்பாக குமரகோட்டம் முருகன் கோயிலிலேயே கந்த புராண அரங்கேற்றம் நிகழ்ந்தது. 

ADVERTISEMENT

முருகன் அடி எடுத்துக் கொடுத்த முதல் பாடலான "திகடச் சக்கர செம்முகம்' எனும் முதல் தொடரிலேயே புலவர் ஒருவர் இலக்கணப்பிழை இருப்பதாக தெரிவித்தார். ""இது செந்தமிழ் முருகனே தந்த தொடர். எனவே அவரே நாளை கூடவிருக்கும் அவையில் விளக்கம் தருவார்'' என்றார். சபையும் கலைந்து மறுநாள் கூடியது. 

அப்போது அச்சபைக்கு புலவர் வடிவில் வந்திருந்த முருகப் பெருமான் ""நீங்கள் கேட்ட இலக்கணப் பிழைக்கு வீரசோழியத்தில் விளக்கம் இருக்கிறது. "திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்ற தொடருக்கு பத்து கரங்களும், ஐந்து திருமுகங்களும் உடைய சிவபெருமான் என்று பொருள். திகழ் + தசம் எனும் இரு சொற்கள் சேர்ந்து திகடசம் என்று மாற்றம் பெற்றதற்கு உரிய இலக்கண விதி வீரசோழியம் எனும் இலக்கண நூலில் 18-ஆம் பாடலில் இருக்கிறது'' என்றார் அந்தப்புலவர். 

அனைவரும் வியந்து மகிழ்ந்தனர். புலவராக வந்த முருகனோ தமிழறிஞர்கள் அனைவரையும் நோக்கி ""ஐயம் நீங்கிற்றா?'' என்று கூறியவாறே மறைந்தார். 

இவ்வாறு அரங்கேற்றப்பட்ட பெருமைக்குரிய கந்த புராணம் 10,345 விருத்தப் பாடல்களும், 6 காண்டங்களையும் உடையது. இந்நூல் அரங்கேற்றத்தின் போது புலவர்க்கு எழுந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்த நிகழ்வு நடைபெற்ற மண்டபம் இன்றும் கோயிலின் வெளிச்சுற்றில் பொலிவுடன் காட்சியளிக்கிறது.  

மழை நின்ற அற்புதம்: கச்சியப்ப சிவாச்சாரியாரின் மாணவராக இருந்தவர் குகனேரியப்பர். இவர் கந்தபுராணத்தின் ஏழாம் பகுதியான உபதேச காண்டத்தைப் பாடியவர். இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் போது பெருமழை பெய்து வீதியுலா தடைப்பட்டது. அப்போது அவர் இந்திரனை நோக்கிப் பாட மழை நின்ற அற்புதம் நிகழ்ந்தது. அதைக்கண்டு அதிசயித்த பக்தர்கள் தொடர்ந்து முருகனின் வீதியுலாவைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். அருணகிரிநாதர், மாதவச் சிவஞான முனிவர், சோணாச்சல பாரதியார், கவி காளமேகப்புலவர் ஆகியோரும் குமரக்கோட்டத்து முருகனைப் போற்றிப் பாடியுள்ளனர். 

கோயிலுக்கு வழிகாட்டிய முருகனின் திருவிளையாடலை பாம்பன் சுவாமிகள் எழுதிய "குமாரகாவியம்' நூலில் "வருகை விழைந்து இரங்கல்' என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

திருவிழாக்கள்: கந்த சஷ்டித் திருவிழா நடைபெறும் 6 நாள்களிலும் சூரசம்ஹாரப் புராண வரலாற்றை நினைவுபடுத்தும் திருக்கோலத்துடன் வீதியுலா நடைபெறுவது சிறப்பு. 

ஆறாம் நாளன்று (நவம்பர் - 20) சூரசம்ஹார நிகழ்ச்சியை நாடகமாகவே நடத்திக் காட்டி சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை திருவிழாக்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. தினசரி தேனாபிஷேகமும், ஆண்டு தோறும் தீபாவளித் திருநாளில் மட்டும் முருகனுக்கு எண்ணெய் அபிஷேகமும் நடைபெறுகிறது. 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT