வெள்ளிமணி

குரு பகவானின் பார்வையும் கேது பகவானின் மேன்மையும்!

13th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

"குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி' என்பது சாஸ்திர சம்பிரதாய அனுபவ சித்தாந்தமாகும். குரு பகவான் தன் தசையில் நன்மையைச் செய்யாவிட்டாலும், எந்தக் கிரகத்தைப் பார்க்கிறாரோ அந்த கிரகத்தின் தசையில் பல நன்மைகள் செயல்படும்.

ராகு, கேது, சனி பகவான்களை ஜனன காலத்தில் குரு பகவான் பார்த்திராவிட்டால், அவர்கள் தசையின் முற்பகுதி சுகப்படாவிட்டாலும், பிற்பகுதியில் பிரபல யோக பலன்களைச் செய்கின்றனர். கிரகங்கள் நீச்சம் பெற்றோ அல்லது பகை பெற்றிருந்தாலும், குரு பகவானின் பார்வை ஒன்று போதும்; நல்ல பலன்களே நடைபெறும். ஆட்சி உச்சம் பெற்றுள்ள கிரகங்கள் செய்யும் நற்பலன்களைக் காட்டிலும், குரு பகவானின் பார்வையிலுள்ள கிரகம் உன்னத நன்மைகளைச் செய்யும் என்பதில் ஐயமில்லை. 

பிரகஸ்பதியான குரு பகவான் நவ கிரகங்களுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். அவர் பார்வையினால் ஆன்ம கோடிகள் ஆயுள் நலம் அதிகம் பெறுகின்றனர். சனி பகவான் ஆயுள் காரகர் என்பது உண்மை. அந்த சனி பகவானை ஜனன காலத்தில் குரு பகவான் பார்த்திருந்தால் இன்னும் தீர்க்காயுள். மற்ற எந்த கிரகத்துக்கும் ஆயுளை நீட்டிக்கக் கூடிய வல்லமை கிடையாது.

ADVERTISEMENT

கேது பகவான் ஞான காரகர், மோட்ச காரகர். ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் ஆறாமிடத்திலும் கேது பகவான் பன்னிரண்டாமிடத்திலும் ஜனன காலத்தில் இருந்தால் மறு பிறவி இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிலர் கேது பகவான் என்றவுடன் பயப்படுகிறார்கள். ஸ்ரீ கணபதி, அதாவது முழுமுதற் கடவுள் என்று கூறப்படும் ஸ்ரீ விக்னேஸ்வர பெருமாள்தான் கேது பகவானின் அம்சம்.

கேது, செவ்வாய் பகவான்கள் இணைந்து ஐந்தாமிடத்திலிருந்தால் பிரபல ஞானியாவான் என்பது ஜோதிட விதி. ஸ்ரீ வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு மீன லக்னம். கேது, செவ்வாய் பகவான்கள் ஜனன காலத்தில் ஐந்தாமிடத்தில் சஞ்சரித்தனர். பிரபல யோகியானார் அடிகள்.

கேது பகவானின் நட்சத்திரங்கள்

அசுவினி -மகம் - மூலம்

அசுவினி அகங்காரம் - செவ்வாய் பகவான், மகம் - மமகாரம் - சூரிய பகவான், மூலம் - மூலப் பொருள் - கடவுள் (குரு பகவான்) அகங்காரத்தை விட்டொழித்து, சூரிய கலையில் தியானித்து வந்தால், மூலப் பொருளாகிய கடவுளை அடையலாமென்பது உட்பொருள். எனவேதான், கேது பகவானுக்கு "ஞான காரகர்' என்ற காரணப் பெயர் வந்துள்ளது.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT