வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 120

20th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT


மழை, வெள்ளம், நோய் ஆகியவற்றால் 1811-ஆம் ஆண்டு அறுவடை சரியாக நடைபெறவில்லை. மக்கள் பஞ்சத்தில் தவித்தனர். வரிகள் கேட்கவேண்டாமென்று  அரசாங்கம் கலெக்டருக்கு அறிவுறுத்தியது. 

உயர்மட்ட மருத்துவக் குழுவானது, ஒருசில பரிந்துரைகளைக் கூறியது. மக்கள் முறையாகக் காலணிகள் அணியாதது, கட்டில்கள் இல்லாமல் தரையில் படுத்துறங்கியது, சரியான போர்வைகளால் போர்த்திக்கொள்ளாதது ஆகியவையே நோயின் தீவிரத்திற்குக் காரணம் என்றும் உரைத்தது. தோல் காலணிகள், கம்பளிப் போர்வை, மெத்தையுடனான கட்டில் ஆகியவற்றைப் பயன்படுத்தும்படி மக்கள் கோரப்பட்டனர். மோர், கள், குளிர் காய்கறிகள்ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டனர். குளிர் நீரில் நீராடவேண்டாம் என்றும் பனியும் குளிரும் மங்கும் வரை பணிக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். அரிசிச் சோறு, உலர் தானியங்கள்ஆகியவையே பாதுகாப்பான உணவு என்றும் கூறப்பட்டது. 

இருப்பதற்கு வீடே இல்லாதவர்களுக்கு மேற்கூறிய பரிந்துரைகள் என்ன செய்யமுடியும்? வேப்பிலையும், சின்கோனா மரப்பட்டைகளையும் கொண்ட கஷாயம் காய்ச்சி மக்கள் அருந்தியதாகத் தெரிகிறது. சின்கோனாபட்டைகள் குறித்து டாக்டர் ஐன்ஸ்லீ நிறைய ஆய்வுகள் செய்தார். நெல்லைப் பகுதி மக்கள் இந்தப் பட்டைகளைப் பயன்படுத்தியதைக் கண்ட பின்னர்தான், இத்தகைய ஆய்வில் இவர் ஈடுபட்டார் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. 

1814-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மிகப் பெரும் சூறாவளி ஒன்று காயல், தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது. கடற்கரை கிராமங்கள் பல அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன. படகுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டதாக அப்போதைய கலெக்டர் ஜேம்ஸ் ஹெப்பர்ன் அறிக்கை அனுப்பினார். வணிகர்களுக்குத்தான் பெருத்த நஷ்டம். உப்பளங்களும் உப்பும் காணாமலே போயின. அப்போதும் கொள்ளை நோய் தாக்கியது. உப்பு வாங்குவதற்காக வந்தவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள், வேறெந்த ஊரிலிருந்து வந்தவர்களையும் தங்களின் கிராமங்களில் தங்க வைக்க அனுமதி மறுத்தனர். 

ADVERTISEMENT

1850-களில் மழை பொய்த்துப் போக, நெல்லை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, ராமநாதபுரம் பகுதிகள் பஞ்சத்துக்கு உள்ளாயின. தென் பகுதி தலைமைக் கலெக்டர் பிளாக்பர்ன், ஆயத்தீர்வையைக் குறைத்து, சாலை அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தி, மக்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்தினார். சாலை மற்றும் குள மராமத்துப் பணிகளில் மக்கள் அதிக அளவில் பயன்கொள்ளப்பட வேண்டுமென்றும், கூலி தாராளமாக இருக்க வேண்டுமென்றும் அரசாங்கம் ஆணையிட்டது. 

பலருக்கும் நன்மை தந்த நாயகி தன்னுடைய படுகையின் தாமிர வளத்தால், இவள் "தாமிரவருணி' என்று பெயர் பெற்றாள். பண்டையப் பதிவுகளில், இலங்கைக்குத் "தாம்பபன்னி', "தம்ரோபன்னே' போன்ற பெயர்கள் காணப்படுவதையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். இதைக் கொண்டு, இலங்கையில் இந்தப் பெயரில் நதியொன்று பாய்ந்தது, அதன் கரையில் வாழ்ந்தவர்கள் இயற்கைச் சீற்றத்தால் இடம் பெயர்ந்தபோது இந்தியத் தென்பகுதிகளுக்கு வந்தனர், வந்த நிலையில் தங்கள் பகுதியின் பெயரை இங்கேயும் சூட்டினர், எனவே திருநெல்வேலிப் பகுதியின் ஆற்றுக்குத் "தாமிரவருணி' என்னும் பெயர் தோன்றியது என்று தொடக்ககால ஆய்வாளர்கள் சிலர் அவசரப்பட்டுக் கூறினர். ஆயின், நிலவியல் ஆய்வுகள், இப்போது தெளிவைத் தந்துள்ளன. 

மிகப் பழங்காலத்தில், இப்போதைய தென் இந்திய நிலப்பகுதியும், இப்போதைய இலங்கை நிலப்பகுதியும், கடலால் பிரிக்கப்படாமல், நிலத்தால் ஒன்றிணைந்திருந்தன. மிகப் பெரியவளாகப் பாய்ந்து கொண்டிருந்த பொருநையாளின் கிளை நதிகளும் நீரோட்டங்களும், இப்போது இலங்கை என்று வழங்கப்படுகிற நிலப்பகுதி வரை ஓடியுள்ளன. இதனால், தாமிரவருணி என்னும் பெயர் அங்கும் பரவியுள்ளது. இந்தப் பெயரே தாம்பபன்னி, தம்ரோபன்னே போன்ற பெயர்களாக மருவியுள்ளது. நிலத்திட்டு நகர்வுகளால் கடல் இடை புகுந்து, இரண்டு நிலப்பரப்புகளும் வேறு வேறு ஆன பின்னரும், பெயர்கள் நின்றுவிட்டன. 

தாமிர வளத்தால் மட்டுமா பொருநையாளின் நீர் சிவந்தது? தேசப் போராட்ட காலத்தில், எத்தனை வீரர்களின் குருதி இவளோடு கலந்திருக்கும்! வேளாண்மையையும் நாகரிகத்தையும் வளர்த்தது போன்றே, தேசியச் சிந்தனையையும் சுதந்திர வாஞ்சையையும் வளர்த்தவள் இவள்..! 

(தொடரும்)

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT