வெள்ளிமணி

குருபகவானை இதர கிரகங்கள் பார்த்தால்...

20th Nov 2020 06:00 AM | -ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்

ADVERTISEMENT

 

"குரு பார்க்க கோடி பாவ நிவர்த்தி' என்பதை அறிவோம். எந்த ஒரு கிரகத்தையும் ஜனன காலத்தில் குரு பகவான் பார்த்தால் அந்த தசா, புக்தி அந்தரங்கள் நன்றாக அமையும் என்றும் கூறுகிறோம். அதேபோல் குருபகவானை இதர கிரகங்கள் பார்த்திடின் என்ன பலன்கள் உண்டாகும் என்பதை தற்சமயம் காண்போம்:

குரு பகவான் மேஷ, விருச்சிக ராசிகளில் அமர்ந்திருந்து... 

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் தர்ம சிந்தனை உடையவர், பொய் பேசமாட்டார், நல்ல புத்திரர்கள் அமைவார்கள், அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார் என்றும் கூற வேண்டும். சந்திர பகவான் பார்த்தால், கவிஞர், சரித்திர ஆராய்ச்சியும் செய்வார். பல நாடுகளில் இவருடைய செல்வாக்கு பரவும். 

ADVERTISEMENT

செவ்வாய் பகவான் பார்த்தால், அரசாங்க உத்தியோகம், வெளியில் நல்ல செல்வாக்கு உண்டு. அதேநேரம் வாழ்க்கை துணையும், பெற்ற பிள்ளைகளும் அனுசரித்து நடக்க மாட்டார்கள். புத பகவான் பார்த்தால் மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட்டு தன் பெயரைக் கெடுத்துக் கொள்வார். பலருடைய வயிற்றெரிச்சலுக்கு ஆளாவார்கள். 

சுக்கிர பகவான் பார்த்தால், நல்ல ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பங்களா போன்ற வீட்டில் வசிக்கும் யோகம் உண்டு. சனி பகவான் பார்த்தால், எந்தக் காரியத்தையும் முன்யோசனை செய்யாமல் செய்துவிடுவார். சில விஷயங்களில் நூற்றுக்கு நூறு வெற்றியும், சில விஷயங்களில் நூற்றுக்கு நூறு படுதோல்வியும் கிடைக்கும். மற்றபடி புத்திரபாக்கியம் நிரம்ப உண்டாகும்.

குரு பகவான் ரிஷப, துலாம் ராசிகளில் அமர்ந்திருந்து... 

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் பெரிய குடும்பம், சொத்து நிறைய இருக்கும், ஏராளமான கால்நடைகள் உண்டு. தோற்றத்தில் நல்ல உயரமானவர். சிலர் மந்திரிகளாவும் திகழ்கின்றனர். சந்திர பகவான் பார்த்தால், பார்வைக்கு நல்ல அழகுடன் விளங்குவார். இதனால் மறுபாலரின் நட்பு நிறைய ஏற்படும். பெற்றோரை கடைசிவரை காப்பாற்றுவார். சொந்த முயற்சியால் ஏராளமான சொத்துகளைச் சேர்ப்பார். 

செவ்வாய் பகவான் பார்த்தால், அரசாங்க உத்தியோகம் வாய்க்கும். வாழ்க்கைத் துணை பேரழகர் / பேரழகியாக அமைவார். மனைவியின் சொத்தில் ஒரு பகுதி இவருக்கு கிடைக்கும். புத பகவான் பார்த்தால் நல்ல படிப்பும் பேச்சில் நளினமும் உண்டாகும். எல்லோரையும் வசியப் படுத்துவார். நிறைய நூல்கள் எழுதுவார்கள். 

சுக்கிர பகவான் பார்த்தால், ஆடை அலங்காரப் பிரியர், ஒரு நாளைக்கு ஒரு ஆடை அணிவார்.சினிமா, சங்கீதத்தில் பெரும் ஈடுபாடுடையவர்.  சனி பகவான் பார்த்தால், பெரிய விவசாயக் குடும்பம். உழைப்பால் நிறைய பொருள் சம்பாதிப்பார். வாய்க்கும் வாழ்க்கைத் துணை மகா உத்தமர் / உத்தமி. நிறைய குழந்தைகள் பிறக்கும். 

குரு பகவான் மிதுன, கன்னி ராசிகளில் அமர்ந்திருந்து...

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் சமூகத்தில் நல்ல பேரும், புகழும் ஏற்படுகிறது. எந்த விவகாரத்திலும் இவர் தலையிட்டு முடிவு செய்தால் மக்கள் மறுப்பேதுமின்றி இவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள். சந்திர பகவான் பார்த்தால், படிப்பு நிறைய உண்டு. தாயை தெய்வமாகக் கொண்டாடுவார். வாழ்க்கைத் துணையும் நல்ல குணம் படைத்தவராக இருப்பார். 

செவ்வாய் பகவான் பார்த்தால், அரசாங்க மரியாதை ஏற்படும். தன் சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைந்தவராக இருப்பார். புத பகவான் பார்த்தால், சகல கலா பண்டிதர், ஜோதிட ஆராய்ச்சி நிறைய உண்டு. 

சுக்கிர பகவான் பார்த்தால், கோயில் பூசாரியாகவோ, மதத் தலைவராகவோ இருப்பார். ஆனால் இவரின் நடத்தை சில நேரங்களில் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். சனி பகவான் பார்த்தால்,  மகா கெட்டிக்காரர். வாழ்வில் நல்ல மேலான ஓரிடத்தைக் கைப்பற்றுவார்.  எப்பொழுதும் நல்லவனாக இருக்க இயலாது. இவர் வெற்றி பெறுவதற்கு பஞ்ச தந்திர முறையைக் கையாள்வார். 

குரு பகவான் கடக ராசியில் அமர்ந்திருந்து...

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் ஆரம்ப வாழ்க்கை அவ்வளவாகச் சுகப்படுவதில்லை. குருபகவான் அந்த வீட்டில் உச்சம் பெறுவதால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நிறைய பொருள்கள் சேர்த்து (வண்டி, வாகனங்கள் உள்பட) குடும்பம் நடத்துவார். சந்திர பகவான் பார்த்தால், நிறைய நன்றாகப் படிப்பார்கள். வாழ்க்கைத் துணையும் நன்றாகப் படித்தவராகவும், சம உத்தியோகம் பார்ப்பவராகவும் அமைவார். 

செவ்வாய் பகவான் பார்த்தால், சிறுவயதிலேயே திருமணம் நடந்தேறிவிடும். உடலில் ஏதோ ஒரு காயம் உண்டாகும். புத பகவான் பார்த்தால் அமையும் வாழ்க்கைத் துணை நல்ல சொத்து, சுதந்திரம் உடையவராக இருப்பார். அந்தச் சொத்தில் பெரும் பகுதியும் இவருக்கு கிடைக்கும். ஆனால் எதிரிகள் நிறைய இருப்பார்கள். சதா வழக்கு நீதிமன்றத்திலேயே இருப்பார்கள். 

சுக்கிர பகவான் பார்த்தால், சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெற்றுவிடுகிறது. நிறைய சம்பாதிக்கும் திறமையும் உண்டு. சனி பகவான் பார்த்தால் காவல்துறை அல்லது ராணுவத்தில் பெரிய அதிகாரியாவார். 

குரு பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருந்து... 

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் பெயரும், புகழும் ஏற்படும். அரசியலில் உச்சநிலை கிடைக்கும். சந்திர பகவான் பார்த்தால், நிறைய பொருள் சம்பாதிக்கும் திறனுண்டு. மனைவியும் வீண் செலவு செய்யாமல் பணத்தை மீதப்படுத்தக் கூடியவராக இருப்பார். 

செவ்வாய் பகவான் பார்த்தால், வீரமுடையவர். பொது வாழ்வில் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழிப்பார். புத பகவான் பார்த்தால் கணிதமேதை. நல்ல படிப்பு உண்டு. 

சுக்கிர பகவான் பார்த்தால் அரசாங்க உத்தியோகஸ்தர், "நாணயஸ்தர்' என்ற நல்ல பெயரும் ஏற்படும். சனி பகவான் பார்த்தால் சித்திரம் வரைவதில் நிபுணர். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார். கடல் கடந்து வெளிநாட்டிற்கும் சென்று வருவார். 

குரு பகவான் தனுசு, மீன ராசிகளில் அமர்ந்திருந்து...

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் பெரிய மனிதர்களின் பகை உண்டாகும். இதனால் பண விரயம் நிறைய ஏற்படும். சந்திர பகவான் பார்த்தால் பெரிய பணக்காரர். சுற்றத்தாருக்கும், தன்னை அண்டியுள்ளவர்களுக்கும் மனம் கோணாமல் பண உதவி புரிவார். 

செவ்வாய் பகவான் பார்த்தால், யுத்த களத்தில் நின்று போரிட்டதால் ஏதாவது அங்கஹீனம் ஏற்பட்டிருக்கும். எதிரிகளை துவம்சம் செய்வார். புத பகவான் பார்த்தால், அரச போகமும் அறுசுவை உண்டியும் ஏற்படும். பணமுடை என்றால் என்னவென்று தெரியாதவராக இருப்பார். 

சுக்கிர பகவான் பார்த்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் சிலருக்கு உண்டாகிறது. சனி பகவான் பார்த்தால், நிரந்தரமான உத்தியோகமில்லை; இவர் பார்க்காத உத்தியோகமும் இல்லை. இவர் செய்யாத தொழிலும் இல்லை. வாழ்க்கையில் கீழே விழுவதும் மீண்டும் தலை தூக்குவதுமாக அமையும். 

குரு பகவான் மகர, கும்ப ராசிகளில் அமர்ந்திருந்து...

சூரிய பகவானால் பார்க்கப்பட்டால் உலக அனுபவம் நிறைய உண்டு. எதையும் யூகித்து அறியும் சக்தி உண்டு. சந்திர பகவான் பார்த்தால் நிறைய சம்பாதித்து நிறைய தான தர்மம் செய்வார். 

செவ்வாய் பகவான் பார்த்தால் தளபதி, நாட்டைக் காப்பதற்காக எத்தகைய தியாகமும் செய்வார். புதன் பகவான் பார்த்தால் பெரிய வியாபாரி.வைரம், வைடூரியம், பவளம், நீலம் போன்ற உயர் ரகக் கற்களை வியாபாரம் செய்வார். 
சுக்கிர பகவான் பார்த்தால் ஆகாரத்தில் பிரியம் உள்ளவர். வாசனை திரவியங்களையும், போக வஸ்துகளையும் உபயோகிப்பார். அதேநேரம் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார். சனிபகவான் பார்த்தால் அரசாங்கத்தில் நிரந்தரமான உத்தியோகம் அமையும். பட்டமும், பதக்கமும் பெறக் கூடியவர்.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT